(Reading time: 8 - 15 minutes)

சிறுகதை - மசாலா கபே - சிவாஜிதாசன்

oldMan

மாலை நேர சூரியன் மறைந்து இருள் மெல்ல உலகை எட்டிப் பார்க்கும் ரம்மியமான நேரத்தில் தன் வீட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ரங்கசாமியின் காதுகளில் லோகநாதனின் சைக்கிள் சத்தம் கேட்டது.

"என்னடா லோகநாதா, உன் மருமகளுக்கு பிரசவம் ஆச்சே என்ன குழந்தை பொறந்துச்சு?" .

லோகநாதனிடமிருந்து பதிலேதும் வரவில்லை.

'என்ன பதில் சொல்லாம போறான். ஒரு வேளை பெண் குழந்தை பொறந்திடுச்சோ. ம்ம்ம்,  இன்னும் அந்த காலத்து மனுஷங்களாவே இருக்காங்க' என்று தனக்குள் கூறியபடி வீட்டினுள் சென்றார் ரங்கசாமி.

வீடெங்கும் தனிமையே நிரம்பி இருந்தது. தங்களுடைய கல்யாண புகைப்படத்தில் தன் மனைவியை சில கணம் நோக்கி விட்டு ஹாலில் உள்ள சோபாவில் சென்று அமர்ந்தார் ரங்கசாமி.

அவரது நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. மனைவி மற்றும் மகனுடன் சந்தோமாக வாழ்ந்த நாட்களை எண்ணிப்பார்த்து தனக்குள்ளாகவே ஒரு முறை சிரித்துக் கொண்டார்.

அப்பா! அம்மா அடிக்குறாங்க என்று மகன் ஓடி வர, ஏய் சிவகாமி! எதுக்கு நம்ம புள்ளைய அடிக்குற என ரங்கசாமி கேட்க, அவன் படிக்குற லட்சணத்துக்கு அடிக்காம ஆனந்தப்பட சொல்றிங்களா என்று கோபம் கொப்பளிக்க கூறிய சிவகாமியின் குரலை நினைவுகூர்ந்த ரங்கசாமி நிஜ உலகிற்குள் நுழைந்து நீண்ட பெருமூச்சை வெளியேற்றினார்.

'கடந்த கால நினைவுகள் போல இன்பம் தர விஷயமும் இல்ல துன்பம் தர விஷயமும் இல்ல' என்று தனக்குள்ளாகவே கூறிக்கொண்டு எதிரே இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்து புரட்டி பார்த்தார் ரங்கசாமி.

வாசலில் யாரோ வரும் அரவம் கேட்டு புத்தகத்தின் மீதிருந்த தன் கவனத்தை வாசலின் பக்கம் திருப்பினார். "யாரு வந்திருக்கிறது?" என்று கேட்டபடி இருக்கையில் இருந்து தடுமாறியபடி எழுந்த ரங்கசாமி சில கணம் சிலையானார்.

ஆறடி உயரத்தில் முதுகில் மாட்டியிருந்த பையை கழற்றியபடி உள்ளே நுழைந்தான் ஒரு வாலிபன். ரங்கசாமிக்கு அவனை சட்டென்று அடையாளம் காண முடியவில்லை.

"என்ன தாத்தா என்ன தெரியலையா? நான் தான் வருண்"

தாத்தாவின் முகத்தில் மகிழ்ச்சி குடிகொண்டது. "வருண் நீயா? அடையாளமே தெரியலப்பா. பாத்து நாலு வருஷம் இருக்குமா? எவ்வளவு உயரம் வளந்திருக்க. உன் அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்களா?" என்று வாசலை நோக்கி ஓடினார். ரங்கசாமி.

"இல்லை தாத்தா. அப்பாவுக்கு பிசினஸ் ப்ரொப்லெம். கம்பெனி லாஸ்ல போகுது. அவரால வர முடியல"

ரங்கசாமியின் முகத்தில் ஏமாற்றத்தின் சாயை விரிந்தது. "ஓ, அவன் குரல் கேட்டு ரொம்ப மாசம் ஆச்சுப்பா"

"இப்போ என்ன, உங்க பையன் குரல் கேக்கணும் அவ்வளவு தான. கொஞ்சம் இருங்க" என்று பேன்ட் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்த வருண் சில எண்களை அழுத்தினான்.

ஹலோ

ஹலோ டேட்

சொல்லு வருண். நீ எங்க இருக்க?

நம்ம வீட்டுல தான்பா. தாத்தா உங்க வாய்ஸ் கேக்கணும்னு ஆசைபடுறாரு. அவர் கிட்ட பேசுங்க.

"இப்போ நான் பிஸியா இருக்கேண்டா" என்று தன் அப்பா கூறுவதை காதில் வாங்காமல் ரங்கசாமியிடம் மொபைலை கொடுத்தான் வருண்.

நடுங்கிய கைகளோடு மொபைலை பெற்றுக்கொண்டவர், காதில் வைத்து மனம் நிறைய பாசத்தோடு தன் மகனை "சுந்தரம்" என்று அழைத்தார்.

சொல்லுங்கப்பா

எப்படிப்பா இருக்க?

நல்லா இருக்கேன்பா. நீங்க?

நல்லா இருக்கேன் வேளாவேளைக்கு சாப்பிடுறியா?

சாப்பிடுறேன் பா

எப்போ பா ஊருக்கு வர?

சீக்கிரமே வரதுக்கு ட்ரை பன்றேன்ப்பா

அடுத்த மாசம் பத்தாம் தேதி உன் அம்மாக்கு திவசம். அப்போ வர முடியுமா?

முயற்சி பண்றேன்பா

பிசினஸ் ஏதோ லாஸ்ல போகுதுன்னு வருண் சொன்னான்

அப்பா நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். உங்க கிட்ட அப்புறம் பேசுறேன்.

"சரிப்பா சரி" என்றபடி போனை பேரனிடம் கொடுத்தார் ரங்கசாமி.

"இப்போ சந்தோசமா என் தாத்தாக்கு" என்று ரங்கசாமியின் கன்னத்தை கிள்ளினான் வருண்.

ரங்கசாமி சிரித்தார். "அட போடா என்னைக்கு என் சிவகாமி என்னை விட்டு போனாளோ அப்போவே என் சந்தோசம் தொலைஞ்சி போச்சு" என்று கூறி சுவற்றில் மாட்டபட்டிருந்த புகைப்படத்தில் தன் மனைவியின் முகத்தை நோக்கினார்.

"நான் வந்தது உங்களுக்கு சந்தோசம் இல்லையா" என்றான் வருண் தன் இரு கைகளால் தாத்தாவின் தோள்களை பற்றியபடி.

நாளைக்கே நீ திரும்ப மும்பை போய்டுவ. இந்த சந்தோசம் நிரந்தரம் இல்லையே.

என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தவித்தான் வருண்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.