(Reading time: 11 - 22 minutes)

வெளியேறு - ப்ரீத்தி

Mom and Daughter

“ச்சே ஒரு மிருகத்துக்கு இருக்கும் சுதந்திரம் கூட எனக்கு இந்த வீட்டுல இல்லை” என்று சாப்பிட்டுக்கொண்டு இருந்த தட்டை தள்ளிவிட்டுவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து சென்றாள் வினோ எனும் வினோதினி.

பரிமாறிக்கொண்டிருந்த மலரின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை, கல் போல இறுகியதை தவிர, அந்த கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்று அறிந்த ஒருவர் மட்டும் அருகே இருந்தார்... திருமணம் ஆகி 20 வருடங்களாக வாய்விட்டு கூறாமலேயே புரிந்துக்கொண்ட பதிவிருதம் இருக்கும் கோபால். மனைவியின் கையை ஆறுதலாக பற்றிக்கொண்டார்.

ஆனால் மலருக்கு தேவைப்பட்டது அதுவல்லவே, கொஞ்சம் தனிமை தற்போதைய தனிமை. மெதுவாக கையை விலக்கிவிட்டு சின்ன முறுவல் கணவனிடம் தந்துவிட்டு தோட்டப்பக்கம் சென்றாள். மதிய வெயில் மண்டையை பிளக்காமல் வளர்க்கப்பட்ட மரங்கள் எல்லாம் அவளை பாதுகாக்க, செல்லமாக கொஞ்சி வளர்த்த பூந்தொட்டியோடு அமர்ந்தாள். என்னவோ பெரிதாக அவள் கூற போகும் கதையை கேட்க போவதுப் போல அவள் புறம் திரும்பி காற்றோடு இசைந்தாடியது.

காற்றில் இலைகள் உரசும் சத்தமும், வெளியே செல்லும் வாகனங்களின் சத்தமும் மெல்ல மெல்ல மறைய ஞாபகம் அவளது இளமை பருவத்துக்கு சென்றது. “என் கண்ணு என் செல்லம் எம்புட்டு மார்க் வாங்கிருக்க, இந்தா இதை கொஞ்சம் சாப்பிடு” என்று அள்ளி அள்ளி பலகாரத்தை தந்தார் வள்ளி நாச்சியார். பெரிய குடும்பம் என்ன படிப்பறிவு தான் கொஞ்சம் குறைவு, மற்றது எதுவும் பஞ்சமில்லை, பணம், குணம், பணத்திற்கான மிடுக்கு, எல்லாம்... “என்னங்க... என்ன நீங்க புள்ள பத்தாவது பரிட்சைல மொத மார்க் வாங்கிருக்கு நீங்க என்னன்னா புஸ்தகத்த பார்த்துகிட்டு இருக்கீங்க” என்று செல்லப்ப செட்டியாரை கோவித்துகொண்டார் வள்ளி.

“நீ வேற வள்ளி, புள்ள அடுத்து படிக்க வேண்டிய பள்ளிக்கூடம் தேட வேணாமா இவ்வளவு மார்க் வாங்கிருக்கு, நம்ம ஊருலயே படுச்சா பன்னண்டாவது கொரஞ்சுராது...” என்றார் கொஞ்சம் தற்பெருமையோடு.

“அதுவு சரிதான்...” என்று ஊட்டிவிடுவதை பாதியில் விட்டுவிட்டு அவரும் சேர்ந்து தேட சென்றுவிட்டார். அவ்வளவு தான் மலரின் மதிப்பெண் கொண்டாட்டம். இதோ என்பதற்குள் முடிந்து அடுத்த நடவடிக்கை எடுக்க துவங்கிவிட்டனர். அவர்களுக்கு தான் பெறாத கல்வி, பிள்ளையை சேர ஆசை தேடி தேடி கண்டுபிடித்தனர் ஒரு சிறந்த பள்ளிக்கூடம் 6 ஊரை அடுத்து...

இரண்டு வருடங்கள் அந்த பள்ளியென்னும் சிறையில், வெளியே செல்லாமல் தூக்கம் இல்லாமல், பிடித்த சாப்பாடு இல்லாமல், நினைத்த நேரத்திற்கு வீட்டிற்கு பேச முடியாமல், வருடத்திற்கு ஒன்று இரண்டு முறை பெற்றவர்கள் வந்து பார்த்துவிட்டு செல்ல கண்டிப்பான சூழலில் படித்தாள் மலர்.

போராட்டமெல்லாம் ஒருவழியாக வெற்றிபெற, பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்து கொண்டாட்டத்தோடு வீடு வந்து சேர்ந்தனர். அவ்வளவு தான் பள்ளி முடிந்தது ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம் இனி எங்கும் போக தேவையில்லை என்ற ஆசை எண்ணத்தோடு வந்து சேர்ந்தாள். பட்ட கஷ்டமெல்லாம் காணாமல் போன உணர்வு அவளுக்கு...

2 மாதம் நல்ல உபசரிப்பு, “என்ன பாப்பா இவ்வளவு தான் சாப்பிடுற, ஒழுங்கா சாப்பிடு இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்” என்று வைத்து வைத்து கவனித்தனர்.

திடிரென்று ஒருநாள் வாட்டசாட்டமான உறவினர் ஒருவர் வந்தார், கன்னி வயது கண்டதை நினைத்து பயப்பட, மறுக்கும் வண்ணம் படிப்பை பற்றி தான் பேச்சுப் போனது. நிம்மதியாக பெருமூச்சு விடுவதற்குள் அடுத்து குண்டு விழுந்தது அவளுக்கு.

“என்ன அண்ணே நீங்க, நம்ம ஊருல சேத்து புள்ளைய மக்காக்கிடாதீங்க... நம்ம ஊரு கல்லூரில என்னத்த சொல்லி தரானுங்க... பட்டணத்துக்கு அனுப்பிவையூங்க... நானும் அந்த ஊருல தானே இருக்கே, வாராவாரம் போய் பார்த்துட்டு வரே, புள்ளையும் நம்ம வீட்டுக்கு வரட்டும் தனியா இருக்க மாதிரி இருக்காது” என்று ஏதேதோ கூற, மனம் மாறிப்போனது செட்டியாருக்கு.

அவ்வளவு தான் பெட்டியெல்லாம் தயாராகிவிட்டது... பணமெல்லாம் கல்லூரியில் கட்டியாயிற்று...

மனம் சோர்ந்து போக அப்பாவிடம் பேசும் தயிரியம் அற்று அம்மாவிடம் பேசி இதை தடுக்க முயற்சித்து பார்த்தாள் மலர். “அம்மா...”

அவளுடைய துணிகளை அடிக்கியவண்ணம் இருந்தவர் அவளது குரலில் அவளை ஏறிட்டு தலை கோதி “என்ன கண்ணு?” என்று பாசமாக வினவினார்.

“அம்மா.. நான் பட்டணம் போகலம்மா இங்கேயே உன்கூடவே இருக்கேனே...”

“அப்படியெல்லாம் சொல்ல கூடாது கண்ணு... எம்புட்டு மதிப்பெண் வாங்கிருக்க...”

“என்ன படுச்சு என்ன இப்போ... என்ன மட்டும் வெளியே அனுப்பிட்டு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க... நான் மட்டும் தனியா போறேன்” என்று கொஞ்சம் கோவம் கலந்த கண்ணீரோடு கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.