(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

மாலையும் இரவும் சங்கமித்துக் கொஞ்சி மகிழ தொடங்கியது. இருளா இல்லை இருளாத வேளையா? என பறவைகள் தங்கள் சகாக்களிடம் வினவிக் கொண்டிருந்தன.  நியூ யார்க்கில் இருந்த அந்த அரங்கத்தில் செந்தமிழ் தன் கம்பீரமும் வீரமும் பொருமையும்  தாங்கி அனைவரையும் தன் வசம் ஆக்கிக் கொண்டிருந்தது.

கண்ணகி தன் கையில் இருந்த சிலம்பை கீழே போட்டு உடைக்க அதில் சிறையிருந்த மாணிக்க பரல்கள் விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியில் நாற்புரமும் தெறித்தன.

இதைக் கண்ட மதுரை அரசன் பாண்டிய நெடுஞ்ழியன் அதிர்ந்து தளர்ந்து

“பொன் செய் கொல்லன் - தன் சொல் கேட்ட

யானோ அரசன்? யானே கள்வன்”

என தவறான நீதியை வழங்கியமைக்காக மனமுடைந்து உயிர் துறக்கிறான். அவன் மனைவியும் அரசியுமான கோப்பெருந்தேவியும் கணவனோடு தன் இன்னுயிரை தியாகம் செய்கிறாள்.

பெருங் கோபத்தில் இருந்த கண்ணகி  மதுரை நகரத்தில் உள்ள தீயவர்கள் தீக்கு இரையாகட்டும் என சாபம் இடுகிறாள்.

இறுதியாக கண்ணகி ஊழி நடனம் ஆடி முடிக்கிறாள். கொற்றவையைப் போல அவள் கொழுந்துவிட்டு எரியும் தீக்கணலாய் நிற்கிறாள். இறுதியாக கோவலன் விண்ணுலகில் இருந்து வந்து தன்னோடு அழைத்துச் செல்கிறான். இதற்கெல்லாம் தகுந்தாற் போல பிண்னணி இசையும் பாடலும் அமைகிறது.

கண்ணகி கோவலனை திருமணம் செய்கிறாள். அவனோடு மயங்குகிறாள் நாணுகிறாள். அடுத்து கணவன் வேறொரு பெண்ணோடு உறவுக் கொண்டான் என்பதை அறிந்து துயரப்படுகிறாள். மீண்டும் தன் கணவன் தன்னோடு இணைய மகிழ்கிறாள். தவறிழைக்காத கணவன் கொல்லப்பட்டதை அறிந்து பொங்கி எழுகிறாள். இப்படியாக கண்ணகியாக நடனமாடிய சாருலதா தன் அபிநயத்தால் அரங்கை தன்வசப்படுத்தினாள். நாட்டியம் முடிவுப் பெற்றது.

அரங்கில் இருந்தவர்கள் அனைவருமே எழுந்து நின்று கைத்தட்டி தங்கள் பாராட்டை தெறிவித்தனர். திரை மெல்ல மெல்ல மேடையில் இருந்த கலைஞர்களை விழுங்குகிறது.

கண்ணாடி முன்நின்று தன் கூந்தலை சரி செய்தாள் சாருலதா. பெரிய கண்ணாடியில் சுற்றிலும் போகஸ் விளக்குகள் மின்ன அதில் சாரு மிக அழகாக தெரிந்தாள். ரொளத்திரமும் அவளிடம் அழகு.

தன் அணிகளன்களை கழற்றிக் கொண்டே கோவலனாக நடித்த சூர்யா “யூ ஆர் லுக்கிங் கிரேட்” என கண்ணாடிவழியே அவளை பார்த்த வண்ணம் கூறினான். அவள் புன்னகைத்து “இப்பதான் முதல் தடவை என்னை பாக்குறியா?” என்றாள்.

“மை கிட்ஸ் யூ ஆல் டன் எ கிரேட் ஜாப்” என அவர்களின் நடன ஆசிரியை காஞ்சனா அங்கே வந்தார். நடனமாடிய அனைவரையும் நட்போடு பாராட்டியவர் கடைசியாக சாருவிடம் வந்தார். “சாரு நீ பாக்க ரொம்ப அழகா இருக்கடா . . உன் பெர்பாமென்ஸ் சூப்பர்” என அவளை கட்டியணைத்தார்.

“என்னை மட்டும் யாரும் சொல்ல மாட்டிங்களே” என பொய் கோபம் காட்டினான் சூர்யா. “டேய் உன் அழக பாத்து பொண்ணுங்க விட்ட ஜொல்லுதான் நயக்ரா பால்சா விழுது . . இதுல நான் வேற தனியா சொல்லணுமா” என்றார்.

இதைக் கேட்ட அனைவரும் சிரிக்க

“மேம் ப்ளீஸ் இனிமே எங்கள கிட்ஸ்னு கூப்பிடாதீங்க . .” என நடனமாடிய முல்லை என்ற பெண் கூற

“எங்க எல்லாருக்கும் ஏழு கழுத வயசாச்சி” என மதுரை அரசன் கிரீடத்தை கழற்றியவாரு முடித்தான்.

“எனக்கு நீங்க எல்லாருமே குழந்தைங்கதான் அதை எப்பவும் மாத்த முடியாது” என சிரித்த முகத்தோடு வாததிற்கு முற்றுபுள்ளி வைத்தார்.

காஞ்சனா மிகச் சிறந்த பரத நாட்டிய கலைஞர். நியூ யார்க்கில் அவர் “காஞ்சனா ஸகூல் ஆப் டான்ஸ்” என்ற பரத நாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார். அவ்வபோது நாட்டிய நிகழ்ச்சியை நடத்துவார். அவரின் நாட்டிய குழுவில்தான் சூர்யா சாரு முல்லை என மற்ற அனைவரும் உள்ளனர். சாரு அவர் பள்ளியில் நடன ஆசிரியையாக பணிபுரிகிறாள்.

தமிழ் பற்று மிக்கவர் காஞ்சனா ஆதலால் ஐம்பெருங் காப்பியங்களை தம் பரத நாட்டித்தில் கொண்டு வரும் முயற்சியில் உள்ளார். அதன் முதல் கட்டம்தான் இன்று ஆடிய சிலப்பதிகாரம்.

“அடுத்த சனிக்கிழமை மணிமேகலை பற்றி கிளாஸ் ஆரம்பிக்கலாம்” காஞ்சனா கூற

“அப்போ எனக்கு ரோல் இல்லயா” சூர்யா ஆர்வமாய் கேட்க

“சூர்யா நீ தான் உதயகுமாரன்”

“மணிமேகலை காதலன் தானே?” சாருவை கண்ணாடி வழியே பார்த்தவண்ணம் காஞ்சனாவிடம் கேட்டான் சூர்யா

“ ஒன் சைட் லவ் சூர்யா . . மணிமேகலை உதய குமாரனை லவ் பண்ணல . . மணிமேகலை துறவி ஆகிட்டாங்க” என சாரு முந்திக் கொண்டு பதிலளித்தாள். அவன் முகத்தில் ஒரு நொடி ஏமாற்றம் எட்டிப் பார்த்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.