(Reading time: 10 - 20 minutes)

டிரைவர் மலையாளத்தில் எதோ சொல்ல, சஞ்சயும் பதில் சொல்ல. ப்ரீத்திக்கு ஒன்றுமே புரியவில்லை. மலையின் அருகே நெருங்கி செல்வது போல் இருந்தது. கேரளாவுக்கு வந்திருக்கோம்னு தெரியுது. என்ன ஊர்னு தெரியலேயே?

"எந்த ஊர் சஞ்சய் இது?"

"கேரளாவில் ஒரு ஊர் இது".

"அது எனக்குத் தெரியுது. ஊர் பேர் என்னனு கேட்கிறேன்."

"எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது."

"எனக்கும் தான். ஆனால் எந்த ஊர்னு தெரியாம எப்படி இங்கே வந்திருக்க."

"அதெல்லாம் தான் சஸ்பென்ஸ்!"

காட்டுப்பாதை துவங்கியது. இரு புறமும் உயர்ந்த மரங்கள், பறவைகளின் சப்தங்கள் கேட்பதற்கே இனிமையாக இருக்க அந்த பாதையில் நடப்பது ரம்மியமாக இருந்தது. கொஞ்சம் தூரம் அவர்கள் நடந்து சென்ற போது, அவர்கள் சென்ற வழியில் ஒரு சிறிய நீரோடை குறுக்கிட்டது. ஓடையில் சிலர் பாத்திரங்கள் கழுவிக் கொண்டு இருந்தனர்.அதன் அருகில் பழமையான ஒரு கட்டிடத்தைக்  கண்டனர். என்ன காட்டுக்குள் ஒரு கட்டிடம் என்று கேட்டாள் ப்ரீத்தி. ஒரு மனநல காப்பகம் இருக்கிறது. மூலிகை வைத்தியசாலை என்று நினைக்கிறேன் என்றான் சஞ்சய். அவர்கள் அந்த இடத்தைக் கடந்து செல்கையில், சிறுகுடிசை போன்ற திறந்த மண்டபங்களைத் தாண்டிப்  போக வேண்டி இருந்தது. அங்கு அந்த குடிசையில் அமர்ந்து இருந்த மனிதர்களைப் பார்க்க ப்ரீத்திக்கு மிகவும் பயமாக இருந்தது. அவர்கள் மனநோயாளிகள் போல தோற்றமளித்தனர், ஒரே போல் உடுப்பு அணிந்து இருந்தார்கள். அவர்களில் சிலர் வித்தியாசமான சத்தம் எழுப்பிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கே ஒரு சற்று வயதான ஒரு  பெண் வந்து அவர்களுக்கு ஊசி குத்துவதைப் பார்த்தாள் ப்ரீத்தி. இந்த காட்சிகள் அவள் மனதைப் பாதிக்கவே, அவள் சிறிது கோபத்துடன் ,

"என்ன சஞ்சய்? இதுவா உங்க இந்த பிறந்தநாள் பரிசு" என்றாள் ப்ரீத்தி.

இல்லை. இல்லை. இனிமேல் தான் அதை நீ பார்க்க வேண்டும் என்ற சஞ்சய் தனது வீடியோ கேமரா மற்றும் உபகரணங்களை மலை மீது சிரமத்துடன் தூக்கிச் செல்லுவதைப் பார்த்து, "விடுமுறைக்குத் தானே வந்திருக்கோம் வேலைக்குள்ள உபகரணங்கள் இங்கே எதுக்கு?" என்று ப்ரீத்தி அவனைத் திட்ட,

"என்ன செல்லம், உன் பிறந்தநாள் ஞாபகங்களைப் படம் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டாமா? இன்னும் இரண்டடி முன்னாடி வந்து பாரேன்!"என்றான்.

ப்ரீத்தி முன்னால் வர, அவள் கண்ட காட்சி. அழகான நீர்வீழ்ச்சி பால் போல் கொட்ட, சுற்றிலும் மலை மேல் மரங்கள், செடிகளில் எல்லாம் வண்ண மலர்கள்.

பிரமித்து நின்று விட்டாள் ப்ரீத்தி. இயற்கையின் அற்புத ஓவியத்தைத் தனது பிறந்தநாள் பரிசாக சஞ்சய் தந்ததை எண்ணி மகிழ்ந்தாள். நீர்வீழ்ச்சியைப்  பார்க்கப்  பார்க்கத்  திகட்டவில்லை. "சஞ்சய்!  இங்க இறங்கிக் குளிக்க  எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு!" என்றாள் ப்ரீத்தி.

"ஓ குளிக்கலாமே! சரி, நம்ம கொண்டு வந்த லக்கேஜ், காமிரா எல்லாம் அந்த மனநல காப்பகத்தில் பக்கத்தில் இருக்கிற ஓய்வறையில் வச்சிட்டு வருவோம். இங்கே இருந்து கொஞ்ச தூரம் தானே."

"எனக்கு அங்கே வரவே பயமா இருக்கு."

"அதெல்லாம் ஒன்னும் பயமில்லை. வா வச்சிட்டு வந்திருவோம்."

அங்கே வாசலில் காவலாளி போல் இருந்தவரிடம் பேச, அவர் அவர்களை அலுவலக அறைக்குச் செல்லுமாறு கை காண்பித்தார். அலுவலக அறை பூட்டி இருந்தது. இருவரும் தட்டிப் பார்த்தனர். திறக்கவில்லை. உள்ளே எதோ சத்தம் கேட்கவும். ஜன்னல் அருகில் சென்று எட்டிப் பார்த்தனர். உள்ளே...உள்ளே...

ஒருவரை மூன்று பேர் அடித்துக் கொண்டு இருந்தனர். பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே ஒருவன் கத்தி எடுத்து அடிபட்டு கீழே விழுந்தவனைக் கத்தியால் குத்தினான். ரத்தம் பீறிட்டு வந்தது. ப்ரீத்தி "ஐயோ" என்று அலற, சஞ்சய் அவள் கையில் இருந்த செல்போனை வேகமாக வாங்கி நம்பரை அழுத்தினான்

ப்ரீத்தியின் அலறல் சத்தத்தில் கொலையாளிகள் இவர்களைப் பார்த்து விட,  ப்ரீத்தியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் சஞ்சய்.

அவங்க நம்மளைப் பார்த்துட்டங்க ப்ரீத்தி..ஓடு! ஓடு! ப்ரீத்தி வேகமாப் போ..

.௩+என்றான் சஞ்சய்.

வேகமாக ஓட ஆரம்பித்தார்கள்.

ப்ரீத்திக்கு ஓட முடிந்த அளவு, காமிரா உபகரணங்கள் வைத்துக் கொண்டு சஞ்சயால் ஓட முடியவில்லை.

தூரத்தில் ஒரு ரயில் சத்தம் கேட்டது, " ப்ரீத்தி வேகமாக ஓடு! ரயிலை நெருங்கி விட்டால் எப்படியாவது தப்பித்து விடலாம்."

இறுதியாக சஞ்சய் சொல்லிய வார்த்தைகள் இவை தான். சஞ்சயின் குரல் அதற்கப்புறம் கேட்கவில்லை. திடுக்கிட்டு நின்ற ப்ரீத்தி திரும்பிப் பார்த்தாள். சஞ்சயைக் காணவில்லை. அவனது செல்போனுக்கு போன் பண்ணலாம் என்று தனது கைப்பையைத் தொட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.