(Reading time: 5 - 10 minutes)

2017 போட்டி சிறுகதை 135 - காதலியா மனைவியா? - ஜான்சி

This is entry #135 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - காதலியா மனைவியா?

எழுத்தாளர் - ஜான்சி

ன்பு(?!) கணவனுக்கு என்று ஆரம்பித்திருந்தது அந்த கடிதம்.

அலுவலகத்தினின்று திரும்பி வந்து மனைவி எங்கே என்று தேடிய போது கைக்கு அகப்பட்ட கடிதம் இவ்வாறு ஆரம்பித்திருக்க, என்னடா இது அதிசயமாய் கடிதம் எழுதி வைத்து விட்டு இவள் எங்கேச் சென்று விட்டாள்? என்று அறிந்துக் கொள்ள அந்த கடிதத்தை மேலும் படிக்க ஆரம்பித்தான் சங்கர். படிக்கும் போதே அவன் மூளைக்குள் பல்வேறு ஞாபகங்களை தூண்டி விட்டன அந்த கடிதத்தில் இருந்த பொய்மையற்ற அந்த வார்த்தைகள்.

நாம் முதன் முதலில் அலுவலகத்தில் சந்தித்த போதே என் சிரிப்பை ரசித்ததாக நான் காதலியாக இருந்தபோது நீங்கள் சொன்னது இன்றுவரைக் கூட எனக்கு ஞாபகம் இருக்கின்றது.

ஆனால், நான் மனைவியான பின்பு ச்சீ என்னச் சிரிப்பு இது. குடும்ப பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டாமா? என்ற உந்தன் கடுமையான ஏச்சுக்கள் பலமுறைக் கேட்டு இப்போதெல்லாம் எனக்கு சிரிப்பே மறந்து போய்விட்டது. 

கலர்கலராய் மாடர்ன் உடையில் அலுவலகம் வரும் போது காதலனாய் கண்களில் மலர்ச்சிக் காட்டி என்னை அழகாக இருப்பதாக பாராட்டியது ஞாபகம் இருக்கின்றது எனக்கு,

மனைவியான பின்போ எதற்கு இந்த மாடர்ன் உடைகள் ஒழுங்காய் சேலை கட்டி ஆஃபீஸுக்கு வருவதானால் வா, கண்ட கண்டவன் உன் அழகை பார்ப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என நீ சீறியதில் இப்போதெல்லாம் கண்ணாடி முன் நின்று என்னை அலங்கரித்துக் கொள்ளவே பயமாய் இருக்கின்றது எனக்கு.

உந்தன் காதலியாய் இருந்தபோது உடல் நலமற்ற நாட்களில் சோர்ந்த என் முகத்தைக் காணும் போதெல்லாம், எதற்கு கஷ்டப் படுகின்றாய்? இன்றைக்கு லீவு எடுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளக் கூடாதா? எனக் கேட்டது ஞாபகமிருக்கின்றது எனக்கு.

இப்போதோ பத்து நாள் காய்ச்சலில் வாடி வதங்கி இருந்தாலும் உனக்கு வெளி சாப்பாடு ஒத்துக் கொள்ளாது என்பதற்காக, உடம்பிற்கு முடியாமல் இருந்த போதும் கூட சீக்கிரம் எழுந்து சமைத்துக் கொடுத்து அனுப்பி வைத்தால், வீட்டில் எந்த நேரமும் தூங்கிக் கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கிறது? கொஞ்ச நாட்களாக் வீடு ஏன் சுத்தமாயில்லை? ஏன் இப்படி குப்பையை குவித்து வைத்திருக்கின்றாய்? துணிகள் துவைத்து உடனே அயர்ன் செய்வதற்கென்ன? சுற்றுபுறத்தை சுத்தமாகவே வைத்துக் கொள்ளத் தெரியாதா உனக்கு? என வெடிக்கும் உன் வார்த்தையின் சூட்டில் இறைவா எனக்கு உடல் நோயொன்றை மட்டும் தராதே என வேண்டத் தோன்றுகின்றது எனக்கு.

நீ இன்றைய புரொஜெக்டை லீட் செய்த விதம் பிரமாதம் என்று காதலியாக இருந்த போது பாராட்டியது ஞாபகம் இருக்கின்றது எனக்கு.

இப்போதோ என் இரவு ஷிப்ட்களும், ஆண் தோழமைகளும் உனக்கு திடீரென தவறாய் தெரிய நீ வேலைக்கு செல்வதால் தான் அத்தனைப் பிரச்சினைகளும், பேசாமல் வேலையை விட்டு விட்டு வீட்டில் மட்டும் கவனித்தால் போதும் என்கிறாய் என்னிடம். 

இதுவரை எத்தனையோ உனக்கேற்ற விதம் மாறியிருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் என்னால் கண்னை மூடிக் கொண்டு பின்பற்ற இயலவில்லை. அதற்காக கடந்த சில நாட்களாக நமக்குள் ஏற்படும் வாக்குவாதங்கள் தான் எத்தனை எத்தனை. 

உன் மகிழ்ச்சிக்காக என்று உனக்கேற்ற விதமாய் கடந்த ஆண்டுகளில் எத்தனையோ நான் மாறி விட்டிருக்கிறேன்தான். அதில் இதுவரை எனக்கு எவ்வித வருத்தமும் இருந்ததில்லை. ஏனென்றால் எனக்கு உன்னுடைய மகிழ்ச்சி மட்டுமே எப்போதும் முக்கியமான ஒன்று.

என்னுடைய தற்போதைய சந்தேகமெல்லாம் ஒன்றுதான் உனக்கு முன்பு என்னை காதலியாக பிடித்திருந்ததென்றால், ஏன் மனைவியான என்னை ,என்னுடைய அதே குண நலன்களை, பழகும் முறையை திருமணத்திற்கு பின்பு பிடிக்காமல் போயிற்று?

உந்தன் மனைவியான பின்னர் உனக்கேற்ற விதம் நீ சொன்னபடி ஒவ்வொன்றிலும் மாறிய பின்னராவது உனக்கு என்னைப் பிடித்திருக்கின்றதா? என்று என்னை நானே கேட்டால் கூட எனக்கு எந்த ஒரு சாதகமான ஒரு பதிலும் கிடைக்க காணோம். ஏனென்றால் நீ என்னிடம் எதிர்பார்க்கும் மாற்றங்களின் லிஸ்ட் கூடிக் கொண்டே போகின்றனவே தவிர குறையக் காணோம். நான் உனக்காக மாற எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளை கண்டுக் கொள்ளவும், மகிழ்ச்சிக் கொள்ளவும் கூட உனக்கு நேரமில்லையே? 

உன்னைக் கவர நான் உன் காதலி போல நான் இருப்பதா? இல்லை உந்தன் சின்ன சின்ன ஈகோக்களுக்கு தீனி போட என்னைச் சுருக்கிக் கொண்டு மனைவி போல நான் இருப்பதா? என்னும் குழப்பத்தில் இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய சுயத்தை இழந்து கொண்டிருப்பதாகவே எனக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. உனக்கு காதலியாகவா? இல்லை மனைவியாகவா? எவ்வாறு நான் இருந்தால் உனக்கு என்னைப் பிடிக்கும் என்று எனக்குள்ளே நான் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக இப்போதெல்லாம் தோன்றுவது ஒன்றேதான், உன்னுடைய நேரத்திற்கு நேரம் மாறும் விருப்பங்களுக்கேற்ப ஆடக் கூடிய தனக்கென்று சுயமாக எண்ணங்கள் இல்லாமல் வாழக் கூடிய அடிமை ஒன்றையே நீ நாடினாயோ? ஒருவேளை நீ என்னை காதலிக்கவே இல்லையோ? என்னமோ?..................... நான்தான் நீ என்னை காதலிப்பதாக தவறாக எண்ணிக் கொண்டேனோ?

இப்படி என் உள்ளத்தில் எழுந்த பல எண்ணங்களை தெளிவுப் படுத்திக் கொள்ள எனக்கு தனிமை வேண்டி இருப்பதால்,. சில நாட்கள் அலுவலகத்திற்கு லீவு எடுத்து விட்டு அம்மா வீட்டிற்கு ஓய்வெடுத்து வர நான் செல்கின்றேன் .

நமக்குள் என்னென்னவோ நிகழ்ந்திருந்தாலும் கூட, நீ இனிமேலாவது என்னை உன் காதலியாகவோ? இல்லை மனைவியாகவோ உன் விருப்பத்திற்கு நேரத்திற்கேற்ப வளைந்து வளைந்து வாழச் செய்து என்னுடைய முதுகெலும்பே இல்லாமலாக்கி விடாமல் , என்னுடைய விருப்பத்தையும் மதித்து வாழச் செய்வாய் என்றும், என்னை என்னுடைய சுய விருப்பு , வெறுப்புகள் கொண்ட சாதாரண மனுஷியாக கருதி அன்பு செலுத்த, என்னுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ள , என்னுடைய நிறை குறைகளோடு என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் மனம் ஏங்குகின்றது.

இப்படிக்கு,

உயிரும், உணர்வும் கொண்ட உந்தன் மனைவி.

This is entry #135 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - காதலியா மனைவியா?

எழுத்தாளர் - ஜான்சி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.