(Reading time: 11 - 22 minutes)

பார்ட்டியை முற்றிலும் தவிர்க்க நினைத்த ஒரே ஒருவர் தேவி தான், பார்ட்டி வேறு எங்கு நடந்தாலும் பரவாயில்லை, ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம், ஆனால் இங்கு வீட்டிலேயே நடப்பதால் அதில் எப்படி கலந்துக் கொள்ளாமல் இருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை, ஏதாவது காரணம் கிடைக்குமா? என்று அவள் தவித்துக் கொண்டிருக்க, ரூபினி முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அவளை அழைத்தாள்.

கண்டிப்பாக அவள் பார்ட்டியில் கலந்துக் கொள்ள கூடாது என்று சொல்ல தான் ரூபினி அழைத்திருப்பாள் என்று நினைத்தப்படியே தேவி சென்றாள்.

“என்ன அண்ணி, எதுக்கு கூப்பிட்டீங்க?”

“ஒரு முக்கியமான விஷயம், அது என்னன்னா இன்னைக்கு பார்ட்டியில்..” முழுதாக சொல்லவில்லை.. அதற்குள்,

“எனக்கு தெரியும் அண்ணி.. இன்னைக்கு பார்ட்டியில் நான் கலந்துக்க கூடாது அதானே..” என்றதும், ரூபினி அதிர்ச்சியாகிவிட்டாள்.

காரணம் விபாகரன் வீட்டுக்கு சென்ற போது தேவி வராததற்கு காரணம் அவள் தான் என்று தெரிந்துக் கொண்ட பாலா,

“நீ தேவி விஷயத்தில ரொம்ப ஓவரா தான் போற ரூபி.. நாங்க பொறுமையா இருக்கறதால அதை நீ உனக்கு சாதகமா எடுத்துக்காத.. நீ அவளை வேலைக்காரியா நினைக்கலாம், ஆனா எங்களை பொறுத்தவரைக்கும் அவ இந்த வீட்டுப் பொண்ணு, அவளுக்கு நல்லப்படியா கல்யாணம் செஞ்சு அனுப்பணும், அதுவரைக்கும் அவளை கஷ்டப்படுத்தாம இரு, இன்னொரு முறை இப்படி நடந்துச்சு, நான் இப்படி பொறுமையா சொல்ல மாட்டேன்..” என்று கோபமாகவே பேசியிருந்தான்.

இந்த வேலைக்காரியால் தன் கணவனிடம் தான் திட்டு வாங்குவதை நினைத்து ரூபினிக்கு  தேவி மீது கோபம் வந்தாலும், அதனால் கணவன் வெறுப்புக்கு ஆளாகவும் அவளுக்கு விருப்பமில்லை, அதுவுமில்லாமல் பாலா சொன்னது போல் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டால், தேவி தானாகவே இந்த வீட்டை விட்டு செல்லத்தானே போகிறாள்.. அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தவள்,

“நீ பார்ட்டிக்கு வர்றதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, ஆனா நான் இப்போ எதுக்கு கூப்பிட்டேன்னா, அங்க எல்லோருக்கும் முன்னாடி என்னை அண்ணின்னு கூப்பிடாத, அப்புறம் கேக்கறவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது, ஏன் வேலைக்காரி உன்னை அண்ணின்னு கூப்பிட்றான்னு யாராச்சும் கேட்டா எனக்கு அது இன்சல்ட்டா இருக்கும்.. அதை மட்டும் ஞாபகத்தில் வச்சிக்கோ..

 அப்புறம் மது அப்பா வந்துருக்காரு.. பார்ட்டி நடக்கப் போற இடத்தை மேற்பார்வை பார்க்கிறாரு, அவருக்கும் அங்க வேலை செய்றவங்களுக்கும் ஏதாச்சும் சாப்பிட வேணுமான்னு கேட்டடுட்டு வா..” என்று அவளை அனுப்பி வைத்தாள்.

ஒரே நம்பிக்கை ரூபினி தான், இப்போதும் அவர்களும் அவளது பிரச்சனைக்கு தீர்வாக அமையாததால் இனி என்ன செய்வது? என்ற குழப்பத்திலேயே சென்றவள், அங்கே மதுரிமாவின் தந்தை பூபதியோடு நின்றிருந்த பன்னீரை பார்த்து அதிர்ந்தாள்.

“இவர் எப்படி இந்த இடத்தில்..” என்று நினைத்தவள், அவர் பார்வையில் படாதபடிக்கு ஒளிந்துக் கொண்டு அவரை கவனிக்க ஆரம்பித்தாள்.

“பூபதி உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு..” என்று பன்னீர் சொல்ல,

“ஆமாப்பா.. இப்போ உன்னை பார்த்ததுல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா பன்னீர்.. எப்படி இருக்க..” என்று பூபதி பன்னீரை விசாரித்தார். பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் போல் இருவரும் ரேஸ் நண்பர்கள்.. சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்சில் நடக்கும் குதிரைப் பந்தயத்திற்கு இருவரும் செல்வார்கள், அங்கு தான் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். பலமுறை அங்கே பந்தயத்தில் பணம் கட்டி தோற்று போனாலும் விடாமுயற்சியாக சில சமயம் பணம் ஜெயித்தும் இருக்கிறார்கள்.

“ஆமாம் பூபதி.. நீ இங்க எப்படி?”

“இது என்னோட பொண்டாட்டியோட அக்கா வீடு.. உனக்கு தெரியுமா பன்னீர், என்னோட பொண்ணு இப்போ ஒரு முன்னனி கதாநாயகி, மதுரிமா கேள்விப்பட்ருக்கல்ல, அதான் என் பொண்ணு..”

“என்னப்பா சொல்ற, மதுரிமா உன்னோட பொண்ணா, நான் சாத்விக் தம்பிக்கிட்ட தான் பி.ஏ வா இருக்கேன், எத்தனையோ முறை மது மேடமை பார்த்துருக்கேன், ஆனா அவங்க உன்னோட பொண்ணுன்னு தெரியாம போச்சே..”

“என்னது நீ சாத்விக்கிட்ட வேலை செய்றியா பரவாயில்லைப்பா, மதுவோட கால்ஷீட்ல்லாம் என்னோட சகலையும் இப்போ அவரோட பிள்ளையும் தான் பார்த்துக்கிறாங்க.. அவங்க படிச்சவங்கன்னு நான் தான் எல்லாம் அவங்க பொறுப்பில் ஒப்படைச்சிட்டேன்..” என்று பந்தாவாக கூறிக் கொண்டார்.உண்மையில் எப்போதுமே யாரும் அவரை மதிப்பது கூட கிடையாது. இப்போது கூட அவரே தன்னை உயர்வாக காட்டிக் கொள்ள இங்கு வந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.