பூர்வி லேப்டாப் திரையில் log வின்டோவை திறந்து வைத்திருந்தாள். திவேஷ் அவனுடைய கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும் அது அந்த லாக் விண்டோவில் தெரியும்.
பூர்விக்கு மற்ற விபரங்கள் மேலே ஆர்வம் இல்லை. திவேஷ் டிடி வங்கி கணக்கில் லாகின் செய்வதற்காக காத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அந்தக் கணக்குக்கான அவனுடைய பாஸ்வர்ட் தெரிய வேண்டும். திவேஷ் அந்த அக்கவுன்ட்டில் லாகின் செய்யாமல் இருந்து விட்டால் என்ன செய்வது? பூர்விக்கு பதில் தெரியவில்லை. இரண்டு நாள் காத்திருந்து பார்க்கலாம். இல்லையென்றால் வேறு வழி கண்டுப்பிடிக்க வேண்டும்.
“என்ன அம்மா இது?” அம்மாவிடம் விளையாட வந்த ஈஷான் பூர்வி வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த கருப்பு வின்டோ என்ன என்று புரியாமல் கேள்வி கேட்டான்.
“அது, மம்மி ஒரு கேம் விளையாடுறேன் ஈஷான்.” மகனை தூக்கி முத்தம் இட்டாள் பூர்வி.
புண்பட்டு இருந்த அவளுடைய இதயத்துக்கு ஈஷானின் அருகாமை இதத்தைக் கொடுத்தது.
“அம்மாக்கு ஜுரமா?” ஈஷான் கவலையுடன் கேட்டான்.
“இல்லையே. எதுக்குப்பா கேட்குற?”
“அப்போ எதுக்கு விளையாட மாட்டேறீங்க? சிரிக்க மாட்டீறீங்க?”
பூர்வி குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டாள். ஏமாற்று உறவில் வந்த பிள்ளை என்றாலும் இவனும் நிரவியும் அவளுக்கு மூச்சுக் காற்றைப் போல இன்றி அமையாதவர்கள்.
“ஐ லவ் யூ மம்மி”
“ஐ லவ் யூ டூ ஈஷான். அக்கா எங்கே இருக்கா?”
“அவ ட்ராயிங்க்ஸ் எல்லாம் எடுத்து பேக் செய்றா”
“அக்கா குட் கேர்ள். அம்மாவும் ஈஷானும் உன் திங்க்ஸ் பேக் செய்யலாமா?”
“ஹ்ம்ம்ம். நாம போணுமா மம்மி. இங்கேயே இருக்கலாமே. என் பிரென்ட்ஸ் ஆர்தர், ஜார்ஜ் இந்தியா வரலை”
“தெரியும்ப்பா. இந்தியா போனா ஈஷானுக்கு புது பிரென்ட்ஸ் நிறைய பேர் கிடைப்பாங்க”
“சரி, மம்மி டாடி என் கூட இருந்தா போதும்”
பூர்வியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. இங்கிருந்து போன பிறகும் இதை அவள் எதிர்கொண்டு ஆக வேண்டும். பிஞ்சுக் குழந்தைகளுக்கு பெரியவர்களின் வஞ்சகத்தன்மை புரிய வாய்ப்பு கிடையாது. எடுத்து சொல்லி புரிய வைக்கும் பொறுப்பும் பூர்விக்கு இருக்கிறது.
ஈஷானை தூக்கி கொண்டு அவன் அறைக்கு சென்றாள் பூர்வி. அங்கிருந்த உடைகள், விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தையும் எடுத்து வைத்தாள். எதை கொண்டு செல்வது, எதை எல்லாம் விட்டுப் போவது என்று பிரித்து வைத்தாள்.
கதையை மிகச்சிறப்பாக கையாளுகிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி...