(Reading time: 12 - 23 minutes)

பார்ட்டி பாலா வீட்டின் முன்பக்கம் உள்ள தோட்டத்தில் நடந்தது. அங்கேயே பஃபே முறையில் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை பாலாவிற்கு அலுவலக ரீதியாக தெரிந்தவர்கள் வந்துக் கொண்டிருக்க, அடுத்ததாக ரூபினியின் பெற்றோர்கள் வரவும் அவளும் பாலாவும் அவர்களை  வரவேற்றனர். அடுத்து புவனாவும் மதுரிமாவும் அவர்களோடு பேச ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் மதுரிமாவின் கண்கள் விபாகரனின் வரவுக்காக வாசலையே பார்த்திருந்தது.

அதேபோல் அஜயும் சுஜனாவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, அவனை ஏமாற்றாமல் அவள் உடனே தன் பெற்றோர்களுடன் காரில் வந்து இறங்கினாள். இறங்கியவள் முதலில் அஜயை தான் பார்த்தாள். ஆனாலும் அவனை பார்க்காதவள் போல் அவள் கடந்து போக முயற்சிக்க, சுஜனாவின் தந்தை வீரராகவனோ அவராக சென்று, “ஹாய் அஜய்..” என்று கைகுலுக்கி பேசினார்.

தொழில் ரீதியாக அவருக்கு அஜயை ஏற்கனவே தெரியும், விபாகரன் இப்போது தான் இந்தியா வந்திருக்க, வியாபார ஒப்பந்தம் போடும் போது பாலாவுடன் அஜய் தான் இருந்து ஒப்பந்தங்களை தயார் செய்தான். அப்படி தான் அஜயை அவருக்கு தெரியும், இப்போது தந்தை அஜயோடு பேசவே சுஜனாவும் அங்கு  இருக்க வேண்டியதாக இருந்தது. அவர் இப்போது ஆரம்பிக்க இருக்கும் புதிய ப்ராஜக்ட்டை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவளுக்கும் அங்கிருந்து நகரவே தோன்றவில்லை, நடுவில் தன் மனைவியிடமும் சுஜனாவிடமும் அவனை புகழ்ந்து வேறு பேசினார். இதற்கு நடுவில் ரூபினியின் தந்தை வீரராகவனுக்கு நண்பன் என்ற முறையில் அவரை கூப்பிடவும்,

வீரராகவனும் அவர் மனைவியும் ரூபினியின் தந்தையை பார்ப்பதற்கு சென்றுவிட்டனர். சுஜனாவும் அவர்கள்  பின்னே செல்ல முயற்சிக்க,

“ சுஜா ப்ளீஸ் கொஞ்சம் நில்லு..” என்று அஜய் அவளை மெதுவாக அழைத்தான்.

அவனது அழைப்பில் அவளும் அங்கேயே நின்று கொண்டாள்.

“நான் போன் பண்ணா ஏன் எடுக்கல சுஜா? என் மேல ஏதாச்சும் கோபமா?” என்று அவன் கேட்கவும்,

“ அப்படியெல்லாம் எதுவும் இல்லையே, எனக்கு ஏன் உங்க மேல கோபம்.. ரொம்ப நாளுக்கு பிறகு நாம எதைச்சேயா பார்த்தோம், பேசினோம், அதோடு நிறுத்திக்கிறது  நல்லதுன்னு தோனுது..” என்று அவள் சொல்லவும், அவனும் அமைதியாக நகர்ந்து சென்று விட்டான்.

அவளுக்கு திருமணம் பேசி இருக்கும் இந்த நேரத்தில், அவளை விட்டு தள்ளி இருப்பது நல்லது என்று அவன் ஏற்கனவே யோசித்திருந்தான், இருந்தும் இந்த பார்ட்டிக்கு வந்தால் ஒருமுறை அவளை  பார்க்கலாம் என்று நினைத்தான். ஆனால் இப்போது அவன் நினைத்ததை தான் அவளும் கூறினாள், ஆனாலும் அவள்  அப்படி சொல்லவும் அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

அவளுக்கும் அப்படி பேசியது கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தும் அஜயை விட்டு தள்ளி இருப்பது நல்லது என்று வீட்டிலிருந்து கிளம்பும்போதே  முடிவு செய்து கொண்டு தான் வந்தாள். அதேபோல் முடிந்த வரை பார்ட்டி முடியும் வரை அவனை விட்டு தள்ளி நிற்பது நல்லது என்று நினைத்துக் கொண்டாள். அதற்குள் அவளைப் பார்த்த ரூபினி அவளருகில் வரவும், அவளும் ரூபினியிடம் பேசியபடியே அங்கிருந்து சென்றுவிட்டாள். அஜயும் அவளை ஏக்கத்தோடு பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தான்.

சுஜனா குடும்பம் வந்த சிறிது நேரத்தில் மஞ்சுளாவும் அர்ச்சனாவும், அர்ச்சனாவின் கணவன் விஜய்யும் வந்தனர். அவர்களை பாலா வரவேற்க, மதுரிமாவும் அவர்களை கண்டவுடன் மகிழ்ச்சியோடு அவர்கள் அருகே சென்றாள்.

 “வணக்கம் ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க? எப்படி இருக்கீங்க அர்ச்சனா..” என்று இருவரையும் அவள் விசாரித்தாள்.

“நல்லா இருக்கேன் ம்மா..” என்று மஞ்சுளா பதில் சொல்ல,

 “வாவ் மதுரிமா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க..” என்று அர்ச்சனா படபடத்தாள்.

“அப்புறம் மதுரிமா இவர் தான் என்னோட ஹஸ்பண்ட் விஜய்..” என்று தன் கணவனை அர்ச்சனா அறிமுகப்படுத்தவும்,

அவருக்கும் வணக்கம் வைத்தாள். இவர்கள் மூவர் மட்டும் வந்திருக்கிறார்கள், விபாகரன் வரவில்லையே என்று அவளுக்கு ஏமாற்றமாக இருக்க, அதை அவர்களிடம் எப்படி கேட்பது என்று அவள் தயங்கினாள்.

“அண்ணா கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க..” என்று அர்ச்சனா அவளை புரிந்தவளாக பதில் கூறவும், மதுரிமா மகிழ்ச்சியாக தலையாட்டினாள்.

இவர்களை வரவேற்க வந்தவள் ஒருவித தவிப்போடு யாரயோ தேடியதையும், இப்போது விபாகரன் வருவதைப் பற்றி அர்ச்சனா சொன்னதும் மதுரிமாவின் முகம் மலர்ச்சியை காட்டியதையும் மஞ்சுளா கவனித்துக் கொண்டுதான் இருந்தார். அன்று மதுரிமா வீட்டுக்கு வந்து சென்றதிலிருந்து அர்ச்சனா விபாகரனுக்கு மதுரிமாவை திருமணம் செய்து கொடுப்பதை பற்றி தான் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தாள்.

மதுரிமாவை பார்க்க  நல்லவிதமாக தான் தெரிகிறது. திரைப்படங்களில் கூட அவள் நல்லமாதிரியாக நடித்து தான் அவர் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த கல்யாணம் பொருந்தி வருமா என்பது தான் அவருக்கு குழப்பமாக இருந்தது. ஆனாலும் இவர்களது திருமணம் நடப்பது ஏற்கனவே கடவுளால் முடிவு செய்யப்பட்டதாக இருந்தால், அதற்கு அவர் தடையாக இருக்கப்போவதில்லை, இப்போதைக்கு தன் மகன் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு தான் அவருக்கு முதன்மையாக இருந்தது. மற்றப்படி அவன் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டால், மணப்பெண் மதுரிமாவாக இருந்தாலும் சரி தான் என்று நினைத்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.