இனியா வேலை முடிந்து வீட்டிற்கு சென்றாள்.
அவள் வீட்டிற்குள் செல்லும் போதே அபி, “சித்தி என்று ஓடி வந்தாள”;. இனியா அபியை தூக்கிக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.
“சித்தி தாத்தா ஊரில் இருந்து வந்துட்டாங்க. எனக்கு நிறைய பொம்மை வாங்கிட்டு வந்திருக்காங்க தெரியுமா” எனக் கூறினாள்.
“ஓ! அப்படியா! சரி செல்லம”; என்பதோடு இனியா நிறுத்திக் கொண்டாள்.
இனியா நேராக சமையல் அறைக்கு சென்று, “அம்மா எனக்கு ஒரு காபி” எனக் கேட்டாள்.
அவள் தாயோ, “அப்பா வந்து விட்டார் இனியா” எனக் கூறினாள்.
அதற்குள் இடைபுகுந்த அபி “பாட்டி நான் சித்திட்ட தாத்தா வந்திருக்காரென்று சொல்லிட்டேன் பாட்டி” எனக் கூறினாள்.
இனியாவை அவள் தாய் முறைத்து விட்டு, “அபி சொல்லியும் நீ போய் அப்பாவை இன்னும் பார்க்கலை இல்லை” என வினவினாள்.
இனியா அதற்கு பதிலளிக்காமல், “அம்மாவென்றால் பிள்ளையை கொஞ்சுவாங்கனு தான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அம்மா, நீ மட்டும் என்ன எப்போது பார்த்தாலும் முறைச்சிக் கொண்டே இருக்கிறாய்” எனக் கூறினாள்.
லட்சுமியோ, “பேச்சை மாற்றுவதற்கு உன்னிடம் தான் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் ஏன் அப்பாவை போய் பார்க்காமல் இருக்கிறாய். முதலில் அதற்கு பதில் சொல்” எனக் கேட்டாள்.
“என்னம்மா நீ தலை வலிக்கிறது. ஒரு காபி உன் கையால் வாங்கி குடித்து விட்டு போய் பார்க்கலாமென்று இருந்தேன். அதற்குள் என்னை இப்படி வருத்தெடுக்கிறாயே”
“சரி சரி காபி போட்டு தரேன். காபி குடித்து விட்டு உடனே போய் அப்பாவை பார்க்கணும். சொல்லிட்டேன். அப்படி இல்லாம அபிக்குட்டி கூட விளையாட போய் விடக் கூடாது” எனக் கண்டித்து மகளிடம் காபியை தந்தாள்.
“சரிம்மா. உன் கிட்ட ஒரு வாய் காபி வாங்கி குடிக்க நான் எவ்வளவு போராட வேண்டியிருக்கு. குடிச்சிட்டு போய் பாக்கிறேன்” என கூறி அன்னை கொடுத்த காபியை வாங்கி பருகினாள்.
இனியா டீவியை போட்டு சேரில் அமர்ந்தவாறே பாட்டுக் கேட்டுக் கொண்டே காபியை பருகினாள்.
இனியா காபியை பருகி முடிக்கும் முன்னரே அவள் தந்தையே மாடியில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.
இனியா திரும்பி தந்தையை பார்த்து, “வாங்கப்பா, எப்போது ஊரில் இருந்து வந்தீர்கள்” எனக் கேட்டாள்.
“நான் மதியமே வந்துவிட்டேன்மா. நீ மருத்துவமனையிலிருந்து வந்துவிட்டாயென்று அபிக்குட்டி சொல்லுச்சு. அதான் நானே கீழே இறங்கி வந்துட்டேன். ஒரு மாசம் உங்களை எல்லாம் பார்க்காம ரொம்ப கடினமா இருந்துச்சி. நல்ல வேலை நான் வரும் போது ஜோதி, மாப்பிள்ளை, அபி எல்லாருமே இருக்காங்க. எல்லாரையும் பார்த்தது திருப்தியா இருக்கு” என்று கூறினார்.
இனியாவிற்கு பதில் மொழி என்ன கூறுவதென்றே தெரியவில்லை. மருத்துவமனையில் யார் என்ன என்று தெரியாதவர்களிடம் எல்லாம் பேசிக் கொண்டே இருப்பவளுக்கு இங்கு சொந்த தந்தையிடம் இரண்டு வார்த்தை முழுசாக பேச முடியவில்லை.
ஏதோ பேச வேண்டுமே என்று “மாமாவை பார்த்தீங்களா அப்பா” என வினவினாள்.
“பார்த்துட்டேன் டா. நான் வரும் போது மாப்பிள்ளை வீட்டுல தான் இருந்தார். நாங்க எல்லாம் ஒன்றாக தான் சாப்பிட்டோம். இவ்வளவு நேரம் என் கூட தான் பேசிட்டிருந்தார். இப்ப தான் வெளியே கிளம்பினார்.”
“சரிங்கப்பா” என கூறி விட்டு இனியா அமைதியாக இருந்தாள்.
இனியா ஏதாவது பேசுவாளா என அவள் தந்தை ராஜகோபால் அவள் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் இனியாவோ பேசினால் தானே.
இதை பார்த்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு தான் வருத்தமாக இருந்தது. ஒரு தந்தை மகள் பேசி கொள்வதை மாதிரியா இவர்கள் பேசி கொள்கிறார்கள். ஏதோ பேச வேண்டும் என்ற கடமைக்கு பேசி கொள்வதை போல் அல்லவா பேசி கொள்கிறார்கள். இன்னும் கணவன் முகத்தை பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மகள் வாய் திறந்து ஏதாவது பேச மாட்டாளா என ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
லட்சுமிக்கு இனியாவின் மேல் தான் கோபமாக வந்தது. இவள் புரிந்து கொள்ளவே மாட்டாளா. இவளை என்ன தான் செய்வது என்று எண்ணினாள்.
லட்சுமி சென்று அங்கு நிலவிருந்த மௌனத்தை கலைத்தாள். “இனியா தலை வலிக்கிறது என்று கூறினாயே. நீ போய் உன் அறையில் படுத்துக் கொள். நான் ஜோதியிடம் உனக்கு மாத்திரை கொடுத்து அனுப்புகிறேன”; என்றாள்.
அவள் தந்தை, “என்னம்மா தலை வலியா, முன்னமே சொல்லவில்லையே, நான் வேறு இன்னும் பேசி உன் தலை வலியை அதிக படுத்திவிட்டேன் போல. போய் ஓய்வு எடுத்துக் கொள்” என கூறினார்.
இனியாவும் இங்கிருந்து தப்பித்தால் போதும் என்பது போல எழுந்து மாடிக்கு தன்னறைக்கு சென்றாள்.
தன்னறைக்கு சென்ற இனியா ஆடையை மாற்றிக் கொண்டு முகம் கழுவி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
உடனே கதவை தட்டிவிட்டு அவள் சகோதரி வந்து மாத்திரையை இனியாவிடம் கொடுத்தாள்.
மாத்திரையை கொடுத்துவிட்டு “நிஜமாகவே தலை வலியா இனியா” என வினவினாள்.
இனியா தமக்கையிடம் பொய் சொல்ல விருப்பமின்றி “ஏனக்கா இவ்வாறு கேட்கிறாய”; என கேட்டாள்.
“நீ நேரடியாக பதில் கூறாமல் எதிர் கேள்வி கேட்பதிலிருந்தே நீ பொய் சொல்கிறாய் என்பது தெரிகிறது” என கூறிவிட்டு, “ஏன் இனியா இவ்வாறு செய்கிறாய். அப்பா மதியம் வந்ததிலிருந்து நீ எப்போது வருவாய் என்று எத்தனை முறை கேட்டுவிட்டார் தெரியுமா? உன்னை மருத்துவமனைக்கே சென்று அழைத்து வரட்டுமா என்று வேறு கேட்டார். அம்மா தான் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.
“அவர் உன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் தெரியுமா. அதுவும் நம்மை பார்க்காமல் ஒரு மாதம் பிரிந்து வந்தவரிடம் நீ முகம் கொடுத்து கூட பேசாமல் தலை வலி என்று இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறாய். உன்னை என்ன தாய் செய்வது.”
“அக்கா நான் என்ன செய்யட்டும். என்னால் அவரிடம் நார்மலாக பேச இயலவில்லை. நான் என்ன செய்வது” என கேட்டாள்.
“என்னை ஏனடி கேட்கிறாய். ஊருக்கே ஆலோசனை தரும் சைக்காடிஸ்டாக இருக்கிறாய். நீ ஏன் நான் என்ன செய்வது என்று என்னிடம் கேட்கிறாய்” என கோபமாக கேட்டாள்.
“எல்லாம் தெரிந்தும் நீ இவ்வாறு பேசினால் நான் என்ன செய்வது, நான் அவர் வருந்தும் படி ஏதும் பேசினேனா? அப்படி நான் பேசி இருந்தால் நீ என்னை குற்றம் சொல்வதில் நியாயம் இருக்கும”; என்றாள் இனியா.
“நீ வேண்டுமென்றே இவ்வாறு பேசுகிறாய். ஒரு மாதம் கழித்து வந்த மனிதரிடம் இவ்வாறு தான் பேசுவார்களா இனியா. உனக்கு அப்பாவை பிடிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. உனக்கு அவரை பிடிக்கும் என்று எனக்கு தெரியும். நான் உன் டைரியை படித்திருக்கிறேன் இனியா. அதில் நீ அப்பாவை பற்றி எழுதியிருக்கிறாய்” என்றாள் ஜோதி.
இனியா ஒரு நிமிடம் திகைத்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை.