(Reading time: 16 - 32 minutes)

வம்பர் 2019

மரினா பீச், சென்னை

“ஸ்வாமி” வி’ஸ்வாமி’த்ரன் என்ற பெயரில் ஸ்வாமி என்று பிரித்து எடுத்து அவனை அழைத்தாள் ப்ரகதி.

“கடவுளா பார்த்து உன்ன அனுப்பி இருக்கார். இப்படியே கூப்பிடறேன்” என அவள் கேட்டுக் கொள்ளவே சரி என்று சம்மதித்து இருந்தான்.

இந்த மூன்று ஆண்டு காலத்தில் வி.எம் க்ரூப்ஸ் உலகத்திலே புரட்சியை ஏற்படுத்தி இருந்த போதும் திரை மறைவில் இருந்தே செயல்பட்டான் விஸ்வாமித்ரன்.

பளிங்கு போன்ற கடல்...பரந்த மணல் பரப்பில் அவன் கை கோர்த்து அலைகளில் கால் நனைய நடை பயின்றாள் ப்ரகதி.

மூன்று ஆண்டுகளில் ஒரு  தனி மனிதன், யாராலும் எந்த அரசாங்கத்தாலும் செய்ய முடியாத ஒன்றை செய்திருக்கிறான். உலக அளவில் எத்தனை எதிர்ப்புகள், மறைமுக மிரட்டல்கள் இருந்திருக்கும். அனைத்தையும் சமாளித்து வெற்றி பெற்றிருக்கிறான். தன் அடையாளத்தை இன்று வரை ரகசியமாக வைத்திருக்கிறான்.

என்னை  தவிர யாருக்கும் அவன் தான் வி.எம் என்று தெரியாது. அதே சமயம் என்னையும்  எந்த பிரச்னையும் வராமல் காத்திருக்கிறான்.

அவள் மனதில் ஆயிரம் கேள்விகள். இருந்தும் புன்னகை ஒன்றையே பதிலாக தந்தான் அவன்.

முதலில் அவளுக்கு இது பெரிய விஷயமாக தோன்றவில்லை. நாளடைவில் நட்பு நேசமாக முகை விட்டு காதலாக மலர்ந்த போது பெரிதும் தவித்து போனாள்.

அவன் நிலையோ அதை விட பெரும் இக்கட்டில்.

“பேபி. அன்பு காதல் நேசம் இதெல்லாம் என்ன அப்படின்னு என்னை உணரச் செய்தது நீ தான். ஆனால் இதற்கு ஆயுள் குறைவு. என்னை வேறேதும் கேட்காதே”

வேதனையோடு அவன் சொன்ன போது உருகி போனாள்.

ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறானா...அப்படி ஒன்றும் தெரியவில்லையே.

அதிகம் தூண்டி துருவி நிகழ்கால வசந்தங்களை இழக்க அவள் விரும்பவில்லை.

“டிசம்பர் டோக்யோ கான்பரன்ஸ்ல புக் ரிலீஸ் முடிந்ததும் நாம.....” அவள் மேல தொடரும் முன் அவன் இடையிட்டான்.

“புக் நல்லா வந்திருக்கு பேபி. கான்பரன்ஸ் முடிந்ததும் உன்னிடம் நானே சில விஷயங்கள் சொல்லணும். அது வரை வெயிட் செய்வியா” அவன் கேட்கவும் சரி என்று சம்மதம் சொன்னாள்.

டிசம்பர் 31 ,2019 நேரம்:23:30

ஹவாய் தீவுகள்

ன்று நாள் முழுவதும் என்னவோ இனி எப்போதும் பார்க்கவே போவதில்லை என்பது போல அவளை தனது கை அணைப்பிலேயே வைத்திருந்தான்.

உண்மையை அவளிடம் கூற முடியாத துர்பாக்கியம்.

பேபி..இதோ இன்னும் அரை மணி நேரத்தில் உன்னை விட்டு பல ஒலி ஆண்டுகள் தூரம் சென்று விடுவேன் நான்.

ஆம். பூமியில் இருந்து சுமார் 40 ஒலி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் “மி” கேலக்சியின் (Galaxy) ஓர் கிரகம் “வி”.

பூமியின் மனிதர்களை விட பல மடங்கு அதிக சக்திகளை உடைய அந்த “வி” கிரக  உயிரினங்களில் அதிக ஷக்தி கொண்ட உயிரினத்தின் பிம்பம் நான்.

புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் “வி” கிரக அரசியின் மைந்தன் நான்.

பூமியின் கணக்கு படி பல கோடி வருடங்கள் ஆயுள் கொண்ட நாங்கள் பிரபஞ்சத்தில் பூமியை பல பல லட்சம் வருடங்கள் முன்பில் இருந்தே அறிந்திருக்கிறோம்.  

பல்வேறு சமயத்தில் பூமியின் நலமறிய எங்கள் கிரக வாசிகள் இங்கு வந்திருக்கிறோம். சில பல தருணங்களில் சிருஷ்டி அழியாமல் இருக்க நட்புடன் உதவியும் புரிந்துள்ளோம்.

மனிதன் வளர்ச்சி அடைந்து நாகரிகம் ஓங்கிய நிலையில் ஓர் உயர்நிலை உயிரினம் தோன்றிவிட்டது இனி பூமியை அந்த உயிரினம் காத்துக் கொள்ளும் என்று எங்கள் கண்காணிப்பை அகற்றிக் கொள்ள மனிதனோ பூமியை அழிவிற்கு இட்டுச் சென்று கொண்டிருந்தான்.

இந்நிலையில்  மீண்டும் பூமியின் மீது நாங்கள் கவனம் செலுத்திய போது நிலைமை கை மீறிய நிலை.

நாங்கள் எண்ண அலைவரிசை மூலம் தான் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வோம். நட்சத்திர ஒளி தான் எங்கள் உணவு. அகச் சிவப்பு கதிர்களுக்கு அப்பால் உள்ள அலையில் தான் எங்கள் உருவம் தென்படும். அதுவும் ஓர் ஒளி வடிவமாக தான் எங்கள் உருவம்.

ஆனால் பூமியின் எந்த உயிரினத்தின் வடிவத்தையும் எங்களால் தரித்து கொள்ள முடியும். அவ்வாறு பொருத்திக் கொள்ளும் போது அந்த உயிரினத்தின் அனைத்து தன்மைகளையும் வெளிபடுத்துவோம். அதே சமயம் எங்கள் சக்திகளும் எங்களுக்குள் பொதிந்து இருக்கும்.

பேபி பல சமயங்களில் நான் மற்றவர் பார்வையில் அகப்படாமல் இங்கே உலாவி இருக்கிறேன். உண்மையில் பூமியை காக்கும் பொருட்டு உன்னை நாங்கள் தான் ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டோம்.

என் தலைமையில் நாங்கள் ஓர் அணியாக இங்கு வந்தோம். உலகெங்கும் வியாபித்து இருந்த வேளையில் நீ அகப்பட்டாய். பூமியை பாதுகாக்க நீ எடுத்த முயற்சிகள் கண்டு அதையே எங்கள் மார்க்கமாக ஆக்கிக் கொண்டோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.