(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 03 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ழிலரசி அறைக்குள்ளேயே அடைந்திருப்பதை உணர்ந்து பூங்கொடி அவளை தேடி அங்கு வந்தார். வந்ததிலிருந்தே அவள் முகம் சரியில்லாமல் இருந்ததை அவர் அறிந்து தான் இருந்தார். இருந்தாலும் வேலைகளின் நடுவே அதை கேட்க முடியவில்லை..

இப்போது தன் தங்கை மங்கை வந்ததும், பொறுப்பை அவர் கையில் எடுத்துக் கொண்டார். கலையரசி வேறு அவருடன் இருந்ததால், பூங்கொடி எழிலை காண வந்தார். அவர் உள்ளே வரும்போதும் எழில் கட்டிலில் தான் உட்கார்ந்திருந்தாள்.

“எழில் என்னாச்சு? வந்ததுல இருந்து ரூம்லயே அடைஞ்சு கிடக்குற.. பையனுக்கு அத்தை, பொண்ணுக்கு சித்தி, உனக்கு இங்க எவ்வளவு வேலை இருக்கு.. அதையெல்லாம் விட்டுட்டு இங்க உக்கார்ந்திருக்க..?”

“நீங்க போங்க அண்ணி.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்..”

“ஆமாம் என்னாச்சு.. சுடர் ஏதாச்சும் பிரச்சனை பண்ணாளா?”

“இல்ல அண்ணி.. அவ ஒன்னும் பண்ணல.. நான் தான் அவளை லண்டனுக்கே திரும்பி போகச் சொல்லிட்டேன்..”

“என்ன சொல்ற எழில்.. எதுக்காக அப்படி சொன்ன? அவளோட அப்பா, சித்தி எல்லாரும் இங்க இருக்கப்ப, அவ ஏன் லண்டனுக்கு போகனும்? என்ன இருந்தாலும் நீ அப்படி சொல்லியிருக்க கூடாது?”

“என்னை வேற என்ன செய்ய சொல்றீங்க அண்ணி.. அவ செஞ்சு வச்ச காரியமெல்லாம் போதாதா? மகிக்கும் அருளுக்கும் நிச்சயதார்த்தம்னு கேள்விப்பட்டதுல இருந்து அவ ரூம்லயே அடைஞ்சுக் கிடக்கறா.. அவ என்ன செய்வான்னு சொல்ல தெரியல.. தப்பா ஏதாச்சும் செஞ்சுக்குவாளோன்னு பயமாவும் இருக்கு.. ஆனா அவ முகத்தை பார்த்தா.. திரும்ப ஏதாச்சும் பிரச்சனையை இழுத்து விடுவாளோன்னும் இருக்கு.. அதான் பேசி புரிய வைக்க முயற்சி செஞ்சேன்..  அவ எதையும் காது கொடுத்து வாங்கல.. அதான் கொஞ்சம் கோபத்துல நீ இங்க இருக்க வேண்டாம்.. லண்டனுக்கே போய்டு.. ஆனந்திக்கிட்ட நான் போன் செஞ்சு சொல்றேன்னு சொன்னேன்.. கொஞ்ச நாளாவது அவ அங்க இருந்துட்டு வரட்டுமே அண்ணி..”

“லண்டனுக்கே போய்டுன்னு சொல்லிட்டு, கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும்னு சொல்ற.. நீ பேசினத அவ அப்படி புரிஞ்சுப்பாளா சொல்லு? என்ன இருந்தாலும் நீ அப்படி பேசியிருக்கக் கூடாது.. அவளோட அப்பா சொல்லியிருந்தா அது வேற வழி..”

“ஆனா அவரோ நான் கரெக்டா தான் பேசியிருக்கேன்னு சொல்றாரு.. இதுதான் நல்ல முடிவுன்னும் சொல்றாரு..”

“அவர் இப்போ அப்படி சொல்லலாம்.. ஆனா அவரே பிற்காலத்துல வேற மாதிரியும் சொல்லலாம் இல்ல.. அதனால நீ அப்படி பேசினது தப்பு தான்.. சரி பேசினது பேசினதாகவே இருக்கட்டும்.. நீ சொல்லிட்டு வந்ததும் அவ என்னை உடனே லண்டனுக்கா போய்ட போறா.. வீட்டுக்கு போனதும் அவளை சமாதானப்படுத்திக்கலாம்.. நீ இங்கேயே இருந்தா எல்லோரும் என்னன்னு கேப்பாங்க.. அதனால வா வெளிய போகலாம்..”

“அண்ணி.. சுடர் வேறெதுவும் தப்பான முடிவு எடுக்க மாட்டால்ல..”

“ச்சே.. சுடர் தைரியமான பொண்ணு.. அவ அப்படி எதுவும் யோசிக்க மாட்டா.. தேவையில்லாததெல்லாம் நினைக்காத..”

“இருந்தாலும் புவியை வீட்ல விட்டுட்டு வந்திருக்கலாமோன்னு தோனுது அண்ணி..”

“இங்கப்பாரு நீ பயப்பட்ற மாதிரியெல்லாம் இருக்காது.. வேணும்னா அவக்கிட்ட போன் போட்டு பேசு..”

“பேசுனா எடுப்பாளா அண்ணி..??”

“போட்டு தான் பாரேன்..” என்றதும் எழில் சுடரின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.