(Reading time: 8 - 15 minutes)

"நீ இருக்க இந்த நிமிஷம் சந்தோசமா இருக்கேண்டா" என்று கூறி சமயலறைக்கு சென்ற ரங்கசாமி .தேநீரோடு வெளியே வந்தார்.

"தாத்தா நான் வெளிய சாப்ட்டு தான் வந்தேன்"

"பயப்படாதடா நான் டீ நல்லாவே போடுவேன்" என்று கூறி ஒரு சிறு கோப்பையில் தேனீரை ஊற்றி வருணிற்கு கொடுத்தார் ரங்கசாமி.

எத்தன நாள் இங்க இருக்க போற?

ஒரு வாரம் தாத்தா

ரங்கசாமியின் முகத்தில் மலர்ச்சி. "சரி சொல்லு. நைட் என்ன சாப்பாடு செய்யட்டும்?"

என்னை எதுக்கு தாத்தா கேக்குறிங்க

நீ இங்க தங்குற தான

தேனீரை பருகிக் கொண்டிருந்த வருண் தன் தாத்தாவை நோக்கினான். "இல்ல தாத்தா, அப்பாக்கு தெரிஞ்ச பிரண்ட் வீட்டுல தங்கபோறேன். அப்பாக்கு கடன் கொடுக்கிறதா சொல்லிருக்காரு. அதான் அப்பா என்ன அனுப்பிருக்காரு"

"அப்போ என்னை பாக்க வரலையா நீ?" என்றார் ரங்கசாமி சோகமாக.

பதில் கூற முடியாமல் வருண் தவித்தான். "உங்களையும் தான் தாத்தா பாக்க வந்திருக்கேன்"

உன்கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா வருண். நான் ரொம்ப தைரியமானவன்னு என் சிவகாமி நினைப்பா. ஆனா நான் ரொம்ப பயந்தவன். இத்தனை வருஷமா தனிமைல பயந்து பல நாள் தூங்காம முழிச்சிருப்பேன் தெரியுமா. இன்னைக்கு ஒரு நாள் என் கூட தூங்குறியா? சின்ன வயசுல உனக்கு கதை எல்லாம் சொல்லி தூங்க வைப்பேன். அதையெல்லாம் நீ இன்னும் மறக்கல தான?

தாத்தாவின் கைகளை ஆதரவாய் பற்றிய வருண், "இன்னைக்கு நான் போய் தான் ஆகணும் தாத்தா" என்றான்.

கவலைப்படாதிங்க, நாளைல இருந்து உங்க கூட தூங்குவேன்

நான் எப்படி நம்புறது என்று அப்பாவியாக கேட்டார் ரங்கசாமி.

நான் சில திங்க்ஸ் மட்டும் எடுத்துக்கிட்டு என் பையை இங்க விட்டுட்டு போறேன்.

ரங்கசாமியிடம் அமைதி.

"இப்போ நான் போகணும். நாளைக்கு நிச்சயம் வருவேன். நம்புங்க" என்று கூறி தான் கொண்டு வந்த பையில் இருந்து சில துணிகளை எடுத்துக்கொண்டு தாத்தாவிடம் இருந்து விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டான் வருண்.

அவன் செல்வதையே வேதனையோடு வெறித்துக்கொண்டிருந்தார் ரங்கசாமி.

டுத்த நாள் தன் அறையில் உள்ள ஜன்னலின் வழியே தன் பேரன் வருகிறானா என்று நோக்கியபடி எதிர்பார்ப்போடு காத்திருந்தார் ரங்கசாமி. ஆறு மணியைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.

பேரன் இனி வரமாட்டான் என்ற உள்ளுணர்வு தட்டியதன் விளைவாக .இருக்கையில் சென்று அமர்ந்து கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார் ரங்கசாமி.

வாசலில் வருணின் குரல் கேட்டது. "தாத்தா"

"வா வருண் வா. உக்காரு. எங்க நீ வராம போய்டுவியோன்னு  பயந்துட்டேன்" என்று கூறியபடி மேஜையில் இருந்த சில பத்திரங்களை எடுத்து புரட்ட ஆரம்பித்தார் ரங்கசாமி.

"உன் அப்பன எங்கையும் கடன் வாங்க வேணான்னு சொல்லு. நம்ம கிட்ட சொத்து இருக்கும்போது அடுத்தவன் கிட்ட எதுக்கு கடன் வாங்கணும்? சிவகாமி கோச்சிக்குவா. உன் அப்பனுக்கு கூட தெரியாத ரகசியம் உங்கிட்ட சொல்லட்டுமா?" என்று பத்திரங்களை பார்த்தபடியே கேட்டார் ரங்கசாமி.

பேரனிடம் இருந்து பதில் இல்லை.

"இந்த ரகசியம் எனக்கும் சிவகாமிக்கும் மட்டுமே தெரியும். எங்களுக்கு கல்யாணம் ஆகி பல வருஷம் ஆகியும் குழந்தையே இல்ல. கடவுள்ல இருந்து டாக்டர் வரை எல்லாரையும் பாத்தாச்சு. ஆனா வாரிசு தான் வரல. எல்லா வசதியும் இருந்து அதை அனுபவிக்க குழந்தை இல்லனா அதை விட கொடுமையான விஷயம் எதுவும் இல்ல. ஒரு நாள், நாம ஒரு குழந்தைய தத்து எடுத்து வளத்தா என்னன்னு சிவகாமி என்கிட்ட சொன்னப்போ எனக்கு அதுல உடன்பாடு இல்ல. அவளுக்காக சரின்னு சொன்னேன். பிறந்து ஒரு மாசம் ஆன குழந்தைய நாங்க தத்து எடுத்து வளக்க ஆரம்பிச்சோம். நானாவது சில நேரத்துல அது நம்ம குழந்தை இல்லையேன்னு நெனச்சிருக்கேன். ஆனா சிவகாமி தன் வயித்துல பொறந்த பொறப்பாவே நெனச்சு பாசத்த பொழிஞ்சா. அந்த குழந்தை எது கேட்டாலும் இல்லன்னு சொல்லி நான் கேட்டதே இல்ல. நல்லா படிக்க வச்சு கல்யாணமும் பண்ணி மும்பைல கம்பெனி ஆரம்பிக்குறதுக்கு பணமும் கொடுத்தா" என்று கதை கூறுவதை நிறுத்திய ரங்கசாமி சில கணம் மெளனமாக சிவகாமியின் புகைப்படத்தை பார்த்தார்.

"கொஞ்ச நாளுல சிவகாமி கடவுள் கிட்ட போய் சேர்ந்துட்டா. அவ பொணத்த பாக்க வந்தான் அவ வளத்த புள்ள. அவளை அடக்கம் பண்ணுற வரை அவனுடைய கண்ணுல ஒரு சொட்டு தண்ணி இல்ல" என்று கண் கலங்கிய ரங்கசாமி. "ம்ம், அநாதை குழந்தைய தத்து எடுத்து நான் இப்போ அனாதையா வாழுறது தான் மிச்சம்" என்று கூறியபடி .பத்திரங்களில் தன் கையெழுத்தை போட்டு அருகில் உள்ள பேரனிடம் நீட்டினார்.

அங்கே பேரன் இல்லை. ரங்கசாமியின் கண்களில் கண்ணீர். இத்துணை நாட்களாய் தான் ஒரு கற்பனை வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்று கூட அவர் அறிவில் உரைக்கவில்லை. தன் எதிரே பேரன் இருப்பதை போலவே எண்ணி பேசி அழுகிறார்.

அழுது அழுது களைத்து கண்களை மூடி சிவகாமியின் பெயரை உச்சரிக்கிறார். அவர் கையில் பிடித்திருந்த பத்திரம் கீழே விழுகிறது. அவரது உடலை விட்டு உயிரும் பிரிகிறது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.