(Reading time: 20 - 39 minutes)

2017 போட்டி சிறுகதை 136 - அங்கீகாரம் - தமிழ்தென்றல்

This is entry #136 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை − கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - தமிழ்தென்றல்

Woman

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன….இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்…. நினைக்கும் போதே சுளீர் என வலித்தது….

படித்து கொண்டிருந்த கீர்த்தி, அந்த அறையினுள் யாரோ வரும் அரவம் கேட்டு சட்டென அதை மறைத்தாள்.

‘அய்யோ! அவ தா வரா போலயே…’

அவசரமாக அங்கிருந்த புத்தகங்களை சீர் செய்ய ஆரம்பித்தாள்.

அறையினுள் நுழைந்தவளோ தனக்கு முதுகு காட்டி உட்கார்ந்திருந்த கீர்த்தியை முறைத்தபடி நின்றிருந்தாள்.   

‘என்ன கீர்த்தி… இத்தனை நேரமா சத்தத்தையே காணோமே? ஒரு வேளை உன்னோடு கெஸ் தப்பாயிருச்சோ? அவ வரலயா? இது என்ன சிதம்பர ரகசியமா கீர்த்தி… பின்னால திரும்பி பார்த்தா தெரிய போகுது’ திரும்பி பார்த்தவளோ அதிர்ச்சியில் உறைந்தாள்.  எதிரிலிருப்பவளின் கோபத்தை கண்ட கீர்த்திக்கு பயத்தில் கை கால்கள் நடுங்கின. 

“அது…அது வந்து….” பயத்தில் தந்தியடித்தன உதடுகள்… கையிலிருந்த புத்தகம் நழுவி கீழே விழுந்தது.

“ஏய் கீர்த்தி! உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? இப்போ எதுக்கு இந்த புக்ஸை எடுத்து வச்சு விளையாடிட்டிருக்க? உன்னோட தீஸிஸ் (Thesis) வொர்க் முடிஞ்சதா?” அந்த அறையிலிருந்த பொருட்கள் அதிரும்படியான இடி முழக்கம் அவளின் பேச்சில்…

காஃபியோடு அங்கு வந்த சமையல் வேலை செய்யும் மங்கா கீர்த்தியின் நிலையையறிந்து உதவிக்கு வந்தாள்.

“இந்தாங்கம்மா….சூடா காஃபி! வீட்டுக்கு வந்ததும் வராததுமா இந்த கீர்த்திக்கிட்ட பேசிக்கிட்டு…. கீர்த்தி, ஏதோ தீஸிஸ்க்கு புக்கு வாங்கனும் கடைக்கு போகலாமானு எங்கிட்ட கேட்டுச்சு… நான்தே வேலைய முடிச்சுட்டு வர வரைக்கு இந்த ரூமுல தேவையான புக்கு ஏதாவது கிடைக்குமானு பார்க்க சொன்னேம்மா…”

“சப்போட் பண்ணது போதும்.  வேலைக்கு புதுசா ஒருத்தரை கேட்டிருந்தேனே… என்னாச்சு?” கோபம் குறைந்தாலும் கடுமை குறையாத குரலில் கேட்டவளின் கேள்வியில் ‘கீர்த்தியிருக்கட்டும் உன் வேலை முடிஞ்சதா?’ என்ற அர்த்தம் மங்காக்கு புரியாமலில்லை.

“சொல்லிருக்கேம்மா… இப்போ வர நேரம் தான்…” என்று மங்கா சொல்லி முடிப்பதற்குள் வந்து சேர்ந்தாள் சுகுணா.

“வா சுகுணா! இப்போதா அம்மா உன்னை பற்றி கேட்டுட்டிருந்தாங்க...” தோட்டத்தை ஒட்டியபடி வீட்டின் வெளிபுறமாக அமைந்திருந்த அந்த புத்தக அறையிலிருந்து வெளியேறினாள் மங்கா.  மற்ற இரு பெண்களும் அவளை பின்தொடர்ந்தனர்.

“இவங்கதா நம்ம முதலாளியம்மா, சுலோசனா” மங்கா சொல்லவும் சுகுணா கைக்கூப்பினாள்.

‘பேர பாரு சுலோசனாவா… சுலோசனா… யாருதா இவளுக்கு இப்படி ஒரு பேரு வச்சாங்களோ?! சொர்ணாக்கான்னு வச்சிருக்கனும்… ஜஸ்ட் மிஸ்’ கீர்த்தியால் வாய்விட்டு சொல்லமுடியுமா? மனதில் மட்டும் நினைத்து கொண்டாள்.

“இவ பேரு சுகுணா! நான் முன்ன குடியிருந்த அதே காலனில இருக்கா.  நீங்க வேலைக்கு நம்பிக்கையான ஆளு வேணும்னு கேட்டதும் இவளோட ஞாபகம் வந்தது…” பேசி கொண்டிருந்தவளை சுலோசனா கையமர்த்தி நிறுத்தினாள்.

‘மங்கா, இப்போ என்ன தப்பா சொல்லிட்டாங்கன்னு இந்த சொர்ணாக்கா அவங்களை பேச வேணான்னு நிறுத்துறா? எல்லா பணமிருக்க திமிரு.  சும்மாவா பின்ன! இந்த சிட்டி முழுக்க எங்க திரும்பினாலும் இவளோட ‘டெய்லி நீட்ஸ்’ (Daily Needs) சூப்பர் மார்க்கெட்டுதா இருக்கு.  அந்த கொழுப்புதா எங்களையெல்லா கிள்ளு கீறை மாதிரி பார்க்க சொல்லுது’ 

கீர்த்தி, சுலோசனாவை மனதினில் திட்டி தீர்க்க… மங்காவோ மிக இயல்பாக நின்றிருந்தாள்.  அதை கவனித்த கீர்த்தி பொங்கினாள்,

‘இது உனக்கு தேவையா, கீர்த்தி?! மங்காவுக்காக நீ இவ்வளவு பேசினா.. அவங்க என்னடான்னா இந்த சொர்ணாக்காவுக்கு மரியாத கொடுத்துட்டு நிக்கிறாங்க…அய்யோ அய்யோ’ மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டாள் கீர்த்தி.

“மங்கா, இனிமே நீ வெறு சமையல் வேலைய மட்டும் பார்த்துக்க… சுகுணாவை பாத்திர கழுவ வீட்டை துடைச்சி சுத்த பண்ண சொல்லு” அங்கிருந்து நகரப்போன சுலோசனா தனக்கு பின்னால் நின்றிருந்த கீர்த்தியை கவனித்துவிட்டாள்.

“இங்கென்ன கொரங்காட்டமா காட்டுறாங்கன்னு நின்னு பார்த்திட்டிருக்க… ஒழுங்கா போயி தீஸிஸ் முடிக்கற வேலையப் பாரு” கடுமையான குரலில் கூறிவிட்டு தன் அறை நோக்கி நடந்தாள்.

சுலோசனாவின் கடுமையான குரலில் பயந்து நடுங்காமல் வழக்கத்துக்கு மாறாக சிரிக்க ஆரம்பித்தாள் கீர்த்தி.  சுலோசனாவை பின்தொடர்ந்து கொண்டிருந்த மங்கா மற்றும் சுகுணாவின் பார்வையை திசைதிருப்பியது  இவளின் சிரிப்பு சத்தம்.  

‘இந்த கீர்த்திக்கு பயத்துல மூளை கலங்கிருச்சோ’ என்று நினைத்தபடி அவளருகே விரைந்தாள் மங்கா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.