(Reading time: 11 - 21 minutes)

அதையும் தாண்டி அவளை உறுத்திய விஷயம், அந்த டெஸ்ட் ரிப்போர்ட் எடுத்தது மனநலம் பேணும் டாக்டர் சொல்லி என்பது. இதுவரை அவள் அப்படி யாரையும் சந்திக்கவில்லை. எனில், எப்படி இது சாத்தியம் என்று யோசனை ஓடியது.

என்னதான் படித்து இருந்தாலும், வீட்டில் ஒரு டாக்டர் இருந்தாலும், இயல்பில் பயந்த சுபாவமுள்ள மித்ராவிற்கு, சைக்கியாட்ரிக்ட் டாக்டர் என்றது ஒரு வேதனைக் கொடுத்தது. தனக்கு மனநலம் சரி இல்லையோ, அதைச் சரி செய்யத்தான் ஷ்யாம் அத்தான் முயற்சி செய்கிறாரோ என்று எண்ணங்கள் சுழன்றது.

இத்தனை எண்ணங்களும் டைனிங் டேபிள் வரும்முன் தோன்றியதே. அங்கே வந்த அமர்ந்த பின் அவளுக்கு மற்றது எல்லாம் பின்னுக்குச் செல்ல,

ஷ்யாம் சுமியின் செல்லச் சண்டைகளும், மைதிலியின் கோபமும், அதை ரசிக்கும் தன் மாமா ராம் என இவர்களைப் பார்த்து சந்தோஷம் தான் தோன்றியது. தன்னை அறியாமல் இந்த குடும்பத்தோடு தன்னை எக்காலத்திலும் பிரித்து வைத்து விடாதே இறைவனே என்ற வேண்டுதல் வைத்தாள் மித்ரா.

ஆரம்பத்தில் மித்ராவிற்கு தன் மாமா ராமைப் பார்க்கும் போது மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார் என்று தான் நினைத்தாள். பாசம் இருப்பதை உணர்ந்து கொண்டாலும், அதை வெளிகாட்டுவார் என்று எண்ணவில்லை.

திருமணமாகி வந்த பின் அவளால் ராமின் பாசத்தை வெளிப்படையாக உணர முடிந்தது. எந்த விதத்திலும் தன் பிள்ளைகளையோ, மனைவியையோ விட்டுக் கொடுக்காத பண்பும், அதே சமயம் அறியாமல் கூட தவறு செய்து விட முடியாத அளவிற்கு தன் பிள்ளைகளை அவர் வளர்த்த விதமும், மித்ராவிற்கு வாவ் என்று ரசிக்கத் தோன்றியது.

இப்படி எல்லாம் யோசித்துக் கொண்டு இருந்தவள், சற்று நேரத்தில் எல்லோரும் அவரவர் வேலைக்குக் கிளம்பத் தயாராகினர்.

மித்ராவும், மைதிலியோடு செல்லத் தயாராகினாள். தங்கள் அறைக்கு வந்த ஷ்யாம் , சட்டென்று அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு ,

“பாய் .. மிது பேபி. “ என்று விட்டுச் சென்றான்.

இப்போதும் மித்ரா தன்னை மறந்து சற்று நேரம் நின்றாள். கீழே மைதிலி இவளை அழைக்கும் குரல் கேட்கவும், தன்னை மீட்டு வேகமாகக் கிளம்பி வந்தாள்.

இருவரும் தங்கள் அலுவலகம் சென்றனர். அந்த முக்கியமான வி.ஐ.பி இல்லத் திருமண விழா ஆரம்பமாவதால், அலுவலகத்தில் அத்தனை பேரும் பம்பரமாகச் சுழன்றனர்.

அவரவர் வேலை மட்டும் அல்லாது, தேவைபட்டால் மற்றவர் வேலையையும் பார்த்தனர். இல்லை என்றாள் மற்றவர்களின் வேலையோடு இணைந்து கொண்டனர்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், அந்த தொழிலதிபர் இவர்கள் அலுவலகத்தில் அத்தனை பேரையும் தனித்தனியே வேறு முதல்நாள் வரவேற்பிற்கு அழைத்து இருந்தார்.

எல்லோருக்குமே செல்ல ஆசையாக இருந்தது. அநேகம் பேர்களின் ஆதர்ச நாயகன், நாயகியை பார்க்கலாமே என்ற எண்ணம். மற்றவர்கள் கூட பெரிய பெரிய வி.ஐ.பி எல்லாம் வருவார்களே. அவர்களைப் பார்க்கலாமே என்ற எண்ணத்தில் இருந்தனர்.

இவர்கள் எல்லோரும் மண்டபத்திற்கு வந்து சேரும் பொறுப்பை மைதிலி மித்ராவிடம் ஒப்படைத்தார்.

எனவே யார் யார் வருகிறார்கள் என்று கணக்கெடுத்து, வேன் போதுமா, பஸ் வேண்டுமா என்று சரி பார்த்தாள். வரவேற்பிற்கு செல்வதால், எல்லோரும் நன்றாக டிரஸ் செய்து கொண்டு வர விரும்புவார்கள். எனவே அவர்களை அவரவர் வீட்டின் அருகில் இருந்து அழைத்துச் செல்வது நல்லது. அவர்களுக்கு சந்தோஷமாகவும் இருக்கும் என மைதிலியிடம் பேசி ஏற்பாடு செய்தாள்.

அதன் படி ஸ்டாப் அட்ரஸ் வைத்துக் கொண்டு, ஒரு ரூட் மேப் தயார் செய்து அதை எல்லோரிடமும் கேட்டு ஒப்புதல் வாங்கிக் கொண்டாள். திருத்தங்கள் சொன்னாலும் அதையும் ஏற்றுக் கொண்டு , மாற்றி அமைத்தாள். மீண்டும் அந்த பஸ் அவரவர் வீட்டில் இறக்கி விடவும் பேசினாள்.

இந்த வேலைகளினால் மித்ரா பிஸியாக இருக்க, மைதிலியோ அந்த கல்யாண ஏற்பாடுகளில் பிஸியாக இருந்தாள். செக் லிஸ்ட் வைத்துக் கொண்டு எல்லோரையும் விரட்டிக் கொண்டு இருந்தாள்.

வீட்டில் இருக்கும் நேரங்களில் ஒரு சில வேலைகள் மித்ராவிடம் கொடுத்து சரிபார்க்கச் சொல்ல, மித்ராவிற்கும் நேரம் சரியாக இருந்தது.

மாமியாரும் மருமகளும் அந்த ஒரு வாரம் பம்பரமாகச் சுழன்றனர்.

ராம், ஷ்யாம் இருவருக்கும் தொழில் ரீதியாக தனி தனியாகவே பத்திரிகை வைத்து இருக்க, இருவரும் குடும்பத்துடன் செல்வது என்று தீர்மானம் செய்து கொண்டனர்.

அந்த விழாவிற்கு என ஷ்யாம் மித்ராவைப் பர்சேஸ் அழைக்க, அவளோ நேரமில்லை என்றாள்.

அவர்களின் பில்ட் அப் பார்த்த ஷ்யாம் தலையில் கை வைத்தான். சுமியோ

“இறைவா, இந்த கொசுக்களின் தொல்லையிலிருந்து காப்பாத்துப்பா” என்று வேண்டிக் கொள்ள, மைதிலியின் கையால் கொட்டு வாங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.