பூர்விக்கு வீட்டுக்குள் போக மனம் வரவில்லை. தோட்டத்தில் அமர்ந்திருந்தாள். அவளுடைய கை விரல்கள் கோர்ப்பதும் பிரிப்பதுமாக இருந்தது. அவளுடைய இதயம் நடு நடுங்கி கொண்டிருந்தது. திவேஷ் நிறைய ஆண்களுக்கு இருக்கும் சலன புத்தியால் மாறி விட்டான் என்று ஊகம் செய்திருந்தது தவறு. அகதா போல இன்னும் எத்தனை பேர் வந்துப் போனார்களோ? நினைக்கவே நடுக்கமாக இருந்தது.
ஈஷான், நிரவி முக்கியம். திவேஷுடன் ஏட்டிக்கு போட்டி மல்லுக் கட்டுவதாக எதையாவது செய்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது அவசியமா.
இலக்கு எதுவும் இல்லாமல் தன் போக்கில் போன சிந்தனைகளுடன் இருந்த பூர்வி கண்ணில் அது பட்டது.
பெரிய சிலந்தி வலை. கட்டி முடிந்த களைப்பு தெரியாமல் இருக்க ஓய்வெடுப்பது போல சிலந்தி அசையாமல் இருந்தது. அந்த சிலந்தி வலையை பார்க்காமல் வந்து ஒரு சின்ன பட்டாம்பூச்சி அதில் மாட்டிக் கொண்டிருந்தது. பார்க்க மெலியதாக இருக்கும் அந்த சிலந்தி வலைக்கு எவ்வளவு பலம். பட்டாம்பூச்சியால் அந்த வலையை உடைத்து பறக்க முடியவில்லை. சிறைப்பட்ட சிறகை படபடத்துக் கொண்டே இருந்தது பட்டாம்பூச்சி.
பார்த்த காட்சியின் பாதிப்பில் பூர்வி இருதயம் வெளியே வந்து விட்டதைப் போல உணர்ந்தாள். அந்த பயம் ஒரே ஒரு வினாடியே. அதற்கு மேலே யோசிக்காமல் குச்சி எடுத்து பட்டாம்பூச்சி மாட்டி இருந்த இடத்தை சுற்றி இருந்த வலையை அறுத்தாள். எப்படி விடுதலை கிடைத்தது என்று யோசிக்காமல் பட பட என சுதந்திரமாக பறந்துப் போனது பட்டாம்பூச்சி. சிலந்தி கவலைப் பட்டதாக தெரியவில்லை.
திவேஷ் இந்த சிலந்தி. அமைதியாக அவள் பக்கத்திலேயே இருந்து சிலந்தி வலை பின்னி அவளை சிக்க வைத்திருக்கிறான். இந்த வலையில் இருந்து சத்தம் எழுப்பாமல் தப்பி போவது முக்கியம். கோபப் படுவது, கத்துவது ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும். இஷான் நிரவிக்காக அவள் உயிருடன் இருக்க வேண்டும். எப்படியாவது தப்பித்து இந்தியா போய் விட்டால் புதிய வாழ்க்கை தொடங்கலாம். அங்கே வாழ்வதற்கு அவர்கள் மூன்றுப் பேருக்கும் சின்னதாகவாவது பின்பலம் வேண்டும். முயற்சியே செய்யாமல் தோற்று ஓடிப் போக வேண்டாம். அவளுடைய பணத்தை எடுத்துப் போக வேண்டும். முயற்சியாவது செய்து பார்க்க வேண்டும்.
பொறுமையாக புது யோசனைகளை யோசித்தாள். பல பல யோசனைகளில் ஒன்றை தேர்வு செய்தாள். திவேஷ் வீடு திரும்ப காத்திருக்க தொடங்கினாள்.
☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆