(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 01 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

தயம்… விடிந்தும் விடியாத அந்த அதிகாலை வேளை… மலையின் பின்னே ஒளிந்து கொண்டிருந்த சூரியன் மெல்ல தன் கதிர்களால் உலகத்திற்கு வெளிச்சத்தைத் தர, அந்த உதயத்திற்காகவே தலைகவிழ்ந்து காத்திருந்த ஓர் இதயம், மெல்ல தன்னவனைப் பார்த்திட, எங்கிருந்து தான் வந்ததோ அவளின் முகத்தினில் அத்தனை நாணம்… சூரியனின் கதிரொளி தன் மீது படவே காத்திருந்தவள், அவனொளி பட்டதும், அழகான அவளது முகம் சிவந்து ஜொலிக்க, அவனோ அவளை அப்படியே தனக்குள் எடுத்துக்கொள்ள விழைய, அவளோ மெல்ல தலையசைத்து வேண்டாம் என்றாள்…

எல்லோரும் பெயருக்கு பின்னால் தான் கணவனின் பெயர் சேர்ப்பார்கள்… ஆனால் இவளோ தன் பெயருக்கு முன்னாலேயே சேர்த்து அவனுக்கானவள் நான்… அவனுடையவள் நான் என ஊரறிய உலகறிய பறைசாற்றிக்கொண்டிருந்தாள் அந்த சூரியகாந்தி…

அச்சூரியகாந்தி பூக்கள் நிரம்பியிருந்த பாதை வழி பயணித்துக்கொண்டிருந்த சாரு, தன் காரை நிறுத்திவிட்டு, மெல்ல அதனருகே வந்து அப்பூவினை ரசித்துக்கொண்டிருந்தாள்…

இது இன்று நேற்றல்ல… அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவள் ரசிக்கும் ஒன்று… அதுவும் அதிகாலை வேளையிலேயே…

காற்றின் இசைக்கு ஏற்ப பூவும் அசைந்தாட, அந்த சலசலப்பு ஒசையை அவள் தனக்குள் உள்வாங்கிக்கொண்ட வேளை, குயில்கள் குக்கூ என்ற ஓசை எழுப்ப, தன்னை மறந்து அந்த ரம்யமான சூழ்நிலையை ரசிக்க ஆரம்பித்தாள் அவள்…

“சாரு…. நாம இன்னும் ரொம்ப தூரம் போகணும்… ரசிச்சது போதும்… வா….”

சத்தம் கேட்டு அவள் திரும்ப, அங்கே நின்றிருந்தான் அவளின் தம்பி தீபன்…

“தீபா… இங்க பாரு… எவ்வளவு பூ… என்ன ஒரு அழகா இருக்கு…”

அவள் குதூகலித்துக்கூற, அவனோ அவளை முறைத்தான்…

“ஏண்டா என்னை முறைக்குற?...”

“பின்ன இன்னைக்குத்தான் புதுசா சொல்லுறமாதிரி குதூகலமா சொல்லுற?... வழக்கமா நீ பாடுற பாட்டுதான இது?...”

“ஏண்டா திமிருபிடிச்சவனே… உனக்கு என் சந்தோஷம் கிண்டலா இருக்கா?... அதுசரி குரங்குகிட்ட போய் ரசனையை பற்றி நான் சொன்னேன் பாரு என்னை சொல்லணும்…”

“குரங்கா?... நானா?... சரி… நான் தவ்வி தவ்வியே ஊர் வந்து சேருறேன்… நீ இந்த காரை ஓட்டிட்டு ஊர் வந்து சேரு… சரியா?...”

சொல்லிவிட்டு அவன் இரண்டடிகள் கூட எடுத்து வைக்கவில்லை… அவனின் முன்னே சென்று தடுத்தாள் அவள் வேகமாய்…

“என் செல்ல தம்பில்ல… அக்கா சும்மா சொன்னேண்டா… இதுக்கெல்லாம கோச்சுக்கிறது?...”

அவள் செல்லம் கொஞ்ச ஆரம்பிக்க, அவன் அவளை ஏற இறங்க பார்த்தான்…

“என்னடா அப்படி பார்க்குற?...”

“இல்ல நிஜமாவே நீதானா அதுன்னு எனக்கு சந்தேகமா இருக்கு?...”

“எது?....”

“கொஞ்சம் நேரம் முன்னாடி பேசுன பேச்சென்ன… இப்போ இங்க வந்து பூவை ரசிக்குறதென்ன?... இரண்டுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்?...”

“அப்படியா தோணுது உனக்கு.. எனக்கெதுவும் தெரியலைப்பா…”

அவள் தன் கைகளை விரித்துக்கூற,

“ஏங்க்கா தெரியாமத்தான் கேட்குறேன்… நீ எல்லாம் திருந்தவே மாட்டியா?...”

“ஏண்டா நான் என்ன தப்பு செஞ்சேன்?...”

“இந்த பூவில் அப்படி என்ன தான் இருக்கு?...”

அவன் கேட்டதும் சட்டென புன்னகைத்தாள் அவள்..

“ஆரம்பிச்சிட்டாப்பா…”

அவன் வாய்விட்டே கூற, அவள் மேலும் சிரித்தாள்…

“அக்கா ப்ளீஸ்… இன்னைக்காச்சும் சொல்லேன்…” அவன் கெஞ்ச, அவளும் அவனுக்கு பாவம் பார்த்து தம்பியிடம் சொல்லலாமா என யோசித்தாள்…

பின் தன் முடிவை மாற்றியவளாய் “சொல்லலாமே… வா…” என முன்னே அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பிக்க, அவனும் அவளை மௌனமாய் பின் தொடர்ந்தான்…

பின்னே அவனுக்கும் இது ஒன்று புதிதல்லவே… நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் இந்த கேள்வியை கேட்காத நாளும் இல்லை… அவள் சிரித்தே சமாளிக்காத நாளும் இல்லை…

தே நேரம்,

அந்த இடத்தை வேகமாக ஒரு கார் கடந்து சென்றது… சென்ற வேகத்தில் அது மீண்டும் திரும்பி அவ்விடத்திற்கு வர, காரின் கண்ணாடியைத் திறந்தவனின் கண்கள் மெல்ல அப்பூவின் மீது நிலை கொண்டது… பின்னர் சட்டென கண்ணாடியை தூக்கிவிட்டவன், காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்…

சில மணி நேர பயணத்திற்குப் பிறகு, அவனது கார் ஊட்டியின் வளைவுப்பாதையில் திரும்பி, அழகான அந்த வீட்டை அடைந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.