புகழேந்தி இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் எனபது ஒருவேளை சுடருக்கு தெரிந்திருந்தால், அவள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்திருப்பாள், ஆனால் அங்கு மகி வீட்டில் நடந்தது அவளுக்கு எப்படி தெரியும், பூங்கொடி எழிலிடம் இதுகுறித்து பேசினார் தான், ஆனால் அதையெல்லாம் எழில் சுடரிடம் சொல்லிக் கொண்டிருக்கவில்லை,
அருளை வேண்டாம் என்று புகழேந்தி சொன்னதால் அவர் சுடரை மகிக்கு திருமணம் செய்து வைக்க ஒத்துக் கொள்வாரா? என்பது தெரியவில்லை, சுடர் நேரடி ரத்த சம்பந்தமான உறவு இல்லையென்றாலும், அருளை வேண்டாமென்று சொல்லிவிட்டு சுடரை மகிக்கு திருமணம் செய்து வைத்தால், அது தன் அன்னைக்கும் சகோதரிக்கும் மனக் கஷ்டத்தை கொடுக்கும் என்பதால், இனி அதைப்பற்றி பேச வேண்டாம் என்று எழில் நினைத்துக் கொண்டு தன் மனதில் உள்ளதை மறைத்துக் கொண்டார். அதனால் புகழேந்தி பேசியது சுடரொளிக்கு தெரியவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால், அறியாமல் கூட செய்ய இருந்த தவறுகள் நடக்காமல் இருந்திருக்கும்.
சுடரொளி மகிழ்வேந்தனை பார்க்கச் சென்ற போது, அவன் அலைபேசியில் யாரிடமோ கோபமாக பேசிக் கொண்டிருந்தான். அருகில் அறிவழகன் நின்றிருந்தான். சுடர் அவர்கள் போய் அமர்ந்த போதும் அவளை ஒரு பார்வை பார்த்தவன், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
அவன் கோபமாக பேசியதை கவனித்தவள், அறிவழகனிடம் ஜாடையாக என்ன என்று கேட்க, அவன் பிறகு சொல்வதாக ஜாடையில் கூறினான். அதற்குள் பேசி முடித்தவன்,
“அறிவு நீ போறதா இருந்தா போ.. நான் வரல, அதை அவன்கிட்ட நான் சொல்லிட்டேன்” என்று சொன்னதும்,
“ஹே அவன் நம்ம ப்ரண்ட் டா.. அதுக்காகவாவது பார்க்கக் கூடாதா..” என்று அறிவு கூறினான்.
“இல்லடா எனக்கு பிடிக்காத விஷயத்துல என்னால கலந்துக்க முடியாது புரிஞ்சிக்கோ..” என்று மகி தீர்மானமாக கூறவும்,
“சரிடா உன் இஷ்டம்.. நான் மட்டும் போயிட்டு வரேன்..” என்ற அறிவு கிளம்பிச் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும், “என்ன மகிழ் யார்க்கிட்ட கோபமா பேசிகிட்டு இருந்த, எங்க போ மாட்டேன்னு அறிவுக்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க..” என்று சுடர் கேட்டாள்.
“என்னோட ப்ரண்ட்க்கு இன்னும் கொஞ்ச நேரத்துல ரெஜிஸ்டர் மேரேஜ்.. அதுக்கு சாட்சி கையெழுத்து போட எங்களை கூப்பிட்டான்.. அதுக்கு தான் அறிவை மட்டும் போகச் சொன்னேன்..”
“ஏன் மகிழ் ப்ரண்டோட மேரஜ்க்கு போக விருப்பம் இல்லாத அளவுக்கு என்ன கோபம்..”
“அவன் வீட்டுக்கு தெரியாம ரிஜிஸ்டர் மேரஜ் செஞ்சுக்க போறான்.. பெத்தவங்க சம்மதம் இல்லாம ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுக்கறது தப்பில்லையா.. அவங்க ஆசிர்வதம் அவனுக்கு வேண்டாமா..”
“ஏன் அவங்க பேரண்ட்ஸ் இந்த மேரேஜ்க்கு ஒத்துக்கலயா மகிழ்..”
“அவனோட காதலைப்பத்த்தி அவன் வீட்ல சொல்லவே இல்லை. அவங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர் அது தெரிஞ்சும் அவன் ஒரு பொண்ணை துரத்தி துரத்தி காதலிச்சான்.. நாங்க கூட வீட்ல மேரேஜ்க்கு ஒத்துக்கலன்னா என்னடா செய்வன்னு கேட்டதுக்கு அதெல்லாம் பார்த்துக்கலாம்னு அசால்ட்டா பதில் கூறினான். இப்போ அவங்க வீட்ல யாரோ ரிலேஷன் ஸைட்ல பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்க பேசிட்டு இருக்காங்க.. இந்த நேரம் அவனோட காதல் விஷயத்தை சொல்ல பயந்துக்கிட்டு அவசர அவசரமா ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுக்க போறான்.. இப்போ இதுல அவனோட தங்கச்சி கல்யாணம் பாதிக்காதா.. கூட அவனுக்காக நிச்சயிக்கப்பட்ட பொண்ணோட வாழ்க்கையும் பாதிக்கும் இல்ல..”
“அதுக்காக காதலிச்ச பொண்ணை விட்டுட்டு வீட்ல சொல்றாங்கன்னு வேற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க முடியுமா மகிழ்..”
“வீட்ல காதலுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் அவன் ஒரு பொண்ணை காதலிச்சது தப்பு, சரி அப்படியே காதலிச்சாலும், வீட்ல அவனுக்கு கல்யாணத்துக்கு பேசினப்பவே அவன் தன்னோட காதல் விஷயத்தை சொல்லி அந்த பொண்ணை தான் கல்யாணம் செஞ்சுக்குவேன்னு சொல்லியிருக்கணும், காதலுக்காக போராடியிருக்கணும், அப்படியும் அவங்க ஒத்துக்கலன்னா அப்போ இப்படி ஒரு முடிவு எடுத்தாக்கூட பரவாயில்ல.. ஆனா கல்யாணம் பேசி முடிவாகுற வரை அமைதியா இருந்துட்டு, இப்போ இப்படி வீட்டுக்கு சொல்லாம திருட்டு கல்யாணம் செஞ்சுக்கறது தப்பு.. அதுல எனக்கு உடன்பாடு இல்ல..”
“நீ சொல்றதெல்லாம் ஓகே மகிழ், ஆனா உன்னோட ப்ரண்ட்க்கு என்ன சூழ்நிலையோ இப்படி முடிவெடுக்க வேண்டியதா போச்சு, உனக்கு இப்படி ஒரு சிட்டுவேஷன் வந்தா நீயும் இப்படி தானே முடிவு எடுத்திருப்ப..” என்று அவள் கேட்டதும்,
“கண்டிப்பா இப்படி சுயநலமா நான் யோசிக்க மாட்டேன், எனக்கு பர்ஸ்ட் பேமிலி தான் முக்கியம், அப்பா, அம்மாவை எதிர்த்து கல்யாணம் செஞ்சுக்கறதெல்லாம் என்னோட லைஃப்ல நடக்காது.. அப்படி ஒரு நிலைமை உருவாக நான் காரணமாகவும் இருக்கமாட்டேன்..” என்று மகி தெளிவாக கூறினான்.
ஆனால் அதைக்கேட்டு சுடரொளியின் மனநிலை தான் மாறிப்போனது. இப்போது அவள் வந்திருப்பதே அவள் காதலை அவனிடம் சொல்லி அவனை திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணத்தில் தான், ஆனால் அவனோ காதலையே தவறு என்கிறான், குடும்பத்தாருக்கு எதிராக செயல்படமாட்டேன் என்று சொல்கிறான், அப்படியென்றால் சார்லி சொன்னது போல் மகிழ் என்னை காதலிக்கவில்லையா? வீட்டில் அருள்மொழியை திருமணம் செய்துக்கொள்ள சொல்லி கூறினால் உடனே ஒத்துக் கொள்வானா? என்று அவளுக்கு கேள்வி பிறந்ததது.
ஒருவேளை இப்போது இப்படி பேசியதால் வருங்காலத்தில் குடும்பத்தாருக்கு தெரியாமல் என்ன, சுடரொளிக்கே தெரிவிக்காமல் அவள் கழுத்தில் தாலி கட்டும் நிலை வரும் என்று மகி முன்பே அறிந்தானா? என்ன?
இப்போது கூட அவன் காதல் தவறு என்று சொல்லவில்லை, பெற்றோர்களை புறக்கணித்து திருமணம் வேண்டாம் என்று தான் கூறினான்.