(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 27 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

புதனன்று காலை நாராயணன் எப்படியும் இன்றும் ஏதேனும் குளறுபடி செய்து தப்பித்துவிடலாம் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கோர்ட்டிற்கு கிளம்பிக்கொண்டிருக்கும்போது வீட்டின் உள்நுழைந்த காவல்துறை அவரைக் கைது செய்தது.... அதேப்போல் அந்த ஏரியா கவுன்சிலரும் கைது செய்யப்பட்டார்... இருவர் மீதும் கொலைக் குற்றம் சாற்றப்பட்டிருப்பதாகவும் அதற்கு தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது... அதிலும் இருவரையும் பிணையில் வெளிவரமுடியாத சட்டத்தில் கைது செய்திருந்தது காவல்துறை....

அதேப்போல் நரேஷும் மருத்துவமனையிலிருந்து வந்த இரண்டு நாளில் காவல்துறையால் கைது செய்யப்பட்டான்...

அடுத்த அடுத்த முக்கியஸ்தர்களின் கைது நடவடிக்கையால் தமிழகமே கொந்தளிக்கும் நிலையில் இருந்தது.... அதுவும் நரேஷ் வெளியுலகிற்கு காட்டிய முகமே வேறு.... அந்த முகத்தை நம்பி ஏமாந்து ஏகப்பட்ட இளைஞர்கள் அவன் பின் ரசிகர்கள் என்ற பெயரில் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.... தங்கள் ஆதர்ச நாயகனை காவல்துறை எப்படி கைது செய்யலாம் என்று பல இடங்களில் மறியல், தர்ணா என்று ரசிகர்கள்  ஒருபுறம் போராட்டம் நடத்த, கவுன்சிலரும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அக்கட்சியை சேர்ந்தவர்கள் மறுபுறம் போராட்டம் நடத்தினார்கள்.... இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கும் நிலைக்கு வர, காவல்துறைக்கு அவர்களை விடுவிக்குமாறு ஆளும்கட்சியிலிருந்து அழுத்தம் வர ஆரம்பித்தது....

ஆனால் மதி அவர்கள் மூவரையும் கைது செய்திருந்த பிரிவு கிட்டத்தட்ட பொடா சட்டப்பிரிவை போன்றது... ஜாமீனிலும் வெளிவர முடியாது அதேப் போல் வழக்கு முடிந்து நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் யாராலும் விடுவிக்கவும் முடியாது...

அவர்களை கைது செய்தவுடனேயே மதி, அவர்கள் எந்தப்பிரிவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை மிகத்தெளிவாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வருமாறு பார்த்துக்கொண்டான்.... ஊடகமும் தன் பணியை சிறப்பாக செய்து, கைது செய்தியை பட்டித்தொட்டி வரை பரவ செய்தது... அதனால் மேலிடம் அழுத்தம் கொடுத்தாலும் இருவரையும் வெளிவராமல் பார்த்துக்கொள்ள மதியால் முடிந்தது...

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுவதால் இவர்கள் வழக்கை அவசர வழக்காக நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது....

அதன்படி இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் முதலில் நாராயணன் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது... நாராயணனும், கவுன்சிலர் தமிழ்ச்செல்வனும் ஒரே வழக்கில் கைது செய்யப்பட்டதால் இருவருக்கும் பொதுவாக மாநிலத்தில் புகழ்பெற்ற வக்கீல் அம்பலவாணர் ஆஜரானார்...

குற்றவாளிகளின் தரப்பில் அம்பவாணர் நீதிபதியைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.... “கனம் நீதிபதி அவர்களே.... தமிழ்நாட்டில் காவல்துறையினரின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது... ஒன்றும் தெரியாத அப்பாவிகளை அடிப்பதும், சம்பந்தமே இல்லாமல் கைது செய்வதும் என்று.... பொதுமக்களின் நண்பன்  காவல்துறை என்ற வாசகங்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் பொய்த்துவிட்டது....

அதற்கு மற்றுமொரு சாட்சி இதோ இங்கு நிற்கும் என் கட்சிக்காரர்கள்... இருவருமே அப்பாவிகள்... திரு. நாராயணன் அவர்கள் வியாபார உலகில் மிகவும் செல்வாக்கு பெற்றவர்... அதன் மூலம் பெரும் லாபத்தில் தான் மட்டுமே வளம்பெறவேண்டும் என்று எண்ணாமல் ஏகப்பட்ட தான தருமங்கள் செய்து வருபவர்....முதலில் அவர் திரு. ராமசாமியின் வீட்டில் ஆட்களை ஏவிவிட்டு மிரட்டியதாக பொய்குற்றம் சாற்றினார்கள்... இதோ இப்பொழுது யார் என்றே தெரியாத இருவரை கொலை செய்ததாக குற்றம் சாற்றி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்... இவரால் கொல்லப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களை இவர் பார்த்ததுகூட இல்லை என்பதுதான் இதில் கவனிக்கப்படவேண்டியது....

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அருகிலிருக்கும் சாரங்கனின் காதைக் கடித்தாள் பாரதி...

“ஏண்டா சப்பாணி.... வக்கீல்ன்னா பொய் சொல்லுவாங்கன்னு இவரைப் பார்த்துதான் சொன்னாங்களோ.... இந்தப் புளுகுப் புளுகறாரு....”

“ஆமாம் பக்கி... இந்தாளு கொடுத்த காசுக்கு மேல கூவறாரே... அப்ஜெக்ஷன் மை லார்ட் அப்படின்னு எழுந்து நிக்கலாமா.....”, இருவரும் தங்களுக்குள் குசுகுசுப்பதைப் பார்த்த சந்திரன் இருவரையும் மிக மிகப் பாசமாக ஒரு பார்வை பார்த்தார்... அடுத்த நொடி இருவரும் கப்சிப்பாகி அம்பலவாணரின் வாதத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்...

“அடுத்து நிற்கும் திரு. தமிழ்ச்செல்வன் தன் தொகுதி மக்களுக்கு உழைக்கவேண்டும் என்ற காரணத்துக்காகவே கவுன்சிலர் பதிவியில் நின்று வெற்றி பெற்றவர்.... மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற வாசகத்தை தாரக மந்திரமாக கொண்டு தொகுதி மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுபவர்....

இப்படிப்பட்ட மாமனிதர்கள் மீதுதான் இந்தக் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது... அதுவும் பொடா சட்டத்திற்கு நிகரான சட்டத்தின் கீழ்.... இதற்கு காவல்துறை கண்டிப்பாக பதில் கூறவேண்டும்...”, என்று கூறி தன் முதல்கட்ட வாதத்தை முடித்து அமர்ந்தார் அம்பலவாணர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.