(Reading time: 8 - 16 minutes)

சந்தாவோ பார்வையை தரையிலேயே பதித்தபடி நின்றிருக்க,

“வாம்மா… போகலாம்… ப்ரசன் கூப்பிடுறான் பாரு… நாம அப்பா கார்லயே வீட்டுக்குப் போயிடலாம்… வா…” என நைனி சந்தாவின் கைப்பிடித்து இழுக்க, சந்தாவோ என்ன செய்ய என்று தெரியாது திணறினாள்…

சந்தா, முகம் வாட கலைவாணியைப் பார்த்திட, அவரோ அதைக் கண்டும் காணாதவாறு “ப்ரசன் நான் முன்னாடி போறேன்… நீங்க பின்னாடி வாங்க…” என அந்த நீங்க என்பதில் அழுத்தமாக கூறிவிட்டு அவர் அகல, சந்தாவிற்கோ மறுக்க வாயெடுக்க முடியவில்லை…

அவளின் அந்த நிலை அவனுக்கு கவலையூட்ட, அவளையேப் பார்த்தான்…

நைனி இல்லாதிருந்தால், இந்நேரம் அவள் பத்திரகாளி ஆகியிருக்கக்கூடும்… எனினும் தற்போது நைனியையும் வைத்துக்கொண்டு அவனோடு சண்டை போடவும் முடியவில்லை… அவனை எதிர்த்து பேசி உதறி தள்ளிக்கொண்டு செல்லவும் வழியில்லை…

இருதலைக்கொள்ளி எறும்பாய் அவள் தவிக்க, அவனே அவளுக்கு அந்நேரத்தில் உதவி செய்ய முன் வந்தான்…

“நைனி… நான் அம்மாவை கூட்டிட்டு வரேன்… நீ காருக்குப் போ…”

“நோ ப்ரசன்… நான் மம்மி கூட தான் வருவேன்…”

“வீட்டுக்குப் போனதும் ம்ம்மி உங்கூடவே தான் இருப்பாங்க… இப்போ மட்டும் ம்ம்மியை நான் கூட்டிட்டு வரேனே… ப்ளீஸ்…”

அவன் கெஞ்ச, நைனிக்கோ தன் ப்ரசன் தன்னிடம் கெஞ்சுகிறானே என்ற இரக்கம் உண்டாகி, “ஓகே ப்ரசன்… நீயே மம்மியை கூட்டிட்டுவா… ஆனா வீட்டுக்கு போனதும் மம்மிகூட நான் தான் இருப்பேன்…” என கையை ஆட்டி, தலையை ஆட்டி கூறிவிட்டு அவள் இரண்ட்டி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள், அதற்குள் ப்ரசன் போட்ட திட்டம் பலித்தது…

“நைனி நில்லு… நான் உங்கூடவே வரேன்…” என தன் பையை எடுத்துக்கொண்டு அவள் நைனியை அழைக்க, இப்போது நைனியோ ப்ரசனை பார்த்தாள்…

அவன் செல் என்பதுபோல் தலையசைக்க, நைனியும் அவனிடம் சரி என தலையசைத்தாள்…

ப்ரசன் அவளின் பையினை வாங்க கைகளை நீட்ட, அவள் தர மறுத்தாள்… பையோடு நைனியின் அருகே அவள் செல்ல,

அந்நேரம் “மம்மி… நீ எங்கூட வரணும்னா ஒரு கண்டிஷன்….” என புதிர் போட்டாள் நைனி…

“என்ன நைனிகுட்டி?...” அவள் மகளிடம் விசாரிக்க,

“என்னை நீ தூக்கணும்… அவ்வளவுதான்…” என தன் கைகளை அவளை நோக்கி உயர்த்தினாள் நைனி…

புன்னகையுடன் பையை கீழே வைத்துவிட்டு, மகளினை அவள் தூக்கிட, நைனியும் அவள் தோள் சாய்ந்த நேரத்தில், அதற்காகவே காத்திருந்த்து போல் கீழே இருந்த அவள் பையினை தன்வசப்படுத்திக்கொண்டான் ப்ரசன்…

அவள் முறைத்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாதவனாக அவன் காரை நோக்கி சென்றான்…

காரின் முன் கதவை அவன் அவளுக்காக திறந்து வைக்க, அவளோ அதை பொருட்படுத்தாது, பின் கதவினை திறக்க,

அவளின் கைகளில் இருந்த நைனியோ, “மம்மி ப்ரசன் கூட நாம முன்னாடி உட்கார்ந்து வரலாம்… அதான் நல்லாயிருக்கும்… வா…” என அழைத்திட,

“இல்லம்மா… நீ முன்னாடி உட்காரு… அம்மா பின்னாடி உட்கார்ந்து வரேன்…” என சட்டென சந்தா மறுத்திடவும், முகம் தூக்கி வைத்துக்கொண்டாள் நைனி…

மகளின் கோபம் அவளினை வாட்ட, மகளின் முகவாயைப் பற்றி அவள் தன் புறம் திருப்ப,

“நீ எங்கூட இருப்பன்னு தான சொன்ன… அதுக்குள்ள என்னைவிட்டு தள்ளி இருப்பேன்னு சொல்லுற?... ஏன் மம்மி?...” என ஏக்கத்தோடு நைனி கேட்ட கேள்வியில் பதில் பேச முடியவில்லை சந்தாவினால்…

அப்படி எல்லாம் இல்லை என மறுக்கவோ, இல்லை வேறொரு காரணத்தைக் கூறவோ அவளால் அந்நேரத்தில் கொஞ்சம் கூட முடியவில்லை… சிறு பிள்ளையின் மனது தாயின் பாசத்திற்காக வெகுவாக ஏங்குகிறது என்பதை அவள் மனம் உணர்ந்து கொண்ட வேளை, அந்த பிஞ்சு மனதின் வேதனை அவளை மௌனம் கொள்ள செய்தது அதிகமாகவே…

“நைனி, நீ அம்மா கூட பின்னாடி உட்கார்ந்து வந்தேன்னா, அம்மாவும் நீயும், ப்ரீயா விளையாடிட்டே வரலாம்ல… அதான் அம்மா முன்னாடி உட்கார வேண்டாம்னு சொல்லுறாங்கடா…”

ப்ரசன் மகளிடம் தன்மையாக விளக்கிட, சந்தா பதிலேதும் பேசிடவில்லை…

நைனியும் புரிந்து கொண்டவளாக, “ஓ… அப்போ நீ எங்கூட விளையாடிட்டு வர்றதுக்குத்தான் பின்னாடி உட்காரலாம்னு கதவைத் திறந்தீயா?... அதை எங்கிட்ட சொல்லவேண்டியது தான?... என்ன மம்மி நீ?...” என சற்றே கோபப்பட, சந்தாவோ லேசாக சிரித்துவிட்டு மகளோடு காரினுள் ஏறினாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.