(Reading time: 16 - 31 minutes)

அமேலியா - 52 - சிவாஜிதாசன்

Ameliya

நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் முன் விதியால் சில வில்லங்கங்கள் வரும். உண்மையான சோதனை அப்பொழுது தான் காத்திருக்கும். இதற்காகவா இத்தனை நாள் காத்திருந்தோம்? இனி என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? வருவதை ஏற்றுக்கொள்ளலாமா? அல்லது பழைய வாழ்வுக்கே திரும்பிவிடலாமா?

அப்படி சென்றுவிட்டால் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? உண்மையான மகிழ்ச்சி, திருப்தி எங்கு தான் ஒளிந்திருக்கிறது?

டைரக்டர் ஆவதை கனவாகவும் லட்சியமாகவும் கருவில் சுமக்கும் குழந்தை போல் தனது கனவை வளர்த்த வசந்த், அந்த இரவில் வீட்டிற்கு கூட செல்லாமல் எங்கோ ஓர் இடத்தில வேதனையோடு  அமர்ந்திருந்தான்.

உண்மையில், அது என்ன இடம் என்று கூட அவனுக்கு தெரியவில்லை. யோசனையோடு காரில் வந்தவன், வழியில் தனிமையான இடத்தைப் பார்த்தவுடன் அங்கு சிறிது நேரம் கழிக்க முடிவெடுத்து அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தான்.

புகை பிடிக்க மனம் வற்புறுத்தியது. ஏனோ அதை தொடாமல் அமைதி காத்தான். அமேலியாவை அவ்வப்போது சிந்தித்தான். இப்பொழுதிருக்கும் ஒரே ஆறுதல் அவளது முகமும் காதலும் தான்.

வீட்டிலிருந்து அவனுக்கு போன் வந்தது. 'ஷூட்டிங்கில் பிசியாக இருப்பான் என நினைத்துக்கொள்ளட்டும்'. போன் எடுக்கவில்லை.

உண்மையில் நாம் அந்த கதையை எடுத்துதான் ஆக வேண்டுமா?!

வாய்ப்பு கிடைத்ததிலிருந்து நடந்தவற்றை ஒன்று விடாமல் சிந்தித்துப் பார்த்தான் வசந்த். நிச்சயம் அது மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லை. பூவனம் என எண்ணி பாலைவனத்தில் சுற்றித் திரிந்த கதை அது.

ஷூட்டிங் நடக்கும் லொகேஷன் முதற்கொண்டு கேமரா மேன், எடிட்டர், ஆர்ட் டைரக்டர் என எல்லாவற்றிலும் தயாரிப்பாளரின் ஆட்களின் தலையீடு. பற்றாக்குறைக்கு கதையிலும் அவர்கள் நுழைய, தொடக்கத்தில் வாய்ப்புக்காக ஏற்றுக்கொண்ட வசந்த் போகப் போக தனது தனித்துவம் மறைவதை புரிந்து கொண்டான். அவர்கள் சொன்னது போல் தன்னை மாற்றிக்கொண்டால் நிச்சயம் விளம்பரத்தில் ஈர்ப்பு இருக்காது. அடுத்து தனக்கு வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிடும்.

நண்பர்களிடம் டைரக்டர் ஆகி விட்டோம் என்று பெருமை கொண்டோம். தந்தை நாராயணன் என்ன சொல்லுவார்? அவரால் இன்னும் தனக்கு டைரக்டர் ஆக வாய்ப்பு கிடைத்ததை நம்ப முடியவில்லை. இருக்கும் இந்த வாய்ப்பையும் கைவிட்டால் அதன் பின் எப்பொழுதும் தேள் கொட்டுவதை போன்று கொட்டிக்கொண்டிருப்பார். 

மற்றவர்களுக்காக தன் கனவை கொல்லலாமா? ஐயோ! கடவுளே! இதென்ன சோதனை?! என தலையைப் பிடித்துக்கொண்டான் வசந்த். இறுதியாக அவனுக்கு விடை கிடைத்தது. எழுந்தான்; வண்டியை ஸ்டார்ட் செய்தான்; ஆக்ஸிலேட்டரை அழுத்தி விர்ரென பறந்தான்.

வீட்டில் நிலாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆளுக்கொரு இடத்தில் விழித்துக்கொண்டிருந்தார்கள். அமேலியா அறையில் இருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். மேகலா டைனிங் டேபிளில் தூங்கியபடி விழித்துக்கொண்டிருக்க, நாராயணன் தொலைக்காட்சியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்.

"அம்மா மேகலா"

தூங்கியவள் திடுக்கிட்டாள். "சொல்லுங்கப்பா"

"வசந்துக்கு திரும்ப போன் பண்ணுறியா?"

மேகலா அமைதி காத்தாள்.

"என்னம்மா?"

"வேலையா இருப்பான்ப்பா, தொந்தரவு செய்ய வேணாம்னு தோணுது"

நாராயணன் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

"என்ன ஆச்சுப்பா?"

"பிள்ளை கூட பேசுறதுக்கு இனி நேரம் காலம் எல்லாம் பாக்கணும்"

மேகலா பதில் சொல்லவில்லை. "காபி சாப்பிடுறீங்களாப்பா?"

"இல்லம்மா நான் போய் தூங்குறேன்" என நாராயணன் எழ, வசந்தின் கார் சத்தம் கேட்டு நின்றார்.

காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைய வசந்திற்கு மூன்று நிமிடம் தேவைப்பட்டது. வீட்டில் யாரும் உறங்காதது அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"ஏன் எல்லாரும் முழிச்சிட்டு இருக்கீங்க?"

"எல்லாம் உனக்காகதானப்பா. ஏன் இவ்வளவு நேரம்?"

"கொஞ்சம் வேலைப்பா" என்று பொய் சொன்னான் வசந்த்.

"வா சாப்பிடலாம்" என்று நாராயணனன் கூற வசந்த் ஆச்சர்யமடைந்தான்.

"நீங்க இன்னும் சாப்பிடலையா?"

"ஏனோ பசிக்கல. வா, சேர்ந்து சாப்பிடலாம்" என நாராயணன் கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.