(Reading time: 16 - 31 minutes)

சிங்கத்தைக் கண்டதும், தங்கள் அரசன் வந்துவிட்டான் என மகிழ்ச்சியில் கூத்தாடின. சிங்கத்திற்கு கண்ணீர் வந்தது. தன்னை துரத்திய மனிதர்களை திரும்பிப் பார்த்தது. சிங்கத்திற்கு பயந்து அவர்கள் வெகு தொலைவில்

ஓடிக்கொண்டிருந்தார்கள்.

தன்னை சிங்கமாக உருவகப்படுத்தி, தோல்விகளைக் கண்டு அஞ்சாதே என அமேலியா ஓவியம் மூலமாக சொல்கிறாள் என வசந்த் புரிந்துகொண்டான். தான் சொல்ல எண்ணியதை அவன் புரிந்துகொண்டான் என்பதை உணர்ந்த அமேலியா புன்னகை புரிந்தாள். இந்தமுறை அவள் நெற்றியில் முத்தமிட்டான் வசந்த். அமேலியா தடுக்கவில்லை. காரணம், அந்த முத்தத்தில் காமமில்லை.

படுக்கையில் இருந்து மெதுவாக கண்களை விழித்த மேகலா, அமேலியாவை காணாமல் திடுக்கிட்டாள். எழுந்து, வீட்டில் எங்கு தேடியும் அமேலியா இல்லாததால், "அமேலியா! அமேலியா!" என குரல் கொடுக்க

வசந்தும் அமேலியாவும் அதிர்ச்சியடைந்தனர். 

அமேலியா வீட்டை நோக்கி ஓடினாள். வசந்த் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். மேகலா வாசற் கதவை திறக்கவும் அமேலியா அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது. 

"எங்க போன?" என மேகலா சற்று கோபத்தோடு கேட்க, வசந்த் காரை எடுத்துக்கொண்டு வெளியே செல்வதை பார்த்தாள். அவள் மனதில் கண நேரத்தில் பல எண்ணங்கள் தோன்றின. அமேலியாவை எரித்துவிடுவதை போல் பார்த்தாள். 

பைல் ஒன்று மறந்துவிட்டு வசந்த் சென்றதாகவும் அதை எடுத்துக்கொண்டு போய் கொடுத்ததாகவும் அமேலியா சைகையில் கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

அமேலியா கூறிய காரணம் மேகலாவை திருப்திப்படுத்தவில்லை. 

யாரிப்பாளரின் வீட்டு வாசலின் முன் வசந்தின் கார் தேங்கி நின்றது.

அழகும் கம்பீரமும் கொண்ட பெரிய மாளிகை. நல்ல மனநிலையில் வந்திருந்தால் அந்த வீட்டை மலைத்துப் பார்த்து பிரமித்திருப்பான் வசந்த். ஏனோ எதையும் ரசிக்கும் மனநிலையில் இல்லை.

அவ்வளவு பெரிய வீட்டில் ஒரே ஒரு வேலையாள் மட்டுமே இருந்தான். 'மற்ற வேலையாட்கள் இனி தான் பணிக்கு வருவார்களோ என்னவோ?'.

வேலையாள் என்னவென்று விசாரிக்க, "தயாரிப்பாளரை காணவேண்டும்" என்று சொன்னான் வசந்த்.

"அவர் வீட்டுல பிஸினஸ் விஷயங்களை பேசுறதில்லையே. அதுவும் இவ்வளவு காலையில வந்திருக்கீங்க?"

"நான் அவரை பார்த்தே ஆகணும்"

வேலையாள் வசந்தை ஏற இறங்க பார்த்தான். "உங்க பேரு?"

"வசந்த்"

வேலையாள் மாடியில் ஏறிச் சென்று மறைந்தான். அவன் வரும்வரை தயாரிப்பாளரிடம் என்னவெல்லாம் பேசுவது என்று சிந்தித்துக்கொண்டிருந்தான் வசந்த். சரியாக ஐந்து நிமிடத்தில் மீண்டும் வேலையாள் வந்தான்.

"சார் உங்களை வர சொன்னாரு"

வசந்த் மாடிப்படியை நோக்கினான்.

"வலதுபுறம் திரும்பி முதல் அறை" என்று வேலையாள் சொன்னதைக் கூட ஒழுங்காக காதில் வாங்காமல் மேலே சென்றான் வசந்த். தயாரிப்பாளரின் அறைக் கதவைத் தட்டினான்.

"உள்ளே வாங்க வசந்த்"

வசந்த் உள்ளே சென்றான். ஏகப்பட்ட கலையம்சங்கள் நிறைந்த அறை. ஓவியங்கள், அரிய பொருட்கள் என ஒவ்வான்றையும் தேடிப் பிடித்து அறையையும் வீட்டையும் அலங்கரித்திருந்தார். 'உண்மையில் இவர்  மாறுபட்ட ரசனை கொண்ட மனிதர் தான்' என வசந்த் எண்ணிக்கொண்டான்.

பெரிய வெளிச்சமில்லாத விளக்குகள் எரிந்துகொண்டிருந்த அறையெங்கும் குளிர். குளிருக்கு இதமான கம்பளியாடையை உடுத்தி படுக்கையின் அருகேயிருந்த சோபாவில் வாயில் சிகரெட்டோடு அமர்ந்திருந்தார் தயாரிப்பாளர்.

'இப்பொழுதுதான் எழுந்திருக்கவேண்டும். தான் இங்கு வந்தது பிடிக்காமலிருக்கலாம் அல்லது ஏன் வந்திருக்கிறான் என்ற காரணத்தை அறிய என்னை வரச் சொல்லியிருக்கலாம்'

"சொல்லுங்க வசந்த். இந்த நேரத்துல என் வீட்டை தேடி வந்திருக்கீங்கன்னா பெரிய விஷயமா தான் இருக்கும்".

"ஆமா சார்"

"என்னனு சொல்லுங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.