தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 07 - மது
AT THE END OF INFINITY
ஹர்ஷாவிற்கு கட்டுக்கடங்காத கோபம். தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான்.
“என்னவோ அவ கைய பிடிச்சு நான் இழுத்த மாதிரி சீன் போடுறா”
“ஹாரர் பிசாசு. கம்ப்ளைன்ட் செய்வாளாம். செய்யட்டுமே”
ஆண் பெண் வித்தியாசம் இன்றி தோழமையுடன் அவன் கை பற்றிக் கொள்வதும் தோள் தட்டிக் கொடுப்பதும் உண்டு தான். ஆனால் ஒரு போதும் அவன் ஒழுக்கம் பிறழ்பவன் இல்லை.
அவன் ஹரிணியின் கைப் பற்றி நிறுத்தியதைத் தவறாக எண்ணியது அவனுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.
ஒழுக்கம்.
சாரதா மகனுக்கு பாலூட்டும் போதே ஊட்டி வளர்த்தது ஒழுக்கத்தை. ஹர்ஷாவின் நாடி நரம்புகளில் ஒவ்வொரு அணுவிலும் ஒழுக்கம் நிறைந்திருக்க அவனே பிடிவாதமாக நினைத்தாலும் அவனால் ஒழுக்கம் பிறழ இயலாது. ஏதேனும் ஓர் ரூபத்தில் எங்கிருந்தாவது தடை வந்து சேரும்.
தில்லியில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்த பொழுது நண்பர்களோடு பார்ட்டி சென்ற இடத்தில் நண்பர்கள் அனைவரும் மதுபானம் அருந்த பிடிவாதமாய் மறுத்து விட்டிருந்தான்.
அம்மாவிற்குப் பிடிக்காது என்பது ஒரு புறம் எனினும் அவனுக்கே அதில் நாட்டம் இருந்ததில்லை.
இருப்பினும் கூடி இருந்தவர்கள் அவனை கேலி செய்யவே ஒரே ஒரு கோப்பை அருந்தி அவர்கள் வாயை அடைக்க வேண்டும் என்று எண்ணியவன் மதுக்கோப்பையைக் கையில் ஏந்தி அருந்த சென்ற பொழுது பணியாளர் ஒருவர் தடுமாறி அவன் மீது சாய அவன் கையில் இருந்த கோப்பை கீழே விழுந்து நொறுங்கி சிதறியது.
ஒரு கணம் திகைத்து தான் போனான் ஹர்ஷவர்த்தன்.
அந்த பணியாளர் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார். எல்லோரும் ஹர்ஷா அவர் மீது சினம் கொள்வான் என்று எதிர்பார்த்திருக்க அவனோ அவரின் தோளில் தட்டி விட்டு அகன்று சென்றான்.
அந்த வார இறுதியிலேயே அன்னையிடம் சென்று அனைத்தையும் ஒப்பித்து விட்டான்.
“அம்மா ஐ ஆம் சாரி மா.” குழந்தை போல அரற்றிக் கொண்டே இருந்தான்.
“ஹரி கண்ணா. அழாத. உன் மனசுக்கே தப்புன்னு தெரிஞ்சும் நீ செய்தது கண்டிப்பா தவறு தான். ஆனாலும் நீ அதை உணர்ந்துட்ட. இனிமே எப்போவும் இதை நீ செய்யவே மாட்டன்னு எனக்குத் தெரியும்” மகனை ஆறுதல் படுத்தினார்.
புகை பிடித்தாலும் மது அருந்துதலும் உடல் நலத்திற்கு கேடு என்று நன்றாக தெரிந்தும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலர் அதை சட்டை செய்வதில்லை.
“நாம மெடிகல் ஸ்டுடன்ஸ். லிமிட்டோட இருந்தா ஒன்னும் ஆகாது. அந்த லிமிட் நமக்குத் தெரியும்” என்று பெருமையாக வேறு தங்கள் செயலை நியாபப்படுத்திக் கொள்வார்கள்.
“பிரின்ஸ் ஆச்சரியமா இருக்கே. உங்க ராயல் பேமிலில இதெல்லாம் சாதாரணம் ஆச்சே” சக மாணவர்கள் சீனியர்கள் கேட்பதுண்டு.
தனக்கு பிடிப்பதில்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொள்வான்.
ஆனால் ஹரிணி அப்படி எல்லாம் ஒதுங்கி போய்விடுபவள் இல்லை.
முதலாம் ஆண்டு இறுதியில் தேங்க்ஸ்கிவிங் லஞ்ச் பார்ட்டி நடைபெற்ற போது பார்ட்டி முடிந்து அனைவரும் மாலை பீச்சுக்கு செல்வதாக திட்டம் போட்டனர்.
எப்போதும் இதில் எல்லாம் ஒதுங்கிக் கொள்ளும் ஹரிணி பீச் என்றதும் விருப்பத்தோடு சென்றாள்.
அங்கே மாணவர்கள் சிலர் புகை பிடித்துக் கொண்டிருக்க அவர்களை சரமாரியாக சாடினாள்.
“என்னடி! இவ எப்போதும் அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா. இப்ப என்னாச்சு” ரஞ்சனியின் காதைக் கடித்தனர் மற்ற பெண்கள்.
“நாங்க ஸ்மோக் செய்தா உனக்கென்ன” மாணவர்கள் எகிறினர்.
“ஹ்ம்ம் லங் கான்சர் பாஸிவ் ஸ்மோகிங்னாலே கூட வரும்னு தெரியாது. போ போய் உன் ரூமை அடிச்சிட்டு புகை எல்லாம் பிடிச்சு உன் லங்க்ஸ்ல நிரப்பிக்கோ. வெளில விட்டா இப்படி தான் கேட்பேன்”
அப்போது கையைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவை பார்த்து ஒரு முறை வேறு விட்டாள்.
பிரின்ஸ்க்கு இந்த பழக்கங்கள் ஏதுமில்லை என்று மாணவியர் அப்போதும் புகழ் பாட கடுப்பானாள் ஹரிணி.
“என்னவோ அது பெரிய அசீவ்மன்ட்ன்னு பெருமை வேற.. நல்ல பழக்கங்கள் இருப்பது பேசிக் குவாலிட்டி” அவள் சொன்னது ஹர்ஷா உட்பட அனைவருக்கும் நன்றாக கேட்டது.
இந்த சம்பவமும் ஹர்ஷவர்தன் மனதில் வந்து போக
“அப்போ எனக்கு அந்த பேசிக் குவாலிட்டி கூட இல்லைன்னு சொல்றாளா. இனிமே அவ பக்கம் திரும்பிப் பார்க்கவே மாட்டேன்” உறுதியாய் சொல்லிக் கொண்டான்.