(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 03 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

னதறையில் ஜன்னலின் வழி வெளியேப் பார்த்துக்கொண்டிருந்த மகனின் அமைதி கல்யாணிக்கு சொல்லொண்ணா வருத்தத்தினை பரிசளித்தது.…

அதே நேரம், தாய்க்கு முதுகுகாட்டி நின்றவனின் உள்ளமோ உலைக்களமாய் கொதித்துக்கொண்டிருந்தது மளமளவென… அதை அறிந்து தான் கல்யாணி மகனிடம் பேச வந்தார்…

அவனின் அவ்வமைதியை அவர் கலைக்க முற்பட்டு, “கௌஷிக்… கண்ணா…” என அழைத்தார்…

தாயின் குரல் கேட்டு திரும்பியவன், “அம்மா… வாங்கம்மா… ஏன் அங்கேயே நிற்குறீங்க… உள்ளே வாங்க….” என அழைத்திட, அவரோ அங்கேயே நின்றார்…

“அம்மா……” அவன் சற்றே ஆதங்கத்துடன் அழைத்தவாறு தாயின் அருகே சென்றான்… அவரின் கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தான்…

“என்னம்மா இது புதுப்பழக்கம் எல்லாம்?...”

அவன் தாயின் முகம் பார்த்தவாறு கேட்டிட,

“எதை சொல்லுற கண்ணா?...” என்றார் அவர் கேள்வியோடு…

“இப்படி வெளியே நின்னுட்டு உள்ள வரவா வேண்டாமான்னு பண்ணிட்டிருந்தீங்கள்ள ஒரு யோசனை… அததான் சொன்னேன்…”

அவன் பதில் கூறவும், “ஆமா கண்ணா… உங்கிட்ட கேட்டு உள்ளவரலாம்னு நினைச்சேன்… அது தப்பா?...” என கல்யாணியும் கூறியதும், கண்களில் கோபம் உண்டானது அவனுக்கு…

“அம்மா… நான் உங்க மகன்… எங்கிட்ட நீங்க எதையும் கேட்கக்கூடாது… உரிமையோடு நடந்துக்கணும்…”

அவன் சட்டென கூறிட, மகனை ஓர் பார்வை பார்த்தவரின் மனம் கனிந்தது…

புன்னகை உதட்டினில் லேசாக உதயமாக அதனை உதட்டுக்குள்ளேயே புதைத்தவர் வெளியே அவனிடத்தில், “எனக்கு கச்சேரி பார்க்கணும் போல இருக்கு கண்ணா… கூட்டிட்டு போறீயா?…” என்றதும், மகனின் முகம் மாறுகிறதா என கூர்ந்து பார்த்திட்டார் அவர்…

கல்யாணியின் ஏக்கம் மிகுந்த வார்த்தைகள் அவனை அசைத்து பார்த்திட, தாயின் ஏங்குகின்ற மனமானது அவனுக்கு தென்பட்டதோ!!!...

“சரிம்மா… போகலாம்…”

சட்டென வந்தது அவனது குரல்…

மகனின் வார்த்தையில் பட்டென புதைத்து வைத்திருந்த புன்னகை தோண்டி எடுக்காமலேயே வெளிவந்துவிட, அந்த புன்னகையை நிறைவாய் பார்த்திட்டான் அவன்…

அந்த பார்வையைக் கண்டு மனம் நிறைந்து போனார் கல்யாணி….

இதுதான் தன் மகன் கௌஷிக்…. ஆயிரம் வெறுப்புகள் இசையில் அவனுக்கு இருந்தாலும், தான் கேட்டதும் மறுக்காமல் உடனேயே சரி என்று சொன்னானே… அதுதான் அவரின் மகன்…!!!

தான் வளர்த்த தன் மகன்!!!... நிறைவில் பூரித்து உள்ளம் குளிர்ந்து போனார் கல்யாணி…

எதை நினைத்து மகனின் அறை வாசலுக்கு வந்து நின்றாரோ அது இன்று சண்டை இடாமல், மிரட்டாமல், புரிய வைத்திடாமல், இது எதுவுமே செய்யாமல் நிகழ்ந்தே விட்டதே…

எனில் அவரின் மகிழ்ச்சிக்கு என்ன குறை இருந்திட முடியும்?....

தாயின் முகத்தில் இருந்த நிறைவான புன்னகையைக் கண்டு, உவகைக்கொண்டான் கௌஷிக்…

“உங்க முகத்துல ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத்தான்ம்மா இவ்வளவு சந்தோஷத்தைப் பார்க்குறேன்… இப்படியே நீங்க எப்பவும் இருக்கணும்மா…”

தாயின் கரங்களைப் பிடித்தவாறு அவன் கூற,

அவரோ, “அப்போ இத்தனை நாள் நான் சந்தோஷமா இல்லையா கௌஷிக் கண்ணா?...” என கேள்வி கேட்டிட,

“உங்க முகத்துல எப்பவுமே இந்த அழகான புன்னகை இருக்கும் தான்ம்மா… ஆனா இன்னைக்கு அது கொஞ்சம் மெருகேறியிருக்கு… அது இன்னும் என் அம்மாக்கு அழகு சேர்க்குது….” என்றான் அவன் தாயின் கரத்தினை தன் கன்னத்தில் வைத்தபடி…

மகனின் வார்த்தைகள் அவருக்கு புரிந்திட, “என் மேல கோபம் வரலையா கண்ணா உனக்கு?...” என கேள்வி தனை  நிறுத்திவிட்டு அவனை பார்த்தார்…

“எதுக்கும்மா கோபம் வரணும்?... என் பிடிவாதம் என்னைக்கும் உங்களை பாதிக்க நான் விடமாட்டேன்ம்மா… எனக்குத் தெரிஞ்சு நீங்க க்ச்சேரிக்கு போகணும்னு ஆசைப்படுறது இதுதான் முதல் தடவை… எங்கிட்ட இதுவரைக்கும் நீங்க எதையுமே கேட்டது இல்லை.. முதல் தடவை கேட்டிருக்கீங்க…. எப்படிம்மா நான் மறுப்பேன்?...”

தாயின் உள்ளம் புரிந்தவனாய் அவன் உரைத்திட, மகனின் நெற்றி மீது முத்தமிட்டு மகனை அணைத்துக்கொண்டார் கல்யாணி பாசத்துடன்…

நெஞ்சத்தில் மகன் சிரம் இருக்க, அவரது கண்களில் கண்ணீர்த்துளிகள் திரண்டு நின்றது விழப்போவதற்கு தயாராக…

சட்டென நிமிர்ந்தவனது கண்களுக்குள் கல்யாணியின் கண்ணீர்த்துளிகள் விழ, அந்த விழி நீரும், அவரது விழிகளும் சொன்ன சேதியில் அவன் உள்ளம் கனத்தது…

கனம் தாங்காது அவன் மிடறு விழுங்கிட, மகனின் கேசம் கோதி, “ஒன்றுமில்லை….” என அவர் தலையசைத்திட,

லேசாக ஒட்டிக்கொண்ட புன்னகையுடன் உள்ளம் முழுதும் வேதனை ஆக்கிரமிக்க தாயைப் பார்த்திட்டான் அவன்…

“ஒன்றுமில்லை….” என்பதில் அவனுக்குப் புரிந்திடாத ரகசியமா?.... மனமானது நினைத்திட, கரங்களோ தாயின் கண்ணீரை துடைத்துவிட்டது உடனேயே….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.