(Reading time: 16 - 31 minutes)

வசந்திற்கு நாராயணின் பாசம் புரிந்தது. அவன் ஏற்கனவே சாப்பிட்டு இருந்தாலும் தந்தையின் மேல் கொண்ட பாசத்திற்காக, சாப்பிடலாம் என முடிவெடுத்தான்.

"நிலா சாப்பிட்டாளா?"

"மாமாவுக்காக எல்லாம் வெயிட் பண்ண முடியாது. எனக்கு பசிக்குதுன்னு சொல்லி அப்போவே சாப்டுட்டா"

"அமேலியா?"

நாராயணன் வசந்தை பார்த்தார்.

வசந்த் தலையைத் தாழ்த்திக்கொண்டான். "நீங்க சாப்பிடலன்னா அவளும் சாப்பிட்டுருக்க மாட்டாளே..."

"அந்த பொண்ணு சாப்பிட்டாளா?" நாராயணன் மேகலாவை நோக்கி கேட்டார்.

"இல்லப்பா"

சிறிது யோசனைக்கு பின், "அவளையும் கூப்பிடு" என நாராயணன் கூறினார்.

நடந்தவைகளை மறைந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்த அமேலியா,  மேகலா வருவதைக் கண்டு ஓடிச் சென்று படுக்கையில் வீழ்ந்து உறங்குவதை போல நடித்தாள். உள்ளே வந்த மேகலா அமேலியாவை எழுப்பினாள். அமேலியா எழுந்தாள். 'வா சாப்பிடலாம்' என சைகையால் அழைத்தாள். அமேலியா வெளியே வந்தாள்.

வசந்தும் அமேலியாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் மனதிற்குள்ளும் ஏகப்பட்ட கனவுகள், கற்பனைகள் தோன்றி மறைந்தன. 'உட்காரு' என வசந்தின் எதிரே உள்ளே நாற்காலியில் அமர்த்தப்பட்டாள்

அமேலியா. சாப்பாடு பரிமாறப்பட்டது.

வசந்தின் முகத்தில் மகிழ்ச்சி இருந்தாலும் அவன் கண்கள் ஏனோ ஒளியிழந்திருப்பதைக் கண்டு, என்னவாகியிருக்கும் என எண்ணினாள் அமேலியா.

"உன் கதை எப்போப்பா படமாகி வெளியே வரும்?"

அக்கேள்வி வசந்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. "இன்னும் கொஞ்ச நாள் தான்ப்பா"

"டைரக்டர் வேலை ரொம்ப கஷ்டம்னு கேள்விப்பட்டேன். ஏகப்பட்டது யோசிச்சிட்டே இருக்கணுமாம். காரணமே இல்லாம கோபம் வருமாம். அப்படியா?"

"அப்படியெல்லாம் இல்லைப்பா. எல்லாம் நாம நினைக்குறதை பொறுத்து"

அதற்கு மேல் நாராயணன் எதுவும் பேசவில்லை.

வசந்தும் அமேலியாவும் ஒருவரையொருவர் பார்த்தபடியே உண்டனர். அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே நிலைத்தது. உண்டு முடித்தவுடன் அமேலியாவுடன் சிறிது நேரம் தனியாக கழிக்க விரும்பிய வசந்த், அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்தோடு தன் அறையை நோக்கி சென்றான்.

அவன் செல்வதை ஏமாற்றத்தோடு பார்த்தாள் அமேலியா. அவளும் மேகலாவோடு அறைக்கு சென்று வேதனையோடு படுத்துக்கொண்டாள். அமேலியாவுக்கு உறக்கம் வரவில்லை. வசந்த் சொல்லமுடியா சோகத்தில் ஆழ்ந்திருக்கிறான் என்ற உண்மையை மட்டும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அது என்னவாக இருக்கும்?!

விடியற்காலையில், மற்றவர்கள் எழும்பும் முன்னரே தயாரான வசந்த், 'இன்று ஒரு முடிவு தெரிந்துவிட வேண்டும்' என்ற உறுதியோடு படியில் இருந்து கீழிறங்கி வந்தான்.

வீடே அமைதியாக காட்சியளித்தது. வெளியில் விழும் மழையின் சப்தம் அவன் மனதிற்கு சற்று நிம்மதியைத் தந்தது. விடியற்காலை மழை, அதிலிருக்கும் குளிர் வசந்திற்கு பிடித்தமான ஒன்று. மழையின் குளுமையை உணர்கையில் மனம் நிம்மதியடையும். இயற்கை ஒன்றே மனிதனை அமைதிப்படுத்தும். வசந்த் அமைதியான மனநிலையில் தான் இருந்தான். தோல்வி மேல் தோல்வி அடைந்தவன் பக்குவமடைவான் என்ற உண்மையை வசந்த் உணர்ந்து கொண்டான்.

காபியின் மணம் காற்றில் கலந்து வந்து வசந்தை சமையலறைக்கு அழைத்தது. 'அக்காவும் சீக்கிரமே எழும்பியாச்சு போல' என்று எண்ணியவாறே சென்றவன் ஆச்சர்யத்தில் வீழ்ந்தான்.

அமேலியா காபியை தயார் செய்துகொண்டிருந்தாள். காலையில் அமேலியா அழகாகவே இருந்தாள்.  என்னதான் மனம் பதட்டமாக இருந்தாலும் அமேலியாவின் முகம் வசந்தை சாந்தப்படுத்தியது. அவளிடமுள்ள மந்திரம் என்னவென்று பலமுறை யோசித்திருக்கிறான். விடை தான் இன்னும் கிடைக்கவில்லை. ஒருவேளை அவளது புன்னகையாக இருக்கலாம்.

வாசலில் நின்ற வசந்தை நோக்கினாள் அமேலியா. அவள் மலரிதழில் புன்னகை. காபி கப்பை எடுத்துக்கொண்டு வசந்திடம் வந்தாள். அவளது கண்கள் காதலை சிந்தின.

'விடியற்காலை பொழுது நல்ல பொழுது தான்' என மனதிற்குள் எண்ணிய வசந்த் அவள் கொடுத்த காபியை உறிஞ்சினான். அமேலியாவின் முகத்தையே பார்த்தான்.  

அதிகாலையிலேயே வசந்த் கிளம்புவான் என அமேலியா இரவே ஊகித்து வைத்திருந்தாள். சோகத்தில் மனம் நிலையில்லாமல் தவிக்கும் நாட்களில் வசந்த் சீக்கிரமே எழுந்து வெளியே செல்வது வழக்கம். அன்றும் அவன் அவ்வாறே செல்ல தயாராகிவிட்டான். வசந்தை சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கிறோம் என அமேலியா பெருமிதம் கொண்டாள்.

"காபி எப்படியிருக்கிறது?" என அமேலியா சைகையால் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.