(Reading time: 8 - 15 minutes)

அமேலியா - 51 - சிவாஜிதாசன்

Ameliya

னிதவெடிகுண்டாய் தீவிரவாதிகளால் அனுப்பப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அனுபவத்திற்கு பின்னர் ஹகீமின் மனநிலை பெருமளவு மாற்றமடைந்திருந்தது. தன் மனதில் மறைத்து வைத்திருந்த தங்கையின் பாசம் மீண்டும் வெளிவந்துவிட்டதால் பஹீராவுக்கும் நிம்மதி.

ஆனால், அந்த மகிழ்ச்சி எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பது தான் கேள்விகுறி. தீவிரவாதிகளின் சகவாசமிருந்தால் நம் மரணம் இயற்கையானதல்ல என்பதை மட்டும் ஹகீம் புரிந்து கொண்டான். அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. ஆனால், சாகும் நாளை தள்ளி வைக்க முடியும்.

முதலில் அதுவே நிம்மதி. அந்த சம்பவத்திற்கு பின் அவன் வாழ்க்கை பயணம் பெரிய சோகம் நிறைந்ததாக இல்லை. மனிதத்தையும் உயிரின் மதிப்பையும் அவன் தெரிந்துகொண்டான்.

சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்லுதல், அக்கம் பக்கத்தினர் கொடுக்கும் வீட்டு வேலைகளை செய்தல், அதில் வரும் பணத்தைக் கொண்டு பஹீராவின் சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றுதல் என அவன் பயணமே திசை மாறியது. ஆனால், தீவிரவாதிகளை எப்படி கையாள்வது என்பதற்கான விடை மட்டும் அவனுக்கு தெரியவில்லை. ஆனால், ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டும் என எண்ணினான் ஹகீம்.

யாருக்கும் தெரியாமல் வேறு ஊருக்கு சென்றாலும் தீவிரவாதிகள் தேடி வந்து கொல்வார்கள் என ஹகீமிற்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் அவன் வேறொரு முடிவெடுத்தான். நிச்சயம் நல்ல திட்டம் தான். அந்த திட்டத்தை செயல்படுத்தத்தான் அந்த இடத்தில் நின்றுகொண்டு

யாருக்காகவோ காத்துக்கொண்டிருந்தான் ஹகீம்.

அவன் முகம் பரபரப்பாகவும் பதற்றமாகவும் காணப்பட்டது. 'இன்னும் சிறிது நேரத்தில் இருள் சூழ்ந்துவிடும். பஹீரா இந்நேரம் பள்ளியில் இருந்து வீடு வந்து சேர்ந்திருப்பதாள். இன்று தனக்கு வேலை அதிகமாக இருக்குமாதலால் தான் சற்று காலதாமாதமாக வருவேன்' என ஹகீம் பஹீராவிற்கு தெரியப்படுத்தியிருந்தான். ஆனாலும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது என ஹகீம் நினைத்தான். இல்லையேல், பஹீரா சாப்பிட மாட்டாள் அவள் உடல்நிலை பாதிப்படையும்.

ராணுவ வீரர்கள் வரும் ஜீப் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. அந்த ஜீப்பை நிறுத்த ஹகீம் வேகமாக ஓடினான்.

"நிறுத்துங்க! நிறுத்துங்க!" என அரபியில் கத்தினான்.

ஜீப் உறுமியபடி நின்றது. அதிலிருந்து இரண்டு ராணுவ வீரர்கள் கீழிறங்கினர். அதில் ஹகீம் வெறுக்கும் ஜான்சனும் இருந்தான்.

ஹகீமை கண்ட ஜான்சனுக்கு ஆச்சர்யம். 'எதற்காக இவன் நாம் வரும் வண்டியை தடுத்து நிறுத்தினான்?'.

ஹகீம் ஜான்சனை முறைத்தான். இருந்தும் தன் திட்டத்தை செயல்படுத்த கனிவான பார்வை அவசியம் என உணர்ந்த அவன் தனது கோபத்தை சிறிது நேரம் தள்ளி வைத்தான்.

அரபியில் கைகளை ஆட்டி எதையோ சொன்னான் ஹகீம்.

ராணுவவீரர்களுக்கு அவன் என்ன கூறுகிறான் என்று புரியவில்லை. இருந்தும் அவன் அவசரத்தை பார்த்தால் ஏதோ முக்கியமான விஷயமென மட்டும் தெரிந்துகொண்டார்கள் .

ஹக்கீமை ஜீப்பில் ஏற்றி மொழிபெயர்ப்பாளரின் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள் ராணுவ வீரர்கள்.

இருள் முழுவதுமாக இறங்கியிருந்தது. ராணுவ வீரர்களின் ஜீப்பில் தான் செல்வதை பார்த்தால் தன்னை உளவாளி என தன் இனத்தார் சந்தேகிக்க கூடும் என பயந்த ஹகீம் கீழே குனிந்து தன்னை மறைத்துக்கொண்டான்.

ஹகீம் மிகவும் பயப்படுகிறான் என நினைத்தான் ஜான்சன். அவனுக்கு அறியாமல் செய்த பாவத்திற்கு என்று தான் பிராயச்சித்தம் செய்யும் வாய்ப்பு கிடைக்குமோ என எண்ணினான் ஜான்சன்.

ஹகீம் அது போன்ற ஜீப்பில் சென்றதில்லை. 'எவ்வளவு வேகமாய் செல்கிறது! இது போன்று நமக்கொன்று இருந்தால் எவ்வளவு வேலைகள் மிச்சமாகும்' என வேடிக்கையாக எண்ணினான்.

மின்சாரங்கள் இல்லாத வீடுகள் பெருமளவில் நிறைந்திருந்ததால் பாதி நேரம் இருளுக்குள் பயணம் செய்யவேண்டிய நெருக்கடி. ஜீப் ஓரிடத்தில் வந்து நின்றது. அவ்விடத்தில் மட்டும் சில வீடுகளில் மின்சாரமிருந்தது. ஜீப்பில் இருந்தபடியே அவ்விடத்தை சுற்றி பார்த்தான் ஹகீம். அந்த இடத்தை சுற்றி ஏகப்பட்ட ராணுவ வண்டிகள் வருவதும் போவதுமாய் இருந்தன.

எதிர்வரும் ராணுவ வண்டிகளின் வெளிச்சம் ஹகீமின் மேல் பட்டு அதிலிருந்த ராணுவ வீரர்களை கேள்விப் பார்வைகளை அவன் மேல் வீச செய்தது.

ஹகீமிற்கு பயம் அதிகமாகியது. தவறான செயலை செய்துவிட்டோமா என்று கூட எண்ணினான்.

ஜான்சன் இஸ்லாமியர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தான். ஹகீம் அந்த இஸ்லாமியரை உற்று நோக்கினான். அவர் முகத்தில் பயம் படர்ந்திருந்ததை ஹகீமால் நன்றாக உணர முடிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.