"விடு துர்கா!நான் போய் அவன் எங்கேன்னு பார்த்துட்டு வரேன்!"என்று கிளம்பியவர் எதிரே ஓடிவந்து நின்றான் அப்பாலகன்.
"பார்த்திபா!எங்கே போன?உடம்பெல்லாம் என்ன இரத்தம்?"பதறியது தாய்மனம்.
"அப்புக்குட்டி!என்னம்மா ஆச்சு?"துர்காவின் மனமும் பதறியது.
"மா!நான் மியூசிக் கிளாஸ் போயிட்டு வர வழியில,ஒரு நாய்குட்டியை பார்த்தேன்மா!"
"என்ன?"
"ஆமாம்மா!அதோட அம்மாவை வண்டியில போன ஒரு அங்கிள் இடிச்சிட்டாரு!அது அப்பறம் எந்திரிக்கவே இல்லம்மா!அது பக்கத்திலே இந்தப் பாப்பா இருந்துச்சும்மா!அங்கிருந்தவங்க எல்லாம்,பாப்பா பிறந்த உடனே அம்மா செத்துடுச்சுன்னு பேசிட்டு இருந்தாங்க!நாய்குட்டி அழகா இருந்துச்சும்மா!அதான்,நான் அதை எடுத்துட்டு வந்துட்டேன்!அது மேலே எல்லாம் ரத்தம்மா!"விளக்கினான் அவன்.
"எங்கே அது?"-தாயின் வினாவிற்கு விடையளிக்க,ஓடி சென்று மறைவிலிருந்து ஒரு குட்டி நாயை கொணர்ந்தான் அவன்.சிறு பிள்ளை அது!!பிறந்து ஓரிரு மணிநேரங்கள் ஆகி இருக்கலாம்!இன்னும் கண் கூட திறவவில்லை!!இளம்சிவப்பு நிறத்தில் அப்பாவியாய் ஒரு முகம்!!
"துர்கா!இந்த குட்டியை குளிப்பாட்டி கொண்டு வா!"
"சரிங்கம்மா"பொறுப்புடன் வாங்கினார் அவர்.
"அப்படின்னா,இது நம்ம கூடவே இருக்கட்டுமா?"
"ம்...யார் ஒருத்தருக்கு நம்மளுடைய ஆதரவு தேவைப்படுதோ!நம்மளால அதை செய்ய முடியும்னா,தாராளமா நாம அந்த ஆதரவை தரலாம்!"
"தேங்க்யூம்மா!"-தன் தாயின் கால்களை கட்டிக் கொண்டான் பார்த்திபன்.
"போ!போய் குளிச்சிட்டு வா!போ!"
"வந்து டிரஸ் எடுத்துக் கொடுங்க!"
"சரி...வா போகலாம்!!"-அவனை தூக்கிக் கொண்டு நடந்தார் அவர்.
ஆலயத்தில் அமைதியாக இறை வழிப்பாட்டில் மூழ்கி இருந்தார் தர்மா.காலங்கள் எவ்வளவோ ஓடிவிட்டன.இறைவனிடத்தில் வைத்த நேசம் மட்டும் நிலையாகி நிற்கின்றது.
"தம்பியை நேற்று டி.வி.பேட்டியில பார்த்தேன்!இப்படி ஒரு பிள்ளை உண்மையில வரம் தான்!"-பார்த்திபனை பாராட்டியப்படி வந்தார் குருக்கள்.
"தம்பி வரலையா?"
"இன்னும் ஊரிலிருந்து வரலை சுவாமி!"
"சரிங்கம்மா!இந்தாங்க பிரசாதம்!"-அர்ச்சனைத் தட்டினை அவரிடம் நீட்டினார் அவர்.
அதிலிருந்த குங்குமத்தை எடுத்து,தன் இனமில்லை எனினும்,தன் மகனாய் பாவிக்கும்,அன்று தன் புதல்வன் தூக்கி வந்த குழந்தையின் நெற்றியில் வைத்தார்.அவன் என்ன செய்வான்?பணிவுடன் அதை ஏற்று,நன்றி கூற குரைத்தான்.
"போகலாம் தேஜா!"என்றதும் அவர் பின்னாலே நகர்ந்தான் தேஜா.கோவிலை சுற்றி,பிரகாரத்தில் அமர்ந்தனர் இருவரும்!
"அவன் இருக்கானே!சொல்ற பேச்சை செய்யுறது இல்லை!நேற்றே வருவேன்னு சொன்னவன்,இன்னும் வரலை!"-தன் நண்பனை தாய் குறை கூறியதும் மீண்டும் குரைத்தான் தேஜா.
"நீ என்ன அவனுக்கு சப்போர்ட்டா?"சற்றே கோபமாக அவர் கேட்டதும்,மௌனமானான்.
"தர்மா??"-என்ற குரல் இருவரையும் ஈர்த்தது.
"தர்மா தானே நீங்க?"
"லட்சுமி அக்கா!மேகலா அக்கா!எப்படி இருக்கீங்க?"
"ம்...ஏதோம்மா!ஏழு வருஷத்துக்கு முன்னாடி வீட்டை காலி பண்ணிட்டுப் போன!அப்பறம் வரவே இல்லை!"
"................"புன்னகைத்தார் தர்மா.
"என்ன பண்றான் உன் பையன்?"
"அது ...."
"ஷியாம்க்கு வேலையே இல்லை தர்மா!வீட்டில தான் இருக்கான்!"
"ம்...ஜஷ்வந்த்க்கு கூட சம்பளம் ரொம்ப குறைவு தான்!அன்னிக்கு அவ்வளவு பெருமையா பேசுனோம்!இன்னிக்கு பாரு....ஆமா,பார்த்திபன் என்ன பண்றான்???"
"அவனா?"-அவர் கூற முயல்வதற்குள்,
"மா!"என்ற குரல் அவரை தடுத்தது.எதிர் வந்தவன் வசீகரமான ஓர் இளைஞன்.
"இவனா பார்த்திபன்?அடையாளமே தெரியலை பாரேன்!"
"இவன் பார்த்திபனோட ஃப்ரண்டுக்கா!ஒரு நிமிஷம்...!"என்று தான் ஈனா மகனை கவனித்தார்.
"ராம்!வந்துட்டியா?எப்போ வந்த?"
"இரண்டு மணி நேரம் ஆச்சும்மா!வீட்டுக்குப் போனோம்!நீங்க காலையிலே கோவில் போயிட்டீங்கன்னு துர்காம்மா இங்கே துரத்தி விட்டாங்க!"
"டேய்!தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானேடா!"