(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 03 - புவனேஸ்வரி

vellai pookkal ithayam engum malaruthe

 மித்ரனே,

தனக்கென வாழ்வதற்கும் வீழ்வதற்கும்

தகுதி தேவைப்படலாம் !

உனக்காக நானும்  எனக்காக நீயும் வாழ்ந்திட

என்ன தகுதி வேண்டும்?

உலகம் வியந்திட, மலரட்டும் நம் நட்பு!

நான் இன்னைக்கே போகுறேன்னு யாரு சொன்னா? உங்கனாலதானே நான் இப்போ இந்த நிலைமைல இருக்கேன்? அப்போ இதை சரி பண்ணவேண்டியது உங்க கடமைதான்.. அவ்வளவு சீக்கிரம் நான் இங்க இருந்து போக மாட்டேன்..” என்று ஒரே போடாக போட்டாள் லீலா. கதிரவன், கார்முகிலன் இருவருமே பிரபஞ்சனை பார்த்தனர்.

கோபமென்று வந்துவிட்டால் மூவருமே எரிமலைத்தான். எனினும் அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்தும் குணம் மூவருக்குமே இல்லை. வாழ்க்கையில் அவர்கள் கற்றது சில, வாழ்க்கை அவர்களுக்கு கற்றுத் தந்தது பல. அந்த பலவற்றில் இதுவும் ஒன்றுதான். இருப்பினுமே மற்ற இருவரை விட கார்கி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட்டு விடுவான். ஆனால் ஏனோ லீலாவை பார்க்கும்போது கவலையும் பரிதாபமுமே வந்தது அவனுக்கு. கதிரவனும் அவனைப்போலத்தான் இருந்தான். ஒருவேளை லீலா கதிரை தாக்க முயற்சிக்காமல் இருந்திருந்தால் பிரபஞ்சனுமே அவர்களில் ஒருவனாக இருந்திருப்பான். ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோலமென அவள் கதிரை தாக்க வந்தது அவனுக்குள் லேசான எரிச்சலையும் கோபத்தையும் மூட்டியது. இந்த உணர்வு மறைந்திடுமா? வன்மமாகிடுமா? காலம் கைக்கட்டி சிரிக்க, புவியாகிய நானும் சொல்ல முடியாதே.. ஹீ ஹீ.

எங்கே பிரபா மறுபடியும் சினமாகிடுவானோ என மற்ற இருவரும் திருதிருவென விழிக்க, பிரபாவோ லேசான புன்னகையுடன், “நீ இங்க இருந்துதான் ஆகனும்னா இருந்துட்டு போ” என்றான். லீலாவே அந்த நொடி அவனை நிமிர்ந்து ஆச்சர்யமாகத்தான் பார்த்தாள். “முடிஞ்சா என் முகத்தை பார்த்து நான் என்ன நினைக்கிறேன்னு சொல்லிடு பார்ப்போம்” என்று மனதிற்குள் சவால் விட்டவனாக அவன் சிரித்தும் வைத்தான்.

“இந்த கடத்தல்காரன் அடுத்து என்ன பண்ண போறானோ?” என்ற எண்ணமே அவளது தைரியத்திற்கு முட்டுக்கட்டையாகிட,  அவர்கள் மூவரையுமே பார்வையால் அளக்க ஆரம்பித்தாள் லீலா. தைரியத்திற்கும் அச்சத்திற்கும் இடையில் சிக்கி இருப்பவளின் பார்வையின் பாஷை கதிரவனுக்கு நன்றாகவே புரிந்திட, “ ருத்ரா சீக்கிரம் வந்திருவா..சாப்பிடு லீலா” என்று ஊக்கமளித்தான். இவர்கள் தப்பானவர்கள் என்றால் அந்த ருத்ரா எப்படி இவர்களுடன் பழகி இருப்பாள்? சற்றுமுன் வீடியோ காலில் பேசியவளின் தோரணை நட்பை தாண்டிய கல்மிஷம் இல்லை என்பதை லீலாவின் மனம் நம்பிட, அவர்கள் மூவரையும் முழுதாஇ நம்பவில்லை என்றாலும் சந்தேகிக்க வேண்டாம் என முடிவெடுத்தாள்.

அவள் அடுத்த வாய் உணவை உள்ளே தள்ளிய சில நொடிகளிலேயே, மற்ற இருவரிடமும், “சும்மா சொன்னேன்” என்பதுபோல கண்ணடித்துவிட்டு செல்ஃபோனைக் காட்டி சமிக்ஞை செய்தான் பிரபஞ்சன். “மச்சான் ஏதோ ப்ளான் போட்டுட்டான்” என்ற நிம்மதியுடனும் அது என்னவாக இருக்குமென்ற ஆர்வத்துடனும் இருவரும் காத்திருந்தனர். அவர்களை விழிகளால் அடக்கிவிட்டு பேச்சை தொடர்ந்தான் பிரபஞ்சன்.

“பை எனி சான்ஸ் உனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையோ?” ஒரு மாதிரியான குரலில் அவளை வினவினான்.

“ஏன் இப்படி கேட்குறிங்க?”

“இல்லை காலைல கல்யாணம் நின்னுருச்சுனு சொன்ன.. உன்னை கடத்திட்டோம்னு கோபப்பட்ட.. உன் அப்பா அம்மா தங்கச்சி பாவம்னு சொன்ன..ஆனா மாப்பிள்ளை? அவர பத்தி நீ ஒன்னுமே சொல்லலையே?”

“ஹ்ம்ம்.. ஹா ஹா.. உங்களை புத்திசாலினு சொல்லட்டுமா? இல்ல வில்லாதி வில்லன்னு சொல்லட்டுமா?” நக்கலாக கேட்டாள் லீலா.

“என் கேள்விக்கு பதில் சொன்னாலே போதும்..”

“ஹ்ம்ம்.. எனக்கு கல்யாணத்துலேயே பெருசா இண்டரஸ்ட் இல்லை. பட் வேணாம்னு சொல்லுறதுக்கும் பெருசா காரணம் இல்லை. அதுனால ஒத்துக்கிட்டேன்.கல்யாணத்துக்கு அப்பறம் எப்படியும் ஒன்னா தானே குப்பை கொட்ட போறோம்னு சொல்லிட்டு நான் எனக்கு கிடைச்ச டைம் எல்லாமே என் ஃபேமிலியோடவே ஸ்பெண்ட் பண்ணிட்டு இருந்தேன். அவருக்கும் பிசினஸ் வேலைய பார்க்க வேண்டியதா இருந்துச்சு.”

“குப்பை கொட்ட போறீயா?” என்று கதிரவன் கேட்க,

“இதெல்லாம் கேலியா சொல்றதுதானே?நான் அவர்கிட்டயே அப்படித்தான் சொன்னேன்..” என்றாள் லீலா. அவளை விளையாட்டுத்தனம் கொண்டவள் என்பதா தைரியசாலி என்பதா? புரியவில்லை மூவருக்கும்.

“ஹ்ம்ம் என்னத்தான் பழகலனாலும் ஒரு கல்யாணம் நின்னா அது அந்த மாப்பிள்ளைக்கும் வேதனை தானே?” – கார்கி

“கல்யாணம் நடக்கலனு யாரு சொன்னது?” தண்ணீரை குடித்துவிட்டு மூவரையும் தீர்க்கமாக பார்த்தாள் லீலா. “கல்யாணம் ஆயிடுச்சா? அவ நகைகளை கழட்டும்போது தாலி இருந்த மாதிரி இல்லையே?” என்று மூவருமே குழம்பிட லீலா பக்கென சிரித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.