(Reading time: 11 - 21 minutes)

அடுத்ததாக சந்திரன் தங்கள் தரப்பு வாதத்தை ஆரம்பித்தார்.... “மாண்புமிகு நீதிபதி அவர்களே.... திரு. அம்பலவாணர் தன் வாதத் திறமையால் எப்பொழுதும் போல் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும் மகானுபாவராக காட்டிவிட்டார்... நாராயணனின் மீது போன முறை சாற்றப்பட்ட குற்றத்திலிருந்து இன்னும் அவர் வெளிவரவில்லை அந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது என்பதை அம்பலவாணர் மறந்துவிட்டார் போல, அதை  நினைவுக்கு கொண்டுவருவது நல்லது...

அதேப்போல் காவல் துறையிலும் ஏதோ ஒன்றிரெண்டு பேர் தவறு செய்கிறார்கள்தான், அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது....

நாராயணன், தமிழ்ச்செல்வன் இருவருமே செலவாக்கானவர்களாக இருந்துகொண்டு மக்களை சுரண்டும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்...

நாராயணன் திரு.ராமசாமியின் வீட்டை தன் பெயரில் வாங்குவதற்காக செய்த அராஜகங்கள் அனைத்திற்கும் சாட்சி உள்ளது.... அதேப்போல் இதோ இங்கு நிற்கும் இந்த கவுன்சிலர் தமிழ்ச்செல்வன்.... வறுமை நிலையில் இருக்கும் மக்களுக்காக அரசாங்கம் கொடுக்கும் இலவசங்களில் கை வைத்து, தன்னை வளப்படுத்திக்கொள்ளும் மாமனிதன்....

இவர்கள் செய்த குற்றங்களை ஒவ்வொன்றாக இந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க அனுமதி அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....”, என்று கூறி தன் விசாரணையை ஆரம்பித்தார் சந்திரன்....

நாராயணனும், தமிழ்ச்செல்வனும் சத்தியப்பிரமாணம் எடுத்தவுடன் தன் கேள்விகளை ஆரம்பித்தார் சந்திரன்....

“உங்க மேல காவல்துறை போட்டிருக்கிற வழக்குகள் எல்லாவற்றிலுமே ரெண்டு பேருமே சம்பந்தப்பட்டிருக்கீங்க... இதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க....”

“வக்கீல் சார்.... எங்க மேல போட்டிருக்கறது எல்லாமே பொய் வழக்கு.... நான் அரசியல்ல இருக்கறதால எனக்கு எப்பவுமே எதிரிகள் அதிகம்... அந்தமாதிரி யாரோதான் எங்கமேல இந்த மாதிரி  பொய்ப்புகார் கொடுத்து இருக்காங்க....”

“ஓ அப்படியா. உங்க ஏரியால இருக்கற ரேஷன் கடைல மட்டும் எந்தப் பொருளும் ஒழுங்கா கிடைக்கறதில்லைன்னு அடிக்கடி புகார் வருதே அது எப்படி... அதே மாதிரி அரசு கொடுக்கற இலவசங்களும் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்குது... முக்காவாசிப்பேருக்கு கிடைக்கறதில்லைன்னு சொல்றாங்களே... இது எல்லாம் உண்மை இல்லையா....”

“எந்த வீணாப்போனவன் என்னைப் பத்தி இப்படி அபாண்டமா சொன்னது... சொன்னவன் நாக்கு அழுகிப் போய்டும்...”

“அப்படியா சொல்றீங்க... மாண்புமிகு நீதிபதி அவர்களே... இந்தக் காணொளியைப் பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....”, சந்திரன், சாரங்கன் கவுன்சிலர் ரேஷன் கடைப் பொருட்களை கல்யாண மண்டபத்திற்கு மாற்றும்போது எடுத்த வீடியோவை நீதிபதியிடம் கொடுத்தார்.

அந்தக் காணொளியை பார்த்த நீதிபதி அம்பலவாணரிடம் அதைப் பற்றி கேட்டார்.

“கனம் நீதிபதி அவர்களே, இந்த வீடியோ ஏதோ கிராபிக்ஸ் செய்தது போல் உள்ளது... இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்த விதமான வீடியோவும் தயாரிக்க முடியும்... நான் அமெரிக்க அதிபருடன் தேநீர் அருந்துவது போலக் கூட செய்ய முடியும்.... அதனால் இதை நீங்கள் ஒரு சாட்சியாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்....”

“நீங்கள் சொல்லுவது ஒரு விதத்தில் சரி என்றாலும் சில நேரங்களில் இம்மாதிரி காணொளிகள் நமக்கு வழக்கை தீர்மானிக்க உதவி இருக்கின்றன... ஆகவே இதன் நம்பகத்தன்மையை சோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... திரு. சந்திரன் இந்தக் கானொளியின் நம்பகத்தன்மை உறுதியாகத் தெரிய நீண்ட காலம் பிடிக்கும்... எனவே இதை மட்டுமே ஆதாரமாகக் கொள்ள முடியாது... இது நாராயணனுக்கு எதிராக நீங்கள் சமர்ப்பித்த காணொளிக்கும் பொருந்தும்....”

“இது மட்டும் சாட்சி அல்ல நீதிபதி அவர்களே... இதைத் தவிரவும் வலுவான சாட்சிகள் உள்ளன.... அதன் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் புனையப்பட்டுள்ளன....”

“முதலில் திரு. ராமசாமியின் வீட்டிற்கு நாராயணன்தான் ஆட்களை அனுப்பினார் என்பதை நிரூபிக்க நான் கைது செய்த அனைவரையும் விசாரிக்க அனுமதி கேட்கிறேன்....”

நீதிபதி அனுமதி அளிக்க கைது செய்த ரௌடிகளை கூண்டில் ஏற்றினார்கள்...

“போன முறை இந்த வழக்கு நடந்தபோது நீங்க அந்த ஏரியால இருக்கற பாத்திரக்கடை முருகேசு சொன்னபடி ராமசாமி வீட்டுக்குப் போய் மிரட்டினதா சொன்னீங்க... சரியா...”

“ஆமாம் சார், முருகேசு சார்தான் அவங்க வீட்டுக்குப் போய் நாராயணன் சார் பேரை சொல்லி மிரட்ட சொன்னாரு...”

“ஓகே உங்களுக்கு பல வருஷமா முருகேசுவைத் தெரியும்ன்னு சொன்னீங்க இல்லை... அந்தப் பக்கம் பார்வையாளர்கள் சைடுல, மூணாவது வரிசைல ரெண்டாவதா உக்கார்ந்து இருக்கறது யாருன்னு தெரியுதா?”

“என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க... அது முருகேசு சார்தான்.... எத்தனை வருஷமா அவர்கூட தொடர்பு வச்சுட்டு இருக்கோம்....”

“ஹ்ம்ம்... அப்படியா சரி அவர் பக்கத்துல உக்கார்ந்துட்டு இருக்கறது யாரு....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.