(Reading time: 10 - 19 minutes)

சாரு ரெடியா?.. போகலாமா?...”

தீபன் காரில் அமர்ந்து கொண்டு ஹாரன் அடித்தான் சத்தமாக…

“இருடா… வரேன்… ஹாரன் அடிச்சி ஊரைக்கூட்டாத…”

திட்டிக்கொண்டே, தன் கம்மலை சரி செய்து கொண்டு வந்த சாருவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் தீபன்…

“மஞ்சுளாக்கா… நாங்க போயிட்டு வரோம்… நீங்க நேரத்துக்கு சாப்பிடுங்க… நாங்க சீக்கிரம் வந்துடுவோம்… சரியா?...”

கிளம்புகிற தகவலை சொல்லிவிட்டு, அவரது பதிலை எதிர்பார்த்து காத்திருந்தவளிடம்,

“நான் சாப்பிடுறது இருக்கட்டும்… நீங்க இரண்டு பேரும் நைட் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடணும்… வெளியே எங்கேயும் சாப்பிடக்கூடாது…. சரியா?...” அவர் கண்டிப்புடன் கூறிட,

“தங்கள் உத்தரவு…” என சிரித்துக்கொண்டே சொன்னவள், காருக்கு அருகில் வர, தீபனின் பார்வை அவளுக்கு கேள்வியை எழுப்பியது…

“ஹாரன் அடிச்சு உசுரை வாங்கிட்டிருந்த… இப்போ என்னடான்னா சைக்கிள் கேப்ல ஆஃப் ஆகிட்ட… என்னடா ஆச்சு உனக்கு?...”

தம்பியின் தோள் தொட்டு அவள் உசுப்ப, சட்டென சுய உணர்வு பெற்றான் அவன்…

“டேய்… தீபா… என்னடா ஆச்சு உனக்கு?...”

கவலையாய் அவள் கேட்டாள் அவனிடம்…

“சாரு… எனக்கு தெரியாம உன்னைப் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை எதும் வர சொல்லியிருக்கியா என்ன?...”

தீபனின் வார்த்தகளில் முதலில் கோபம் கொண்டவள், பின் பட்டென சிரித்துவிட்டாள்…

“ஏய்… நான் சீரியசா கேட்குறேன்… நீ சிரிக்குறீயா?...”

அவன் சற்றே கோபம் கொள்ள,

“போடா… உனக்கு வர வர காமெடி சென்ஸ் அதிகமாகிட்டே போகுது…” என சிரித்தவள், “முதல்ல வண்டியை எடு… நேரமாகுது…” என அவசரப்படுத்தினாள் அக்கணமே…

பதிலுக்கு அவளோடு வாதிடாமல், தன்னருகில் அமர்ந்த தமக்கையின் அந்த அலட்டல் இல்லாத அழகினை மனதிற்குள் மெச்சியபடி காரை செலுத்தினான் அவனும்…

அந்த பெரிய ஹாலில், “வாங்க கௌஷிக் சார்…”

கௌஷிக்கினை வரவேற்றான் அவனிடத்தில் பணிபுரிந்திடும் ஒருவன்…

அவனிடத்தில் புன்னகைத்தவன், கார் கதவைத் திறந்து உதவி செய்தான் கல்யாணி இறங்குவதற்கு…

கல்யாணியின் கண்கள் அந்த இடம் முழுதும் ஓர் முறை நின்று நிதானமாக சென்றுவர, கால்களோ அவசரமே படாது மெல்ல அவ்விடத்தில் பதிந்தது…

எத்தனை வருடங்கள்!!!!!!!!!.... எண்ணிப் பார்த்திடவே பிரமிப்பாய் இருந்தது அவருக்கு….

“அம்மா….” கௌஷிக் அவரின் தோள் தொட்டு அழைத்திட, மகனை நிமிர்ந்து பார்த்தார் அவர்…

“உள்ளே போகலாம்மா… வாங்க…”

இரண்டடி எடுத்து வைத்தவரின் விரல்கள் லேசாய் நடுக்கம் கொள்ள, அதனை ஆதரவாய் பற்றிக்கொண்டான் அவன்…

கல்யாணியின் கண்கள் மகனிடம் வந்து நிற்க, சிறு தலையசைப்புடன் கூடிய புன்னகை அவனிடமிருந்து வெளிப்பட, அவருக்கோ மனதிற்கு இதமாய் இருந்தது…

ஓன்றிரண்டு ஆட்களே அந்த பெரிய ஹாலில் தென்பட, தாயை அழைத்துக்கொண்டு முன்னேறினான் அவன்…

“உட்காருங்கம்மா….”

கல்யாணியை அவன் அங்கிருந்த இருக்கையில் அமர்த்திட, அவரோ மகனின் கைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்…

“நான் இங்கதான்ம்மா இருப்பேன்…”

அவனின் வார்த்தைகள் அவருக்கு தைரியத்தினை அளித்திட, புன்னகைத்தபடியே மகனிடம் சரி என்றார்…

“கணேஷ்…. அம்மாவப் பார்த்துக்கோங்க… புரோகிராம் முடிஞ்சதும் எனக்கு உடனே கால் பண்ணு… நான் வந்துடுவேன்…”

தன்னிடம் பணிபுரிபவனிடம் கௌஷிக் கூறிட, அவனும் சரி என்றான் மறுகணமே…

கௌஷிக் கிளம்ப போகும் வேளை, கல்யாணியின் வார்த்தைகள் அவனை அங்கிருந்து நகரவிடாது கட்டிப்போட முனைந்தது மெல்ல…

“இங்கதான கண்ணா இருப்ப?...” என…

சிறுகுழந்தையாய் தாய் தன்னிடம் கேட்டிட, “இங்க வெளியே கார்ல தான்ம்மா இருப்பேன்… புரோகிராம் முடிஞ்சதும் உங்களை கூட்டிட்டுப் போக வந்துடுவேன்…” என்றான் அவனும் தாயின் ஏக்கத்தினைப் புரிந்த மகனாய்…

“சரிப்பா…” என்றவருக்கோ மகன் இந்த அளவு இங்கே வந்ததே பெரிய விஷயம் என்று தோன்றியது… அதுவும் தனக்காகவே அவன் இத்தனையையும் தாங்கிக்கொண்டு இங்கே வந்திருக்கிறான் என்ற உண்மையும் அவருக்கு அந்நேரத்தில் புரியாமல் இல்லை…

“பார்த்தும்மா…” என்றவனது விழிகள் சுற்றிலும் இரண்டு மூன்று முறை நோட்டமிட்டுவிட்டது… பின், கணேஷிடம், தலையசைத்தபடி வெளியேறினான் அவன் விருட்டென்று…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.