This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
அமுதவள்ளி குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டிருந்தப் போது அறையுடைய கதவு சத்தமாக தட்டப் பட்டது.
“எவ்வளவு நேரமா குளிப்ப? சீக்கிரமா வா” – புது பெண் குரல் கதவுக்கு பின்னால் இருந்துக் கேட்டது.
“இதோ வந்துட்டேன்” – பதில் சொல்லி விட்டு யாராக இருக்கும் என்று யோசித்தாள் அமுதவள்ளி.
புடவை கட்டுவது அமுதவள்ளிக்கு தெரியும். ஆனால் நேரம் எடுத்து பொறுமையாக கட்டி பழக்கம். ஏற்கனவே ஒருத்தடவை கதவை தட்டி கூப்பிட்டு விட்டார்கள். இதற்கும் மேலே தாமதம் செய்தால் நன்றாக இருக்காது. அதனால் முந்தானையில் ப்ளீட்ஸ் எடுக்காமல் அப்படியே சுற்றி இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள். ஈரமாக இருந்த தலைமுடியை காயட்டும் என்று விரித்தே விட்டு வைத்தாள். அறையில் இருந்த கண்ணாடியில் கடைசியாக ஒருத்தடவை சரி பார்த்து விட்டு வெளியே சென்றாள்.
ஹால் போல இருந்த அறையில் பானுமதி மட்டும் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தாள்.
“நான் வர லேட்டாயிடுச்சா மேடம்? மன்னிச்சுக்கோங்க. நான் நேரத்தை கவனிக்காம விட்டுட்டேன்” – பண்பட்ட குரலில் பேசினாள் அமுதவள்ளி.
பானுமதி பதில் சொல்லாமல் ஆச்சர்யம் நிறைந்த கண்களுடன் அவளை எடைப் போடுவதுப் போல பார்த்தார். அதற்கான காரணம் புரியாது அமுதவள்ளிக்கு குழப்பமாக இருந்தது.
“என்ன மேடம்? நா--- ன் தப்பா எதையாவது சொல்லிட்டேனா?” – அமுதவள்ளி.
“அதெல்லாம் இல்லை அமுதா. இப்படி உட்காரு” – பானுமதி அவள் அமர்ந்திருந்த குஷன் திவானின் பக்கத்தில் கையை காட்டினாள்.
அமுதவள்ளி சொன்னதை மறுக்காமல் செய்தாள்.
“கதிர் வழில உங்க இரண்டுப் பேருக்கும் நடுவே நடந்த பேச்சை சொல்லிட்டு இருந்தான். அவன் சொன்ன அமுதாக்கும் நான் பார்க்குற அமுதாக்கும் சம்மந்தமே இல்லாததுப் போல இருக்கு” – பானுமதி கேள்வி கேட்காமல் விளக்கம் கொடுப்பதுப் போல சொன்னாள். ஆனால் அவள் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கேள்வி அமுதவள்ளிக்கு புரிந்தது.
“அவர் நடந்துகிட்ட விதத்துக்கு ஏத்த மாதிரி அவர் கிட்ட பேசினேன். நீங்க என் கிட்ட பேசின விதத்துக்கு ஏற்ப உங்க கிட்ட பேசுறேன்” – அமுதவள்ளி தயக்கமில்லாமல் பானுமதி கேட்காமல் விட்ட கேள்விக்கு பதில் சொன்னாள்.
அவள் சொன்னதை கேட்டப் படி அங்கே வந்த இளம் பெண் ஒருத்தி எண்ணெயில் போட்ட கடுகாக துள்ளிக் குதித்தாள்.