“மஞ்சுளாக்கா….” என தோள் தொட்டு தீபன் எழுப்பியதுமே அவர் நனவுலகுக்கு வர,
“இன்னைக்கும் உருகிட்டீங்களா?...” அவன் கிண்டலாய் கேட்டிட,
“அட போங்க தம்பி… இரண்டு நாளா பாப்பாவோட பாட்டை கேட்காம வீடு வீடாவே இல்லை… இன்னைக்கு தான் நிறைஞ்சிருக்கு…”
அவர் புன்னகையும் பூரிப்புமாய் கூற, கற்பூரத்தட்டுடன் எழுந்த சாரு, மஞ்சுளாவின் முன்னே அதனை நீட்ட, அவரும் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார்…
தீபனும் சட்டென கைநீட்டி கும்பிட முயற்சி செய்கையில், சட்டென தட்டினை நகட்டிக்கொண்டாள் சாரு…
“ஹேய்… என்னடி?..”
அவன் முறைத்திட, “ஒழுங்கா போய் குளிச்சிட்டு வா… குளிக்காம கொள்ளாம வந்து தட்டு மேல கைவச்ச நான் பத்திரகாளி ஆகிடுவேன் சொல்லிட்டேன்…” என்றாள் அவள் கோபத்துடன்…
“ஆமா இப்போ மட்டும் என்ன?... பத்து கை ஒன்னு தான் இல்லை… மத்தபடி பத்து பொருத்தமும் அச்சுல வார்த்த மாதிரி அப்படியே இருக்கு…” என்றான் அவனும் புன்னகைத்துக்கொண்டே…
அவன் தலையில் ஓங்கி ஓர் கொட்டு வைத்தவள், “யாரு நான் பத்திரகாளியா?...” என அவனிடம் சண்டைக்கு நின்றவள்,
“மஞ்சுளாக்கா… இத கொஞ்சம் பிடிங்க…” என கற்பூரத்தட்டினை அவரிடம் கொடுத்தவள், தீபனை அடிக்க ஓடினாள் துரத்திக்கொண்டே…
“நல்ல பிள்ளைங்க…” என சிரித்துக்கொண்டே அவரும் சற்று நேரம் கழித்து டைனிங்க் டேபிளில் சாப்பாடை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்…
குளித்து முடித்துவிட்டு வந்த தீபன், பூரி, கிழங்கு குருமா, கேசரி, வடை என அமர்க்களமாய் இருந்த உணவின் வாசனையை நுகர்ந்து வாவ் என்றான் பரபரவென கைகளை தேய்த்துக்கொண்டே…
“இரண்டு நாளா இந்த சாப்பாடை மிஸ் பண்ணிட்டேன் மஞ்சுளாக்கா…. அதுக்கெல்லாம் சேர்த்து இன்னைக்கு ஒரு புடி புடிக்கப்போறேன் பாருங்க…” என்றவன் சாப்பாடை எடுத்து வாயில் வைத்து ரசித்து சுவைத்து உண்ண ஆரம்பிக்க, மஞ்சுளாவோ பார்த்து பார்த்து பரிமாறினார்…
“அதையும் எடுத்துவைங்க… இது… அது…” என தீபன் வாங்கி வாங்கி சாப்பிட
“டேய்… பாவி… எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைடா… மொத்தத்தையும் நீயே தின்னு தீர்த்துடாத….”
தீபனை திட்டிக்கொண்டே வந்து அமர்ந்தாள் சாரு…
“சாரு பாப்பா… தீபன் வளருற புள்ளை… அவனே பாவம் பேருக்குத்தான் சாப்பிடுறான்… நீ வேற ஏன் பாப்பா இப்படி சொல்லுற?...”
அவர் அவனுக்காக பரிந்து பேச, அவரை ஒரு பார்வை பார்த்தவள்,
“அதுசரி… யாரு இவன் வளருற புள்ளையா?... அதான் ஒரு பனைமரம் அளவு வளர்ந்துட்டானே… இன்னும் என்ன இருக்கு இவன் வளர?...” என்றாள் அவளும் சிரித்தவண்ணம்…
“ஏய்… போடீ… கண்ணு வைக்காத…” தீபன் சாப்பிட்டுக்கொண்டே திக்கித்திணறி கூற,
“ஆமா கண்ணு வச்சிட்டாலும்… மெதுவா தின்னு தொலைடா… சிக்கித்தொலைய போகுது…” என்றாள் சாரு மீண்டும் சிரித்தாலும் அக்கறையாக கூறியபடி…
“ஆமா தம்பி.. மெதுவா சாப்பிடுங்க… அவசரம் வேண்டாம்… நான் போய் சூடா இன்னும் இரண்டு பூரி போட்டு எடுத்துட்டு வரேன்.. இருங்க…” என அவசரம் அவசரமாக அவர் கூறிவிட்டு சமையலறைக்குள் நுழைய,
“இரண்டு இல்ல… மூணுக்கா…” என்றான் தீபன், சமையலறைக்குள் சென்ற அவரிடம்…
“சரி தம்பி… இதோ வந்துடுறேன்…” என அவர் உள்ளிருந்து குரல் கொடுக்க,
“தடிமாடு… தடிமாடு… தின்னு தின்னு எலும்புக்குள்ளே சேர்த்து வைச்சுக்கோ… கொஞ்சம் கூட வெயிட் போட்டுடாத…” என்றாள் சாரு அவன் ஒல்லியாய் இருப்பதை கருத்தில் கொண்டு அக்கறையுடன்…
“வொர்க் அவுட் பண்ணனும்டி… பின்ன உன்ன மாதிரி தின்னுட்டு தின்னுட்டு தூங்கவா முடியும்?...” என பேச்சு பேச்சாக இருந்தாலும் சாப்பாட்டில் அவன் கவனமாய் இருந்திட,
தம்பியின் செய்கையில் மனம் கனிந்தவளாய், “சரி சரி… பேசாம சாப்பிடு… புரையேற போகுது…” என்றவள் தன் பக்கமிருந்த வடையை எடுத்து அவனது தட்டில் வைத்திட,
“உனக்கு வேண்டாமா சாரு?...” என்றான் அவன் கேள்வியோடு…
“இல்ல தீபா… நீ சாப்பிடு… எனக்கு இது போதும்…” என இரண்டு பூரியை தட்டில் வைத்தபடி கொரித்துக்கொண்டிருந்தாள் அவள் மெதுவாக…
“என்ன போதும்?... அதெல்லாம் எதுவும் போதாது… ஒழுங்கா சாப்பிடு பாப்பா… ஆளே மெலிஞ்சு போயிட்ட…” என்றவாறு அவளது தட்டில் மேலும் இரண்டு பூரியினையும் ஒரு வடையினையும் மஞ்சுளா எடுத்து வைத்திட,
“அய்யோ மஞ்சுளாக்கா… என்ன இது?...” என அரண்டு போனாள் சாரு…
“சத்தம் மூச்… பேசாம சாப்பிட்டு எந்தி… அதுக்கு முன்னாடி எந்திச்ச அடிதான்…” என்றவாறு அதட்டினார் அவர்…
“இத்தனையையும் கண்டிப்பா என்னால சாப்பிட முடியாதுக்கா… அதனால பேசாம என்னை அடிக்க வேணாலும் செஞ்சிடுங்க…” என அவள் கெஞ்ச,
“உன்னை அடிக்கிறதா?... அது என்னால முடியுமா பாப்பா?...” என்றவர் சட்டென உணர்ச்சிவசப்பட,
“அய்யோ மஞ்சுளாக்கா… நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்… என்ன இது?.. இதுக்கெல்லாம் இமோஷனல் எல்லாம் ஆகிட்டு…” என சாரு அவரினை சமாதானப்படுத்த,
“இந்த வீட்டுக்கு நான் வேலைக்கு வந்து வருஷக்கணக்காசு… உன் அம்மா இறக்கும்போது உங்க இரண்டு பேரையும் பார்த்துக்குறது இனி என் பொறுப்புன்னு சொல்லிட்டு போனாங்க… அப்போ உங்க இரண்டு பேருக்கும் பத்து வயசு கூட இருக்காது… அப்போ இருந்து இப்பவரை உன்னையும் சரி தீபனையும் சரி என் சொந்த பிள்ளை மாதிரி தான் நான் பார்க்குறேன்மா… என்னால விளையாட்டா கூட உங்க இரண்டு பேரையும் அடிக்க முடியாதும்மா…” அவர் லேசாக தொண்டை கமற கூற, சாருவோ எழுந்து அவரை அணைத்துக்கொண்டாள் சட்டென…
தொடரும்
{kunena_discuss:1162}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.