(Reading time: 12 - 23 minutes)

“கௌஷல்ய சுப்ரஜா…. ராம பூர்வா...” என சுப்ரபாதமாய் ஒலித்து முடித்துக்கொண்டிருந்த பாடல், அவனது கார் சத்தத்தினையும் மீறி அவனுக்கு கேட்டிட, சடன் பிரேக் போட்டு காரை நிறுத்திவிட்டு புயலென உள்ளே நுழைந்தான் அவன்….

வீட்டினுள் அடியெடுத்து வைத்த அவனது கால்கள் நேரே பாடல் ஒலிக்கும் திசையை நோக்கி செல்ல, அங்கே பாடிக்கொண்டிருந்த ரேடியோவை எடுத்த மாத்திரத்தில் தூக்கி போட்டு உடைத்தான் அவன் சட்டென…

“அம்மா………………”

அவனின் சத்தம் கேட்டு, உள்ளறையிலிருந்து கையில் கற்பூரத் தட்டுடன் வந்தார் கல்யாணி…

வந்தவர் மகனை பார்த்ததும்

“கௌஷி… வா கண்ணா…” என அவனை வரவேற்ற அடுத்த நொடியே, அவன் உடைத்த ரேடியோ கண்களில் தென்பட,

எதுவும் பேசாது மகனுக்கு நெற்றியில் விபூதி வைத்து கண்ணுக்குள் பட்டுவிடக்கூடாதென்று கையை வைத்து ஊதிவிட்டு நிமிர்ந்தார் அவர்…

அந்த செய்கையில் கோபத்தை இழந்தவன், தாயை வைத்த கண் வாங்காமல் பார்த்திட,

“யாரும்மா?...” என வினவிட,

“தம்பி… நான் தான் வேலைக்கு புது ஆளை கூட்டிட்டு வந்தேன் வீட்டுக்கு வேலைப் பார்க்க… அந்த சுந்தரி தான் கல்யாணிம்மா பூஜை செய்யுறதை பார்த்துட்டு பாட்டை போட்டு விட்டிருக்காங்க… மன்னிச்சிடுங்க…”

என அவனின் வீட்டில் வேலை பார்த்திடும் சங்கரன் மன்னிப்பை வேண்ட, அவரின் அருகே சென்றவன்,

“என்ன சங்கர் அண்ணா… நீங்களாவது அந்த அம்மாக்கு சொல்லியிருக்கக்கூடாதா?...” என ஆதங்கத்துடன் கேட்டிட,

“இல்ல தம்பி… நீங்க இந்த நேரம் வருவீங்கன்னு அவங்க மட்டுமில்ல நாங்களும் எதிர்பார்க்கலை… அதான் தப்பு நடந்துட்டு…”

அவர் தன் மனதிலிருந்து கூற, அதற்கு மேல் அவரிடம் கோபம் கொள்ள தோன்றாது,

“இனியாச்சும் இது மாதிரி எதுவும் செய்யாம பார்த்துக்கோங்கண்ணா... ப்ளீஸ்…” என கைகூப்பி கேட்டிட,

“என்ன தம்பி… நீங்க போய் எங்கிட்ட இப்படி கேட்டுகிட்டு…” என உணர்ச்சிவசப்பட்டவர், “நான் இனி கவனமா பார்த்துக்குறேன் தம்பி…” என உறுதியளித்திட, அவனும் சரி என்ற தலையசைப்புடன் தாயிடம் திரும்ப,

“போன விஷயம் நல்லபடியா முடிஞ்சதா கண்ணா…” என கல்யாணி சற்றும் முகம் மாறாமல் கேட்டிட,

அவரின் கைப்பிடித்து அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தவன், அவரது காலின் கீழே அமர்ந்து கொண்டான்….

“அம்மா… என் மேல எதுவும் கோபமா உங்களுக்கு?...”

கல்யாணியின் பார்வை தீர்க்கமாய் மகன் மேல் பதிய, அவரோ மகனையே பார்த்திருந்தார்…

“சொல்லுங்கம்மா… என் மேல கோபமா?...”

அவன் மீண்டும் கேட்டிட,

“உன் மேல அம்மாக்கு என்னைக்குமே கோபம் வராது கண்ணா… சரியா?...” என மகனின் நெற்றி முட்டி சிரித்தவரின் கைகளை விடாமலேயே பிடித்துக்கொண்டவன்,

“அப்போ நான் நடந்துகிட்ட விதம் உங்களுக்கு கோபத்தை உண்டாக்கலையா?...” என கவலையாய் கேட்டிட,

“இல்லப்பா… நீ தூக்கி போட்டு உடைச்சது பொருளைத்தானப்பா… மனசை இல்லையே….”

கல்யாணி புன்னகையுடன் கூறிட, அவனோ தாய் சொல்ல வருவது புரியாமல் அவரை தலைசாய்த்து பார்த்திட்டான்…

மகனின் தலைகோதிக்கொண்டே, “உனக்கு பிடிக்காத ஒன்னு நடந்த போதும், அதுக்கு காரணமானவங்க மேலயும் சரி, சங்கரன் மேலயும் சரி உனக்கு கோபம் வரலையே… அவங்க மனசு நோகுற மாதிரி ஒரு வார்த்தைக்கூட நீ சொல்லலையே…” என்றார் கலைவாணி…

“அப்போ நான் செஞ்சது தப்பில்லையாம்மா?...”

“உனக்கு பிடிக்காத விஷயத்தால உனக்கு கோபம் வந்து நீ பொருளைதான உடைச்ச… கோபப்பட்டு அவங்களை திட்டி அவங்க மனசை நீ உடைக்கலையே… மனசை உடைச்சிருந்தா தான் தப்பு…”

“அம்மா?....?...”

“ஆமாப்பா… உனக்கு கோபம் வந்து நீ தூக்கி போட்டு உடைச்சது கூட உன் மனசு அந்த இடத்துல அந்த நேரத்துல உடைஞ்சி போனதால தான…. அம்மாக்கு அது புரியும்… தெரியும்… என் பையன் தப்பு செய்ய மாட்டான்…” அவர் மகனின் கன்னம் தொட்டு சொல்ல,

“சாரிம்மா… ஆனாலும் நான் செஞ்சது தப்புதான்… மனுஷங்க மனசை நான் உடைக்கலைன்னு சொன்னீங்க… ஆனா ஒரு பொருளை நான் உடைச்சது தப்புதானம்மா… சாரிம்மா… நானும் எவ்வளவோ என்னை கன்ட்ரோல் செய்ய முயற்சி செஞ்சாலும் என்னையும் மீறி சில நேரங்களில் இப்படி நான் நடந்துக்குறேன்… என் நடத்தை உங்களுக்கு நிச்சயமா வருத்தத்தை தானம்மா கொடுத்திருக்கும்… அதை என்னாலும் புரிஞ்சிக்க முடியுதும்மா…” என அவன் தன் தாயின் மனம் நோகும்படி செய்துவிட்டேனே என்ற வருத்தத்தில் பேச,

“நீ எங்கூட இருக்குறவரை எனக்கு எந்த வருத்தமும் கிடையாது…” என சொல்லி சிரித்தவர், மகனை சாப்பிட அழைத்துச் சென்றார் அடுத்த நொடியே…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.