(Reading time: 9 - 18 minutes)

டாக்டர்! நான் போய் பார்க்கிறேன்.

ராஜேந்திரன் எழ எத்தனித்த போது, கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண்மணி, வேர்த்து விறுவிறுத்து, பருத்த மேனியாக,உள்ளே வர,

"வாங்கம்மா உட்காருங்க!எப்படி இருக்கீங்க?"

மேலிருந்து கீழ் வரை கஜலட்சுமியின் உருவத்தைப் பார்த்தார்.

சற்று கருத்த நிறம், மிகவும் குண்டான கைகள்,  சராசரி பெண்களின் எடையை விட இருமடங்கு அதிகம். இருந்தாலும் யானையாக நினைக்கும் தோற்றத்தில் அவரில்லை.

"வெளில உட்கார்ந்திருக்கதானே சொன்னேன். எங்கே தொலைஞ்ச?" ராஜேந்திரன் கோபமாகக் கேட்கவும்.

"தாகமா இருந்தது, வெளில கரும்பு ஜூஸ் கடை இருந்தது, போய் குடிச்சிட்டு வந்தேன்.!

"கரும்பு ஜூஸ்" சிறிது அழுத்திச் சொல்லிவிட்டு கண்ணைக் காட்டினார் ராஜேந்திரன்.

"டாக்டர் கூப்பிட்டாங்கன்னு ரிசப்சன்ல இருந்த பொண்ணு சொன்னாங்க!"

"ராஜேந்திரன் நீங்களும் வந்திருக்கிறதா சொன்னாரு, அதான் உங்களையும் பார்க்கலாம்னு!"

"கல்யாணத்துல பார்த்ததைவிட கொஞ்சம் குண்டாகிட்டீங்க போல!"

"கொஞ்சமா! நிறையவே டாக்டர்! பையன் பொறந்ததுக்குப் பிறகு போட்ட வெயிட் குறையவே மாட்டேங்குது!"

"உங்களுக்கு எடை குறைக்கணும்னா சொல்லுங்க சில டிப்ஸ் தரேன்!”

"கண்டிப்பா டாக்டர்!"

"ராஜேந்திரன், நீங்க கொஞ்சம் வெளில காத்திருங்க. உங்க மனைவிக்கு டிப்ஸ் தர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் டெஸ்ட் பண்ணனும்!"

"சரி டாக்டர்!"

"ம்மா நீங்க குண்டாக இருக்கிறது உங்களுக்குப் பிடிச்சிருக்கா?"

இல்லை டாக்டர்!

உங்க கணவருக்கு?

அவருக்கு நான் எடை கூடினது ரொம்பக் கோபம், அடிக்கடி சொல்லிக் காட்டுவார்

இப்ப எப்படி உங்க வீட்டுக்காரர் உங்க எப்படி நடந்துக்கிறார்? அதே கோபம் உண்டா?

"என்ன டாக்டர் அப்படிக் கேட்டுட்டீங்க. சமீபகாலமா அதிகமாத்தான் திட்றார். நானும் டயட்டுன்னு ஒரு வேளை மட்டும் சாதம் சாப்பிட்டு மத்த நேரம் தண்ணீர், கீரைன்னு சாப்பிட்டு பார்க்கிறேன். எடை குறைய மாட்டேங்குதே!"

"உணவுக்கட்டுப்பாட்டோட உடற்பயிற்சியும் அவசியம்!"

"உடற்பயிற்சியும் செய்வேன் டாக்டர். காலையில் எழுந்ததும் செய்வேன். சமையல் முடிச்சிட்டு மதியம் கொஞ்சம் உடற்பயிற்சி செய்வேன்!"

"வீட்டு வேலைகள்லாம் செய்வீங்களா?"

"செய்வேன்.ஆனால் உதவிக்கு வேலைக்காரம்மா இருக்காங்க!"

"அவங்களை எப்போதாவது அடிச்சிருக்கீங்களா?

இல்லை, ஏன் அப்படிக் கேட்கிறீங்க. அப்படி யாராவது செய்வாங்களா? பாவம். அவங்க என்னை விட வயசுல பெரியவங்க.

அவங்களை ஒரு நாள் மிதிக்கப் பார்த்தீங்கன்னு உங்க கணவர் சொல்றாரே.

அவங்க குனிஞ்சு தரையத் துடைச்சிட்டு இருந்தாங்க. நான் மாடிப்படிகளில் காலைத் தூக்கிவச்சும் இறங்கியும் உடற்பயிற்சிதான் செய்துட்டு இருந்தேன். சோபால உட்கார்ந்து இருந்தவர், "மிதிச்சிறாத!மிதிச்சிறாத!ன்னு கத்திட்டு வந்தார். நானே இவருக்கு என்னாச்சுன்னு குழம்பிட்டேன்.. பக்கத்து வீட்டுக் குழந்தை என்கிட்டே ரொம்பப் பாசமா இருக்கும். அதைக்கூட இப்போ என்கிட்டே வர விடமாட்டேங்கறார். ஏன்னு தெரியல!

ஏன்னு நான் சொல்றேன். நான் சொல்றதக் கேட்டு பயந்துக்காதீங்க!

உங்க கணவர் நீங்க யானை ஆகப் போறீங்கன்னு நினைச்சுட்டு இருக்கிறார்.

என்னது நான் யானை ஆகப்போறேன்ன்னு நினைக்கிறாரா?

என்ன டாக்டர் சொல்றீங்க.

உங்க கணவருக்கு ஒரு புதுவிதமான மன வியாதி. தன்னையே ஒரு மிருகமாக நினைக்கிற மனக்கோளாறுக்குக் கிளினிக்கல் லைகாந்த்ரோபின்னு (Clinical lycanthropy) சொல்வாங்க. ஆனால் இங்கே அதுலயும் ஒரு மாற்றம். உங்க கணவர் நீங்க ஒரு யானைன்னு நினைக்கிறார். நீங்க சாப்பிடறது, தூங்கறது, குளிக்கறது, செய்ற எல்லாமே அவர் கண்ணுக்கு ஒரு யானை செய்யறாப்புல தோணுது.பெரும்பாலும் தன்னை ஓநாயாக நினைச்சுக்கிட்டவங்களைப் பற்றி நிறைய கேஸ் ஹிஸ்டரி இருக்கு. எனக்குத் தெரிஞ்சு யானையா நினைச்சுக்கிறத, அதுவும் தன்னை இல்லாம, இன்னொருத்தரை நினைச்ச நம்ம நாட்டில இது தான் முதல் கேஸ்.

ஒண்ணுமே புரியல டாக்டர்,

எடை அதிகமா இருக்கிற உங்களைப் பார்த்து, உருவத்தில் பெரிய விலங்கான யானையைக் கற்பனை பண்ணிட்டு, சாதரணமா நீங்க பண்ற ஒவ்வொரு காரியத்தையும் ஒரு யானை செய்யறதா கற்பனை பண்ணிட்டு பயந்துக்கிறார் உங்க கணவர்.

டாக்டர் நீங்க சொல்றத நினைச்சா ரொம்ப பயமா இருக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.