தன் சகோதரியிடமும் மனைவியிடமும் கங்காவைப் பற்றி துஷ்யந்திடம் சொன்னது போலவே தவறாக சித்தரித்தார். இன்னும் கூட துஷ்யந்தை அவளது பிடியில் வைத்திருக்கிறாள். நான் இருக்கவே அவள் ஒதுங்கி இருக்கிறாள். இல்லையென்றால் பணத்திற்காக நம் ராஜாவின் வாழ்க்கையை நாசம் செய்துவிடுவாள் என்றெல்லாம் கங்காவை பற்றி எவ்வளவு மோசமாக பேச முடியுமோ அவ்வளவு மோசமாக கூறினார்.
தன் மகனைப் பற்றி தவறாக கேள்விப்பட்ட கோமதியின் நிலையை சொல்ல முடியவில்லை. சாகும் வரை எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல் வாழ்ந்தவர் அவரது கணவன்.. தந்தையை பின்பற்றி தன் மகன்களும் அப்படியே வளர வேண்டும் என்பது தான் அவரது ஆசை.. இதில் துஷ்யந்த் போதை பழக்கத்துக்கு ஆளானான் என்று தெரிந்த போதே அவர் மனதளவில் உடைந்து விட்டார் என்றால், இப்போதோ முழுவதுமாக உடைந்து போய்விட்டார்.
ஆனால் இதெல்லாம் அவனாக தேடிப் போய் கற்றுக் கொண்டதில்லையே, தானாக அவனுக்கு திணிக்கப்பட்டது. அவர்கள் குடும்பத்தை நிர்மூலமாக்க அவனுக்கு போதை பழக்கத்தை சாரு மூலம் பழக்கப்படுத்தினர். இப்போதோ அதை சரி செய்ய கங்கா என்ற பெண்ணோடு பழக்கத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றனர். யாரோ செய்த துரோகத்தை மன்னிக்க முடிந்த அளவிற்கு தன் உடன் பிறந்த சகோதரன் செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை.
ஆனால் அண்ணாமலை மீதும் கோபத்தை காட்டும் நிலையில் அண்ணாமலை இல்லை. அவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். தன் சகோதரனனின் வியாதியை விட துஷ்யந்த் பற்றி கேள்விப்பட்ட செய்தி தான் கோமதியின் மனதை குடைந்துக் கொண்டிருந்தது. வெளியூரில் வேலையை முடித்துவிட்டு வந்து மருத்துவமனையில் மாமாவை காப்பாற்ற முடியுமா? என்று முயற்சி செய்துக் கொண்டிருந்த துஷ்யந்திடம் நேரடியாக எதுவும் அவரால் கேட்க முடியவில்லை.
எப்படி அவரால் கேட்க முடியும்? ஒரு அன்னையாய் தன் பிள்ளைகளுக்கு என்ன செய்திருக்கிறார் அவர்? எப்போதும் நோய் என்று படுத்துக் கொண்டவர் தானே.. செல்வாவுடனாவது தினம் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துஷ்யந்த் ஆரம்பித்திலிருந்தே அனைவரிடமும் ஒதுக்கம் காட்டியப்படியே இருந்தவன், வாழ்க்கையில் மிகவும் அடிப்பட்டு இப்போது நல்ல நிலைமையில் இருப்பவன், அவனிடம் இந்த நேரம் ஒரு கண்டிப்பான தாயாக முன் நின்று கேள்வி கேட்க அவரால் முடியவில்லை. கவலைகளை மனதிற்குள் போட்டு புழுங்கியப்படியே இருந்தார்.
இனி வைத்தியம் பார்த்தும் பயனில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அண்ணாமலையின் நோய் தீவிரத்தை பற்றி கூறினர். ஆனால் வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு முன்பே மருத்துவமனையிலேயே அவரின் உயிர் பிரிந்தது. பின் அவரின் இறுதிச் சடங்குகளில் கோமதியும் விஜியும் கவனத்தை திருப்பினர். செல்வா கூட விடுமுறை எடுத்துக் கொண்டு அண்ணாமலையின் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தான். பின் 16ம் நாள் காரியமெல்லாம் முடிந்து செல்வா திரும்ப ஊருக்கு கிளம்பினான். துஷ்யந்தும் வேலைகளையெல்லாம் பாதியில் விட்டு விட்டு தான் மருத்துவமனைக்கு வந்திருந்தான். அதனால் திரும்ப அவன் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.
மீண்டும் கோமதியும் விஜியும் தனியாக இருக்க சந்தர்ப்பம் அமைந்த போது தான் கங்காவை பற்றியும் தங்கள் பிள்ளையின் எதிர்காலத்தைப் பற்றியும் இருவரும் யோசிக்க ஆரம்பித்தார்கள். கோமதிக்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை. இந்த மூன்று வருடத்தில் முதல் ஒரு வருடம் தன் கடந்த கால கசப்பையெல்லாம் மகன் மறக்க வேண்டுமென்று அவகாசம் தந்தவர், அடுத்து திருமண பேச்சை ஆரம்பித்தவர் தான், ஆனால் துஷ்யந்தோ அதற்கு பிடிக் கொடுக்கவே இல்லை. ஒருவேளை சாருவை மறக்க முடியவில்லை போலும் என்று தான் அண்ணாமலையை தவிர மற்ற மூன்று பேரும் நினைத்திருந்தனர். ஆனால் மகன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததுக்கு காரணம் கங்கா என்ற பெண் தான் என்று தன் சகோதரன் சொல்லிவிட்டு சென்றதை கேட்டதும் அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.