(Reading time: 8 - 15 minutes)

'இப்பொழுது அமெரிக்கர்கள் எதை கேட்டாலும் அவர் செய்ய வேண்டும். இல்லையென்றால் விசாரணை, பின் மரணம். எத்தனை பேர் தான் இப்படி சிக்கி சீரழிகிறார்களோ என ஹகீம் வேதனையடைந்தான். அவர் ஜான்சன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு அவனிடம் ஏதோ கூறிவிட்டு உள்ளே சென்றார்.

ஹகீமை கீழே இறங்கும்படி ராணுவ வீரன் கட்டளையிட்டான். ஹகீம் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி பயத்தோடு அங்கு நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். மாட்டிக்கொண்டோமா? ஓடிவிடலாமா என்று கூட எண்ணினான்.

உள்ளிருந்து பஹீரா வயது சிறுமி வெளியே வந்தாள். முதலில் இருளில் சரியாக ஹகீமால் அவளை அடையாளம் காண முடியவில்லை. பின்பு, அது மாலிகா என தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தான் ஹகீம்.

மாலிகா முதலில் ஜான்சனை கண்டு சந்தோஷமடைந்தாள். பிறகு, ஹகீமை கண்டு ஆச்சர்யமடைந்தாள்.

"அண்ணா, பஹீரா எப்படியிருக்கா? அவளை பாத்து ஒரு வாரமாச்சு"

ஆச்சர்யத்தில் இருந்து மீளாத ஹகீம் எதையும் காதில் வாங்காமல் சிலையென நின்றான்.

"ஹகீம் அண்ணா! அண்ணா!"

கனவில் இருந்து மீண்டவனை போல் திடுக்கிட்டவன், ராணுவ வீரர்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "என்ன மாலிகா?" என்றான்

"பஹீரா எப்படியிருக்கா?"

"நல்லாயிருக்கா. நீ இங்க எப்போ வந்த?"

"ஒரு வாரம் ஆச்சு. ஜான்சன் மாமா தான் என்னை கூட்டிட்டு வந்தாரு. இங்க நிறைய சாக்லேட்ஸ் கிடைக்குது. உங்களுக்கு வேணுமா?"

"எனக்கு வேணாம்"

"பஹீராவை கூட்டிட்டு வரிங்களா? அவ கூட விளையாடணும் போல இருக்கு"

ஹகீமிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, அமைதியாக இருந்தான்.

வீட்டிற்குள் சென்ற பெரியவர் வெளியே வந்து ஜான்சனிடம் ஆங்கிலத்தில் ஏதோ பேசினார். ஜான்சன் ஹகீமை காட்ட, அவனிடம் வந்தார் பெரியவர்.

"அவங்க கிட்ட என்ன சொல்லணும் தம்பி?"

ராணுவ வீரர்களிடம் சொல்ல வந்ததை பெரியவரிடம் கூறினான் ஹகீம்.

பெரியவரின் முகம் பயத்தில் வியர்வையால் நிரம்பியது.

"நீ எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறியா தம்பி? உனக்கு குடும்பம் இருக்கா? ஒரே ஒரு தங்கச்சி மட்டும் இருக்கா. எனக்கு குடும்பம் இருக்கு தம்பி. அவங்க பாதுகாப்பா இருக்க வேணாமா? இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில என்னை மாட்டிவிட்டுட்டியே"

ஹகீம் அமைதியாக இருந்தான். "நான் எல்லாம் யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கேன் ஐயா"

பெரியவர் பயந்தார். 'என்ன செய்வது? ஹகீம் சொன்னது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி. அதை எப்படி உபயோகப்படுத்தினாலும் காயம் நிச்சயம்'.

"மார்க்கெட்டுக்கு சில தீவிரவாதிங்க வந்ததாகவும் அவங்க ரகசியமா இன்னைக்கு இரவு ஒன்பது மணிக்கு மார்க்கெட்டுக்கு பின்னாடியிருக்க ஏதோ ஒரு இடத்துல சந்திக்க போறதாவும் இந்த பையன் சொல்லுறான்"

ராணுவ வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த இடம் எங்கே இருக்கிறதென்று பெரியவரிடம் விசாரித்தனர்.

"எனக்கு சரியாக நினைவில்லை. இதற்கு மேல் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்" என்பதுபோல அவர் கெஞ்சியபடி உள்ளே சென்றார்.

ராணுவ வீரர்கள் ஹகீமை ஜீப்பில் ஏற்றி அங்கிருந்து விரைந்து கிளம்பினர். நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர் ராணுவ வீரர்கள்.

மார்கெட்டிற்கு சென்ற ராணுவ ஜீப் பாதி வழியில் நின்றது. அதிலிருந்த ராணுவ வீரர்கள் இறங்கினர். ஹகீமை "இதற்கு மேல் நீ இங்கிருக்க வேண்டாம்" என்று கூறி அவனை அனுப்பியவர்கள், இருளோடு கலந்து துப்பாக்கியோடு வேவு பார்க்க சென்றனர்.

எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மார்க்கெட்டே காலியாக இருந்தது அவர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. ஹகீம் சொன்ன இடத்திற்கு மூவரும் ரகசியமாக சென்றனர். சாலையில் எந்தவொரு நடமாட்டமும் இல்லை. தாங்கள் இருக்கும் இடத்தை ராணுவ முகாமிற்கு தகவல் சொன்னவர்கள் மேற்கொண்டு தேடலை தீவிரப்படுத்தினர்.

திடீரென அவர்களை சுற்றி பல காலடி ஓசை. ராணுவனத்தினர் திடுக்கிட்டனர். தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியின் நுனியை நாலாபுறமும் சுழற்றினர். திடீரென படபடவென குண்டுகள் ராணுவத்தினரை தாக்கின. ஒரு நிமிடம் கூட அந்த சண்டை நடைபெற்றிருக்காது. ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

தகவலறிந்த அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஏராளாமான ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர்.

ஏற்கனவே அதிர்ச்சியை சந்தித்தவர்கள் மற்றொரு அதிர்ச்சியையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இரண்டு ராணுவ வீரர்களின் உடல்கள் மட்டுமே அங்கிருந்தன. ஜான்சனை அங்கு காணவில்லை.

தொடரும்...

Episode # 50

Episode # 52

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.