(Reading time: 16 - 31 minutes)

"ம் சூப்பர்" என பதில் சொன்னான் வசந்த்.

"உங்க முகம் ஏன் வாடியிருக்கு?" அமேலியா கேட்டாள்.

வசந்தால் புரிந்துகொள்ள முடியவில்லை. தான் வைத்திருந்த ஓவிய தாள்களை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கிய வசந்த், அதை பிரித்து பார்க்காமல் அவள் கையைப் பிடித்து வேகமாய் அழைத்து சென்றான்.

அமேலியா பயந்தாள். யாராவது பார்த்துவிட போகிறார்கள் என அச்சம் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். வசந்த் எங்கே அழைத்து செல்கிறான் என்ற எதிர்பார்ப்பும் அவளிடமிருந்தது.  

வாசற் கதவைத் திறந்து வெளியே வந்ததும், அதை மீண்டும் மெல்ல சாத்திவிட்டு கார் ஷெட்டை நோக்கி அமேலியாவை அழைத்து சென்றான் வசந்த். மழைத் துளிகள் அவர்கள் உடலை சில்லிட வைக்க, வசந்தின் ஸ்பரிசம் அமேலியாவின் உடலில் மின்சாரம் பாய்ச்சியது.

கார் ஷெட்டை அடைந்த வசந்த், அமேலியாவின் தோள்களில் கைபோட்டபடி மழையை ரசிக்கத் தொடங்கினான். அமேலியா அவனை விட்டு விலகி நிற்க நினைத்தாலும் மழைத் துளியின் சப்தமும் சாரலும் கருமேகங்களும் அவ்வப்போது தோன்றும் இடி மின்னல்களும் அவளை மெய்மறக்க செய்தன.  

குளிருக்கு இதமான காபி, மனதிற்கு இதமான காதலி என சொர்க்கத்துக்குள் நுழைத்துவிட்டதை போல் வசந்த் உணர்ந்தான். கைக்கடிகாரத்தை பார்த்தான், இருளில் சரியாக தெரியவில்லை. மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது மட்டும் அவனுக்கு புரிந்தது. நாராயணன், மேகலா ஆறு மணிக்கு தான் எழுவார்கள் என தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டவன், கிடைத்த அந்த பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

"அமேலியா" என்றழைத்தான் மெல்லியகுரலில்.

அமேலியா திரும்பினாள். வசந்தின் கண்களை சந்திக்க முடியாமல் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.  

"அமேலியா"

அமேலியா நிமிர்ந்து பார்க்கவில்லை. நாணத்தால் நெளிந்தாள்.

"ஐ லவ் யூ". மழைச் சாரலோடு அவன் சொற்களும் கலந்து இதயத்தில் அம்பாய் பாய்ந்தது.  

அமேலியா பதில் பேசவில்லை. அமைதி காத்தாள். வசந்தின் முகத்தைப் பார்க்காமல் மழையை ரசித்தாள். 

"ஐ லவ் யூ ன்னு சொல்லு"

அமேலியா மெதுவாய் தலையை திருப்பி வசந்தை பார்த்தாள். இதழில் புன்னகையை தவழ விட்டாள். உள்மூச்சை இழுத்துவிட்டவள் பார்த்த  பார்வையில் வசந்தின் உடல் முழுவதும் ஜிவ்வென்று இருந்தது. 'முத்தம் கொடுக்கலாமா' என்று சிந்தித்தவன், வேண்டாம் என்று முடிவை தள்ளிவைத்தான்.

வசந்தின் தோள்களில் தன்னை மறந்து சாய்ந்தாள் அமேலியா. அவளது வாசம், ஸ்பரிசம், இனிமை, மென்மை என வசந்தை ஏதோ செய்தது. அவளது தோள்களை அழுத்திப் பிடித்து உச்சந்தலையில் முத்தம் கொடுத்தான். கண்களை மூடியிருந்த அமேலியா அவன் முத்தத்தை உணரவில்லை. அவள் மனம் ஆசையில் திளைத்திருந்தது.

'வெளியில் செல்லாமல் இங்கேயே இருந்துவிடலாமா?' என வசந்த் எண்ணினான். ஆனால், அவன் கனவு அவனைத் துரத்தியது.

மழைச் சாரல் அமேலியாவின் முகத்தில் விழவே சுதாரித்து விழித்தவள்   நடந்ததை எண்ணி வெட்கம் கொண்டாள்.

அமேலியா கொடுத்த பேப்பரை பார்க்க விரும்பிய வசந்த், தெளிவாக பார்க்க முடியாததால் கார் ஷெட்டில் உள்ள விளக்கை எரிய வைத்தான்.

முந்திய இரவில் சாப்பிடும்போது வசந்தின் முகம் எப்படியிருந்தது என வேடிக்கையாய் அவன் ஓவியத்தை வரைத்திருந்தாள் அமேலியா. அவளை செல்லமாக முறைத்தான் வசந்த். அமேலியா சிரித்தாள்.

அடுத்த பக்கத்தை திருப்பினான். காட்டில் உள்ள சிங்கத்தைப் பிடித்து நாட்டிலுள்ள கூண்டில் அடைத்தார்கள் மனிதர்கள். அந்த சிங்கம் வெளியே வராது என தெரிந்துகொண்ட அவர்கள் வேடிக்கையான சைகையின் மூலம் அதை வெறுப்பேற்றினார்கள். சிங்கத்திற்கு கோபம் வந்தது. ஆனால், ஒன்றும் செய்ய முடியவில்லை. விடிவு வரும் வரை காத்திருந்தது. நாட்கள் செல்ல செல்ல சிங்கத்திற்கு பயம் வந்தது. தன் வாழ்நாள் இங்கேயே முடிந்துவிடுமோ? நாம் விட்டு வந்த ராஜாங்கத்தை யார் நடத்துகிறார்கள்? மீண்டும் அங்கு சென்றாலும் நம்மால் காட்டை ஆள முடியுமா? இது போன்ற எண்ணங்களால் சிங்கம் தன் பலத்தை இழந்திருந்தது. வேடிக்கை மனிதர்கள் சிங்கத்தை

வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள், காலம் சிங்கத்தை விடுதலை செய்தது. காட்டை நோக்கி ஓடியது சிங்கம். மனிதர்கள் சிங்கத்தை துரத்தினார்கள். சிங்கம் காட்டிற்குள் ஓடியது. அதன் கால்கள் வலித்தன. சரணடைந்துவிடலாமா என எண்ணியது. இருந்தும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடியது. அங்கு சிங்கத்தின் வருகைக்காக மற்ற மிருகங்கள் காத்திருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.