அன்றைய பொழுது கடந்த விதம் பற்றி கேட்டால் இருவருக்குமே சொல்ல தெரியாது.. மலர் என்ன பிரச்சினை என்று யோசித்து கொண்டு இருக்க, செழியனோ அவளிடம் எப்படி சொல்ல, என்ன சொல்வாள் ? என்ற சிந்தனையே ஓடியது.
நல்லவேளையாக அன்றைக்கு காலேஜே சற்று மந்த கதியில்தான் இருந்தது.. அனேகம் பேர் வந்தாலும், கிளாஸ் கவனிக்கும் மூட் பசங்களுக்கு இல்லை.. அதனால் கிட்டத்தட்ட எல்லா பேராசிரியர்களுமே ஏற்கனவே எடுத்ததை ரிவிசன் கொடுத்தனர். ஒரு சிலர் ரெகார்ட் வொர்க் இருந்தால் பார்க்க சொல்லி சென்றனர்.
மாலை முதலில் கிளம்பிய செழியன் நேராக காபி டே ஷாப் சென்று விட்டான். மலர் சற்று நேரம் கழித்து வந்தவள் , கபே உள்ளே அவனை தேட, அவளை பார்த்து கையசைத்து அவனிருக்குமிடம் வர சொன்னான்.
சற்று உள்ளே அடங்கி இருந்தது .. அதே சமயம் வெளிப்புறம் பார்க்கும் படியாகவும் இருந்தது.
மலரிடம் கேட்டு ஆளுக்கு ஒரு காப்சினோ ஆர்டர் செய்தவன், வெயிட்டர் நகரவும்,
“சொல்லுங்க இளா.. என்ன பிரச்சினை..?”
“ஹ்ம்ம்.. சொல்றேன்.. எங்க அப்பா என் கல்யாணம் விஷயத்தில் இறங்கி இருக்காங்க.. என்று சொன்னேனில்லையா ?”
“ஹ்ம்ம் .. ஆமாமா... ஆனால் அதை சமாளித்து விடுவேன் என்று சொன்னீங்களே..”
“இப்போவும் சமாளித்து தான் வந்துருக்கேன்.. ஆனால் அது எவ்வளவு தூரம் தாக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை.. அதான் உன்னிடம் பேசி, ஒரு முடிவு எடுக்கலாம் என்று இன்று இங்கு வர சொன்னேன்..”
“ஏன் .. என்ன விஷயம்.. ? பொண்ணு பார்க்க கூப்பிட்டாரா?”
“பொண்ணு முடிவு செய்துவிட்டார்.. ஆனால் இன்னும் யாரும் பார்க்கவில்லை..”
“புரியவில்லை..”
“நான் ஊரில் நடந்ததை சொல்கிறேன்.. பிறகு நீ சொல் “ என்றவன் முழுதும் சொன்னான்.. அவன் சொல்லி முடிக்கும் வரை குறுக்கிடமால் கேட்டவள், பிறகும் எதுவும் சொல்லவில்லை..
“நான் அங்கியே முதலில் நம்ம விருப்பத்தை பத்தி சொல்லிடலாம்ன்னு தான் நினைச்சேன். .ஆனால் ஊரில் சொந்தக்காரர்கள் அப்பா மீதும், என் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். நான் நம்மை பற்றி பேசினால், அதை அவரை மீறிய செயலாகத்தான் பார்ப்பார்கள்.. அது ஒருவர் காது மாற்றி போக போக என்னவெல்லாமோ பேச்சு வரும். அதோடு உன் நிலைமை எனக்கு தெரியாது.. நாம் காதலிக்க ஆரம்பித்து கொஞ்ச நாள்தான் ஆகிறது.. உன் வீட்டில் சந்தர்ப்பம் எப்படி என்று நான் யோசிக்க.. உன் சம்மதமில்லாமல் நான் என் வீட்டில் பேசி, அது வேறு மாதிரி பிரச்சினயை கொண்டு விடும்.. இது எல்லாம் யோசித்து தான் வேறு மாதிரி சமாளித்து வந்து விட்டேன்..
ஆனால் பிறகு யோசிக்க, யோசிக்க, நல்ல சந்தர்ப்பத்தை விட்டு விட்டோமோ என்ற எண்ணம் வருவதையும் தடுக்க முடியவில்லை.. இப்போ இதை எப்படி சால்வ் செய்யலாம்.. ?”
சற்று நேரம் அமைதியாய் இருந்தவள், காப்சினோ வரவும் இருவரும் அதை பருக ஆரம்பித்தனர்.
“ஏன் இளா? உங்கள் அப்பாவிற்கு என்னை பிடிக்காதா? “ என்று வினவினாள்.
இதை கேட்கும்போது அவளறியாமல் அவளின் கண்கள் கலங்கி இருந்தது.. மலரை பார்த்த நாளிலிருந்து இன்று வரை அவள் களை இழந்த முகத்தை கண்டதில்லை செழியன்.. இப்போது அப்படி அவளை பார்க்கவும், தன்னை அறியாமல் .
“லூசடி நீ.. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்ன யோசிக்கிற.. அப்பாவிற்கு உன்னை இல்லை என்னையே இப்போதைக்கு தெரியவில்லை.. அவர் எண்ணம் எல்லாம் அந்த பெண் குடும்பத்திடம்.. இதில் உன்னை பிடிக்குமா என்ற கேள்வி உனக்கு ஏன்டி? “ என்று வேகமாக பேசியவன் உணரவில்லை அவளை டி போட்டதை..
இதுவரை அவர்கள் நேசம் கொண்டு இருந்தாலும் , இருவருமே கல்லூரி ஆசிரியர்கள் என்பதால் பேசுவது எல்லாமே கண்ணியமாக இருக்கும்.. அந்த கண்ணியமே இருவரிடமும் ஒரு நூலிழை இடைவெளியும் ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இருவருக்கும் இன்றைய மனநிலையில் அந்த கண்ணியம் எல்லாம் பறந்து விட்டு இருக்க, அவர்களின் நேசம் நெருக்கமாகி இருந்தது.
அவளின் கலங்கிய மனமே , தங்கள் நேசத்தை பற்றி தெரியாதவருக்கு எப்படி தன்னை பிடிக்கும், பிடிக்காது என்று சொல்லுவார் என்ற எண்ணமே தோன்ற விட வில்லை. அவன் சொன்ன பிறகுதான் அதை உணர்ந்து இருந்தாள் மலர்..
அவளின் கலங்கிய முகம் செழியனை வேறு எதுவும் யோசிக்க விடாமல் , அவளின் கையை பிடித்து அழுத்தி தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
“நீ பயப்படாதே.. அப்பா ஊரில் இருந்து வந்த பின் நான் பேசி விடுகிறேன்..”
“அவர் இதை சொன்னால் உடனே சம்மதம் கொடுத்து விடுவாரா?”
“நிச்சயம் சம்மதிக்க மாட்டர்தான்.. நான் அவரிடம் கெஞ்சி, இல்லை மிரட்டி, இல்லை பிடிவாதம் பிடித்து சம்மதம் வாங்குகிறேன்..”
அவனின் அவசரத்தை பார்த்தவள்
“வேண்டாம் இளா.. இப்போ நீங்க செய்து இருப்பது தான் கரெக்ட்.. விஷயத்தை சற்று ஆற போடுங்க. ஏற்கனவே நீங்க உடனே சம்மதம் சொல்லவில்லை என்ற எண்ணத்தில் இருப்பவர், இதையும் கேட்டால் நம்மை பற்றின சரியான புரிதல் இருக்காது.. அப்படி அவர் சம்மதம் கொடுத்தாலும் கூட அது அரைகுறையாக தான் இருக்கும்.. அவர் முழு மனதோடு சம்மதம் தரும் வரை நாம் காத்து இருக்கலாம்.”