(Reading time: 2 - 4 minutes)

பாவ மன்னிப்பு - கிருஷ்ண பாபு

Confession

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், எனக்கு மத நம்பிக்கை கிடையாது. ஆனாலும் மனது உறுத்தியதால் வந்தேன்.'

பாவ மன்னிப்பு கூண்டில் இருந்த உருவம் தெரியாவிட்டாலும் குரலின் நடுக்கம் அவரது வயதை ஃபாதருக்கு தெரிவித்தது.

'பரவாயில்லை ஐயா, கர்த்தர் நம் அறியாத் தவறுகளை எப்போதும் மன்னிப்பார்! சொல்லுங்கள்!'

'கடைசிப் பிள்ளை என்றால் எனக்கு உயிர்..துறுதுறு என இருப்பான்..படிப்பிலும் படுசுட்டி.. மூத்த பிள்ளைகள் வாயில்லா பூச்சிகள். ஆனால் கடும் உழைப்பாளிகள். அனைவரும் சேர்ந்து இவனை மேலும் மேலும் படிக்க வைத்தோம்.'

கொட்டாவியை கஷ்டப்பட்டு அடக்கினார் ஃபாதர்.

'ம்...'

'படிச்சு நெடுநெடுனு வளர்ந்தவன் இப்ப அத்தனை சொத்தும் வீடும் அவனுதுதான்னு சொந்தம் கொண்டாடுகிறான்… என்னை விடுங்கள், நான் கிழவன்… என் மற்ற பிள்ளைகள் அனைவரையும் கொடுமைப்படுத்துகிறான்!'

வக்கீல் ஆபிஸ்னு நெனச்சு பேசுறாரோ என்ற சந்தேகம் ஃபாதருக்கு. இருந்தாலும் அறிவுரை ஒன்றை உதிர்த்தார்.

'கவலைப்படாதீர்கள் ஐயா! கர்த்தர் நல்ல மேய்ப்பர். அவர் உங்கள் மகனை திருத்துவார்!'

'அவசியமில்லை அதற்கு! அந்த நம்பிக்கை இனி எனக்கில்லை! அதனால்…'

இடைவெளி விட்டு பெருமூச்சுவிட்டார்.

'அதனால்…?'

'அதனால்…என் மகனை நானே கொல்லப் போகிறேன்.'

திடுக்கிட்டார் ஃபாதர்.

'தவறான முடிவு…பாவங்கள் நம்மை என்றும் சுத்தப்படுத்துவதில்லை!'

'இல்லை, முடிவு பண்ணிவிட்டேன்..அதோடு அவன் இல்லா உலகில் எனக்கும் இடமில்லை! அதனால் நானும் அவன் செல்லும் இடத்திற்கே…! என் ஒரே கவலை, மற்ற பிள்ளைகளும் இதனால் பாதிக்கப்படுவார்களே என்றுதான்!'

சொல்லிவிட்டு விடுவிடுவென வெளியேறினார் பெரியவர்.

'நாளை காலையில் ஸ்டேஷனில் இதை சொல்ல வேண்டும்' வருத்தத்துடன் கிளம்பினார் ஃபாதர்.

றுநாள்…

மூன்றாம் உலகப்போர் தொடங்கியது.

ஃபாதருக்கு ஏதோ புரிந்தது.

பெரியவராக வந்தது யார்?

'பரமபிதாவே,உம் முடிவு சரிதான்! எங்கள் அனைவரையும் உங்களுள் சேர்த்துக் கொள்ளும்!'

வான் நோக்கி கைகூப்பி தழுதழுத்தார்.

காற்றில் விஷம் பரவத் தொடங்கியது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.