(Reading time: 5 - 9 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 11 - முகில் தினகரன்

டுத்த தெருவிலிருக்கும் சலூனுக்குச் சென்று ஷேவிங் செய்து கொண்டு திரும்பி வந்த தேவநாதன், தன் வீட்டு வாசலில் தரகர் கண்ணுசாமியின் டி.வி.எஸ்-50 வண்டி நிற்க, யோசனையுடன் உள்ளே நுழைந்தார்.

“வாய்யா...தரகு!...என்னமோ அன்னிக்கு வீராவேசமா இந்தப் பக்கமே தலை வெச்சுப் படுக்க மாட்டேனுட்டுப் போனே?...இப்ப வந்து நிற்கறே?...என்ன சமாச்சாரம்?” தேவநாதனின் குரலில் ஒரு எள்ளல் இழையோடியது.

“அய்யா....கல்யாணத் தரகு வேலை பார்க்கற நான் அப்படியெல்லாம் கறாராப் பேசி...மூஞ்சிய இழுத்துக்கிட்டுப் போனா பொழப்பு நடக்குமாங்கய்யா?” குழைந்தான் தரகு.

“ஹா...ஹா...ஹா..”வென்று வாய் விட்டுச் சிரித்த தேவநாதன், “சரி...சரி...கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு இரு தரகு...நான் போய் ஒரு சின்னக் குளியல் போட்டுட்டு வந்துடறேன்!” சொல்லி விட்டு அன்றைய பேப்பரை எடுத்து தரகரின் கையில் கொடுத்து விட்டு வீட்டின் பின் புறம் நோக்கிச் சென்றார் தேவநாதன்.

பத்தே நிமிடத்தில் சோப் வாசனையுடன் திரும்பி வந்த தேவநாதன், தான் வழக்கமாய் அமரும் ஈஸி சேரில் அமர,

கையில் காஃபி டம்ளருடன் வந்து நின்றாள் பார்வதி.

“தரகரய்யா...ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க...மொதல்ல காஃபி குடிச்சிட்டு அப்புறமாய்ப் பேசுங்க என்றாள் பார்வதி காஃபி டம்ளரை அவரிடம் நீட்டியவாறே.

“ஹி...ஹி..”என்ற அசட்டுச் சிரிப்புடன் அதை வாங்கிப் பருகிய தரகர், காலி டம்ளரை பார்வதியிடமே திருப்பித் தந்து விட்டு, தன் தொழில் பேச்சைத் துவக்கினார். “அய்யா...மூணு மாசத்துக்கு முன்னாடி...பல்லடத்திலிருந்து ஒரு வரன் வந்ததே?..ஞாபகமிருக்கா உங்களுக்கு?”

பார்வையை மேலே கொண்டு போய் யோசித்த தேவநாதன், “பல்லடம்ன்னா....லட்சுமி மில்லுல சூப்பர்வைஸரா இருக்கானே அந்தப் பையனா?” மேவாயைத் தேய்த்தபடியே கேட்டார்.

“அதேதான்!...அதேதான்!” அவங்க மறுபடியும் கூப்பிட்டிருந்தாங்க!...நம்ம மூத்த பொண்ணைப் பார்க்க எப்ப வரலாம்னு கேட்கறாங்க!”

“அடடே...”என்று தன் ஆச்சரியத்தைக் காட்டியவாறே அவர் பார்வதியைப் பார்க்க, அவள் பதில் சொன்னாள்,

“ம்ம்...தாராளமா வரச் சொல்லுங்க தரகரய்யா!...இந்த வாரத்திலேயே கூட வரலாம்!’

“அப்படின்னா....”என்று இழுத்த தரகர், “ம்ம்ம்...அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரச் சொல்லிடலாமா?”

“ஞாயிற்றுக்கிழமைன்னா எல்லோருக்கும் வசதி!...அப்பவே வரச் சொல்லிடுங்க தரகரய்யா!”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.