(Reading time: 7 - 13 minutes)

சிறுகதை - என்னவளே... - 2 - அமுதா

Dove

இந்த கதை அமுதா முன்பு எழுதிய 'என்னவளே' சிறுகதையின் இன்னுமொரு பகுதி / கோணம். என்னவளே 1 படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

ந்தனா தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். சமூகம் என்பது என்ன...? அவசர அவசரமாக யாரோ ஒருவருடன் கல்யாணம், பின் அதே அவசரத்தில் குழந்தைகள் என்று சமூகம் தரும் அந்தஸ்துக்காக, தனக்காக வாழாமல் சமூகத்திற்காக வாழ்பவர் எத்தனை பேர்...?

கல்யாண விஷயத்தில் சமூகத்தின் தாக்கம், அவளை ஏதும் செய்ய முடியவில்லை. தன் குடும்பத்தில் உள்ளவர்களும், தான் நேசிப்பவர்களும் தன்னால் சிரமப் படக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே சிலநேரம் அவளை சூழ்நிலை கைதியாக்கிப் பார்த்தது.

கணவன் என்பவன் தாயாய், தந்தையாய், சகோதரனாய், நண்பனாய், குழந்தையாய் சில நேரம் அந்த கடவுளின் வடிவமாய்...அத்தனை உறவுகளின் ஒட்டு மொத்தப் படைப்பல்லவா...?

“உன் கண்ணில் நீர் வழிந்தால்,

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி....

...............................................................

ஆலம் விழுதினைப் போல்...

சொந்தம் ஆயிரம் வந்து என்ன...?

வேரென நீ இருந்தாய்...அதனால்

வீழ்ந்து விடாதிருந்தேன்...”

என்ற பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் வாழ்க்கையல்லவா அது…! அவளின் வாழ்க்கை பற்றிய சிந்தனையில், அந்த உறவுக்கான தேடல் உயிர் பெற்று வருண் என்ற பெயர் அவ்வப்போது நிழலாடும். உடனே ‘காலம் கடந்த நினைவுகள்’ என்ற முற்றுப் புள்ளியும் வந்துவிடும். சும்மா விடுமா விதி...?

வருடங்கள் பல கழித்து எங்கிருந்தோ தற்செயலாக அவள் வழியில் மீண்டும் வந்தான் வருண். வந்தவன் வந்தனாவை அடையாளம் கண்டு அவனையும், அவன் பழைய நேசத்தையும் அவளுக்கு அவசரமாக அறிமுகப் படுத்தினான்.

அவள் மனதோ “வழியில் என்னைப் பார்த்திருப்பான். அந்த வயதில் மனதில் சில தடுமாற்றம். அதை நேசம் என்கிறான். இவன் நேசம் உண்மை என்றால் எப்படியும் என்னைத் தேடி வந்திருப்பான். இன்னொரு பெண்ணை வாழ்வில் உடனே ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான்...”, வருண் நேசம் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தது.

அந்த சந்திப்பை அடுத்து அவ்வப்போது வருண் தன்னால் முடிந்த உதவிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவளுக்கு செய்து வந்தான். அவள் வாழ்க்கைப் பக்கங்களில் வருண் குறுக்கீடு அவனுள் பழைய காதல் சிறிது ஒட்டியிருப்பதைக் காட்டிக் கொடுத்ததது.

அவனைப் பற்றிய கல்லூரி நினைவுகளில் அடிக்கடி வந்து போவது.....சில வினாடிகள் சுவரில் இரு கைகளாலும் அவளை சிறை வைத்தது. “என்ன பேச மாட்டியா..? அவ்வளவு திமிரா...?”, கண்களை சுருக்கி கடைக்கண் பார்வையில், முறைப்பும் சிரிப்பும் கலந்த அவன் மிரட்டல். கூடவே “அவள விடாதடா...”, அவன் நண்பர்களின் கூக்குரல்கள்.

“எவ்வளவு திமிர் இருந்தா அவன் பிரண்ட்ஸ் கூட சேர்ந்து மிரட்டி இருப்பான். இப்ப மட்டும் என் கையில அவன் சிக்கணும்...”, அவனை பழிவாங்கும் ஆர்வம் அவளுக்குள் எப்போதாவது வந்து போகும்.

ஆனால், வருணின் மறு அறிமுகம் அவள் நிலையை முற்றிலும் மாற்றியிருந்தது. வருணின் கைகள் தொடாத அந்த அணைப்பில்...இன்று அவள் கட்டுப்பட்டுக் கிடக்கிறாள். மறுபடியும் தன் வழியில் அவன் வரவு வரமா, சாபமா என அவள் அறியவில்லை.

தனக்காக சில நாட்கள் காத்திருந்தவனை, நேசித்தவனை உதறிவிட அவள் மனம் இடம் தரவில்லை. அந்த நேசம் அவனை நல்ல நண்பனாக பார்க்க வைத்தது. அவனை தன் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்டாள். தன்னைப் பற்றிய எந்த விவரங்களையும் அவனிடம் மறைத்ததில்லை. அவன் வந்த பிறகு மற்ற நட்பு வட்டம் அவளுக்கு தேவைப் படவில்லை.

அவனிடம் கிடைக்கும் அக்கறை நிறைந்த மென்மையான வார்த்தைகள், அவள் சோர்ந்து போகும் நேரம் சக்தியைக் கொடுத்தது. துவண்டு போகும் போது ஆறுதலைத் தந்தது. “கொஞ்ச நேரம் அழனும், கொஞ்ச நேரம் சிரிக்கணும்...அதுதான் வாழ்க்கை. இல்லைனா வாழ்க்கை அலுத்து விடும்...”, என்பான்.

அவள் காட்டும் கோபங்கள், தந்த காயங்கள் அனைத்தும் அவனிடம் எதிர்த்தாக்குதல் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு மௌனமாக மன்னிக்கப்பட்டன. இந்த குணம் அவனுள் அவள் தந்தையை பிரதிபலித்தது. அதனால் தன் தந்தை மீது வைத்திருந்த மரியாதை, அன்பு, நம்பிக்கையை அவனிடமும் கொஞ்சம் பகிர்ந்து கொண்டாள்.

என்ன இருந்தாலும் வருண் இப்போது அவளுக்கு உரிமை இல்லாத உறவு! ஆபத்துக் காலத்தில் உடனே அழைக்கவோ, நினைத்தவுடன் பேசவோ முடியாது. இது போன்ற தருணங்கள் அவனை வாழ்வில் இழந்த வலியை சிறிது சிறிதாக அவளுக்கு உணர்த்தின.

“எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு...? இன்று உனக்கு சொந்தமான பொருள், நாளை வேறொருவருக்கு சொந்தம்...”, அவளோ கீதையின் வரிகளில் அந்த இழப்பிற்கு மருந்தை தேடினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.