(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 34 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

சுடரொளி கோவிலுக்கு சென்று வந்ததிலிருந்து பாட்டி பேசிய விஷயத்தையே நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். ஒருவேளை அமுதன் அவளிடம் காதலை பற்றி எதுவும் பேசாமல் சென்றிருந்தால், அவளும்  மகி மீது இருக்கும் காதலை உணராமலேயே போயிருக்கலாம், அப்போது பாட்டி பேசிய விஷயம் அவளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியும் இருந்திருக்காது,

ஆனால் இப்போதோ மகி அவளுக்கு வேண்டும் என்ற ஆசை மனம் முழுதும் நிரம்பியிருந்தது. ஆனால் அதை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பது தான் தெரியவில்லை, பாட்டி அந்த குடும்பத்துக்கு மூத்தவர், அதனால் அவரது ஆசையை நிறைவற்ற தான் அனைவரும் யோசிப்பர். அதைவிட பாட்டிக்கும் சரி, கலையரசிக்கும் சரி அவளை சுத்தமாக பிடிக்காது.

ஒருவேளை எழிலிடம் அவளது  விருப்பத்தை சொன்னாலும், எழில் அதை நிறைவேற்றுவாளா  என்பது தெரியவில்லை, முன்பு ஒருமுறை எழில் அவளிடம், “கலை அக்கா தன் கணவன் இறந்ததும் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டதால், அவளிடம் உரிமையாக எத்ற்காகவும் சண்டையிட மாட்டேன், எனக்கு கிடைக்க வேண்டியதாக இருந்தாலும் அவளுக்கு விட்டுக் கொடுத்து விடுவேன், ஏன் அப்படியென்றால், நாம வாழாம வந்துவிட்டோம், அதனால் நமக்கு இங்கு மரியாதை கிடைக்காது என்று அவள் நினைத்து விடக் கூடாது அதனால் தான்..” என்று சொல்லியிருக்கிறாள்.

எழிலே பேச முடியாது எனும்போது அவள் தந்தை கதிர் கண்டிப்பாக அவளுக்காக பேசுவார் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது, அதே போல் பூங்கொடியிடம் பேசலாம் என்றால் அதுவும் முடியாது, அந்த வீட்டு மகளான எழிலே இவ்வளவு யோசிக்கும் போது மருமகளாக பூங்கொடியும் யோசிப்பாரே,

பேசாமல் நேராக புகழேந்தி மாமாவிடம் தன் மனதில் உள்ளதை தெரிவித்தால் என்ன? என்று யோசித்தாள். ஆனால் பூங்கொடி அத்தையிடமே பேச முடியாத போது, மாமாவிடம் மட்டும் எப்படி பேச முடியும்?

இதில் சம்பந்தப்பட்ட அருள்மொழியிடமே “நான் மகியை காதலிக்கிறேன், அவனை எனக்கு விட்டு கொடு..” என்று கேட்டுவிடலாம், ஆனால் அருள்மொழிக்கு அவளை கண்டாலே ஆகாது, பின் என்ன செய்யலாம் என்று சிந்தித்தவள்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சார்லி அன்னைக்கு என்ன சொன்னான்? மகிழும் என்னை காதலிப்பதாக தானே சொன்னான். இரண்டுப்பேரும் ஒருவரையொருவர் காதலிக்கும்போது பின் எதற்காக இந்த குழப்பம், மகிழே நான் சுடரொளியை காதலிக்கிறேன் என்று தன் குடும்பத்திரிடம் கூறிவிட்டால், பிறகு என்ன பிரச்சனை இருக்கப் போகிறது? இது புரியாமல் ஏன் நான் இவ்வளவு குழப்பிக் கொள்கிறேன்..” என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள்,

சார்லி சொன்னது போல் மகிழுக்கும் தன் மேல் காதல் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். மகியாக வந்து அவன் மனதை திறக்கும் வரை அவளால் காத்திருக்க முடியாது, ஒருவேளை சார்லி சொன்னது போல் மகிழ் அவளை காதலிக்கவில்லையென்றால் என்ன செய்வது? இப்போதே மகிழிடம் நேராக போய் ஐ லவ் யூ என்று சொல்லிவிட வேண்டும், அதை மகிழும் ஏற்றுக் கொண்டால், உடனே அவர்கள் வீட்டில் தங்களது திருமணத்தையும் பேசிட வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவள் வளர்ந்த நாட்டில் அவள் அப்படித்தான் பார்த்திருக்கிறாள், ஆணுக்கும் பெண்ணுக்கும் பிடித்திருந்தால் உடனே பெற்றவர்களிடம் சொல்லி திருமணம் செய்துக் கொள்வார்கள், ஏன் சில பேர் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்தும் பார்த்திருக்கிறாள். அதற்காக குடும்ப உறவுகள் வேண்டாம் என்று அவள் நினைக்கவில்லை, ஆனால் காதல் என்றால் உடனே ஒத்துக் கொள்வார்கள் என்று அவளே நினைத்துக் கொண்டாள். அதனால் உடனே மகியிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள்.

சுடர் இங்கு குழப்பிக் கொண்டிருந்த வேளையில் பூங்கொடி புகழேந்தியிடம் மகி, அருள் திருமணம் பற்றி தன் மாமியர் பேசிய விஷயத்தை கூறிவிட்டார். பூங்கொடிக்கு எப்படியோ அதேபோல் தான் புகழேந்திக்கும் அருளை தன் தங்கையின் பெண்ணாக நினைத்துப் பார்க்க முடியவில்லை, மகி, மலர் போல் அவளையும் அவரது பிள்ளையாக தான் பார்த்தார்.

அதனால் இது சரிவராது என்று தன் அன்னையிடமே அவர் நேராக சொல்லிவிட்டார். “இதுவரை யாரும் அப்படி நினைத்துப் பார்த்ததில்லை, இப்போது திடிரென இந்த கல்யாண பேச்சு வேண்டாம், அருளுக்கு மேலே படிக்கும் எண்ணம் இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் சொந்தத்தில் திருமணம் செய்வதும் மருத்துவ ரீதியாக நல்லது கிடையாது..” என்று அவர் மறுப்பு தெரிவித்தார்.

“நம்ம குடும்பத்துல சொந்தத்துல கட்டி கொடுப்போமேப்பா.. இதுவரைக்கு யாருக்கு எதுவும் தப்பா நடந்ததில்லையே, உங்க 3 பேருக்கோ, இல்ல மலர், மணிக்கோ சொந்தத்துல கட்டிக்கிற முறை யாருமில்லை, அதனால அப்படியே விட்டுட்டோம், இப்போ அருள், மகிக்கு முறை இருக்கும்போது ஏன் விடணும், ஒன்னுக்குள்ள ஒன்னா நாம சம்பந்தத்தை முடிச்சா நல்லது,

இனி வெளிய இருந்து நம்ம வீட்டுக்கு வரப் பொண்ணு குடும்பத்தை கூட பிரிக்கலாமில்ல, அதனால தான் சொல்றேன்..” என்று முத்து பாட்டி சொல்லியும், புகழேந்தி அதை ஏற்றுக் கொள்ளவில்லை, கலையரசி புகழேந்தியின் பதிலை கேட்டு மௌனமாகவே இருக்கவும்,

“என்ன கலை நான் இப்படி பேசறது உனக்கு கஷ்டமா இருக்கா.. அருளை நான் அப்படியே விட்டுடுவேனா, மலர், மணிக்கு நல்ல வரனா பார்த்து முடிச்சது போல அருளுக்கும் நல்ல மாப்பிள்ளையா பார்த்துடலாம்மா.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா..” என்று கேட்கவும்.

“என்ன அண்ணா உங்களை நம்பாம நான் வேற யாரை நம்பப் போறேன்.. அருள் உங்க பொண்ணுன்னா அவளுக்கு நீங்க நல்லது தான் செய்வீங்க..” என்று கலை பதில் கூறினார்.

“சரி இப்படி ஒரு பேச்சு வந்தது மகிக்கும் அருளுக்கும் தெரிய வேண்டாம் சரியா..” என்றதும் அனைவரும் அதை ஆமோதித்தனர். இருந்தும் இதை இப்படியே விட்டுவிடக் கூடாது, நேரம் காலம் வரட்டும் மீண்டும் இதுப்பற்றி புகழிடம் பேசி அவனையும் சம்மதிக்க வைக்கலாம் என்று பாட்டி முடிவெடுத்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.