அந்த அலுவலகம் காலை நேரப் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.
கம்ப்யூட்டர் மானிட்டரில் விழிகளைப் பதித்துக் கொண்டு, மேக்கப் கலையாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் ஊழியர்கள் அவ்வப்போது ஓய்வறைக்குச் சென்று “டச் அப்” செய்து கொண்டு திரும்பி வந்தனர். அவர்கள் போவதையும், வருவதையும் ஓரக் கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன சில இளைய நெஞ்சங்கள். அவ்வப்போது ஒன்றிரண்டு பெருமூச்சு சப்தங்களும் கேட்டுக் கொண்டுதானிருந்தன.
ஆண் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்க, ஒரு சிலர் மட்டும் கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஒரு சிலருக்கு அந்த ஆபீஸில் “சின்ஸியர் சிகாமணிகள்” என்ற பெயருண்டு.
அவ்வப்போது மேனேஜர் அறைக்குச் சென்று விட்டுத் திரும்பும் பலர் சத்திழந்த முகத்துடனும், ஒரு சிலர் புன்னகை முகத்துடனும் திரும்பிக் கொண்டிருந்தனர். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது போல், மேனேஜர் அறைக்குள் என்ன நடந்தது என்பதை முகங்கள் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன.
“ரவீந்தர்....உங்களை மேனேஜர் கூப்பிடறார்” என்று பியூன் முருகன் வந்து சொல்ல, பக்கத்து இருக்கைக்காரர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர். “போ....போ... “டுமீல் ராஜா” இன்னிக்கு வீட்டுல பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல...எல்லோரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டிருக்கார் போ...போ.....நீயும் போய் உன் பங்கிற்கு கொஞ்சம் டோஸ் வாங்கிட்டு வா” என்றான் சக நண்பன் தனபால்.
ஆனால், அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாதவனாய், “ப்ச்” என்று அலட்சியமாய் மேனேஜர் அறை நோக்கி நடந்த ரவீந்தர் எப்போதும் மற்றவர்களைப் போல் மேனேஜரைக் கண்டு அஞ்ச மாட்டான். இன்றும் தைரியமாகவே உள்ளே சென்றான். அவனுக்குத் தெரியும், மார்க்கெட்டிங் பிரிவிலிருக்கும் அவன் அந்த மாத இலக்கை முடித்து விட்டு அடுத்த மாத இலக்கையும் ஒரு முப்பது சதவீதம் முடித்து விட்டிருந்தான். அவனைத் திட்ட மேனேஜருக்கு எந்த விஷயமுமில்லை.
“மே..ஐ கம் இன் சார்?” நாசூக்காக கதவைத் திறந்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் வார்த்தைகளுக்கு வலிக்காமல் கேட்டான். முகத்தில் வழக்கமான புன்னகை வசீகரமாய் விரிந்த்து.
“வாப்பா!...மார்க்கெட்டிங் மன்னா” என்று சிரித்த முகத்துடன் அவனை வரவேற்று எதிர் நாற்காலியில் அமர வைத்த மேனேஜர் தேவநாதன், “உன்னுடைய பர்ஃபாமென்ஸ் சார்ட்டையும்....மார்க்கெட்டிங் திறமை பற்றிய விபரங்களையும் ஹெட் ஆபீஸுக்கு மெயில் அனுப்பியிருந்தேன்...ரொம்பப் பாராட்டி பதில் போட்டிருந்தார் எம்.டி.” என்றார்.
mr. Ravidhar periya gyaniyaga iruparu pole
I liked the reference passage about marketing the shoes👌 look forward to see what happens next.
Best wishes for ur new series.👍
Thank you.