(Reading time: 6 - 11 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 15 - முகில் தினகரன்

ழக்கமான டிரேயில், வழக்கமான காஃபி டம்ளர்களில், வழக்கமான காஃபியை எடுத்துக் கொண்டு, வழக்கம் போல் நிதானமாய் நடந்து சென்று எல்லோருக்கும் விநியோகித்த சுலோச்சனா, வழக்கத்திற்கு மாறாக எல்லோருடைய முகத்திலும் ஒருவித சந்தோஷம் கொப்பளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு யோசனையில் ஆழந்தாள்.

“அம்மா சுலோச்சனா!...மொதல்ல உன்னோட மாமனாருக்கும்...மாமியாருக்கும் குடும்மா!” என்று யாரோ ஒரு பெண்மணி பெரும் சிரிப்புடன் சொல்ல,

“என்னது...இப்பவே அவங்களை மாமனார்...மாமியார் ஆக்கிட்டீங்களா?” இன்னொரு குரல் அதை விடச் சந்தோஷத்துடன் சொல்லி மகிழ,

“பின்னே?...மாப்பிள்ளைப் பையன் தேங்காயை உடைச்சாப்புல “பளிச்”சுன்னு.. “பொண்ணை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!...உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடுகளைப் பண்ணுங்கோ!”ன்னு சொல்லிட்டாரே?...அது போதாதா?...கல்யாணமே முடிஞ்ச மாதிரிதானே?” தரகர் வெற்றிக் களிப்பில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு கூவினார்.

சுலோச்சனாவுக்கு “நடப்பதெல்லாம் கனவா?...இல்ல நிஜமா?” என்று சந்தேகமாயிருந்தது. “என்னடா இது அதிசயத்திலும் அதிசயமாயிருக்கு!...வழக்கமா “போய்ச் சொல்லியனுப்பறோம்!’னு தானே சொல்லுவாங்க...ஆனா இந்த மாப்பிள்ளை இங்கியே...இப்பவே முடிவைச் சொல்லிட்டாரே!...” அவளையும் மீறி அவள் முகத்தில் வெட்கமும், சந்தோஷமும் மாறி மாறி மிளிர்ந்தன.

மனதினுள் தோன்றியிருந்த அந்த உற்சாகத்தின் காரணமாய், வழக்கமாய் ஏனோதானோவென்று இஷ்டமேயில்லாமல் காஃபி விநியோகிக்கும் சுலோச்சனா, இன்று முதன்முதலாக பெண் பார்க்கும் படலத்தைச் சந்திக்கும் இளம் பெண்ணைப் போல் சிரித்த முகத்துடன் விநியோகித்தாள்.

என்றுமில்லாத புதுப் பழக்கமாய், தைரியமாய் மாப்பிள்ளையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். புன்னகைத்தாள்.

பதிலுக்கு அவனும் புன்னைகையைச் சிந்த, பரவசத்தில் திளைத்தாள். கனவுக் குமிழிகள் எங்கிருந்தோ கிளம்பி வந்தன. வெள்ளுடை தேவதைகள் தயாராயினர்.

அவள் வரிசையாக ஒவ்வொருவரிடமும் சென்று காஃபி டிரேயை நீட்ட, எல்லோருமே சிரித்த முகத்துடன் எடுத்துப் பருகினர். ஆனால், சம்பூர்ணம் மட்டும் “ப்ச்”என்று அலட்சியம் காட்டி விட்டு, தலையை இட, வலமாக ஆட்டி மறுத்ததோடு அல்லாமல், “வெடுக்”கென்று முகத்தையும் வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

சுலோச்சனா “பொசுக்” கென்று முகம் சுண்டிப் போனாள்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.