(Reading time: 20 - 39 minutes)

னியா ஓரளவிற்கு அவர்கள் என்ன கூறுவார்கள் என்று எதிர்பார்த்து தான் இருந்தாள். திரும்ப அவளை சந்தர்க்கு வந்து ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்வார்கள் என்று எண்ணினாள். இதெல்லாவற்றையும் விட அவள் மனதில் ஓடியது இளவரசன் தான் இவர்களை அனுப்பி இருப்பானா இல்லை இவர்களாக வந்திருப்பார்களா. இவர்களாக வந்திருந்தால் இளவரசனிற்கு இவர்கள் இங்கு வந்தது தெரிந்திருக்குமா என்று அவள் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

அவன் வேறு தான் மேல் கோபமாக சென்றானே அவனா அனுப்பி இருப்பான் என்று மனதை போட்டுக் குழம்பிக்கொண்டிருந்தாள்.

இனியா தலையை உலுக்கிக் கொண்டு இப்படி தானாக குழம்பிக் கொண்டிருப்பதை விட அவர்கள் சொல்வதை கேட்டால் ஒரு வேளை தன் கேள்விக்கு விடை தெரியக் கூடும் என்று எண்ணி அவர்களின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள்.

ராஜலட்சுமி பேச ஆரம்பித்தார்.

இப்ப நாங்க இருக்கற அளவுக்கு வசதி என் கல்யாணத்தப்ப இல்லை. எங்க வீட்டுலயும் இல்ல. என் வீட்டுக்காரர் வீட்டுலயும் இல்ல. என் வீட்டுக்காரர் ஊரு தான் திருநெல்வேலி. எங்க அப்பா கவர்மன்ட் வேலை பாத்துட்டு இருந்தாரு. என்ன காலேஜ் அங்க தான் சேர்த்து இருந்தாங்க. ஆனா எனக்கு முதல் வருஷம் முடியரதுக்குல்லவே எங்கப்பாவை வேற ஊருக்கு மாத்திட்டாங்க. என்ன இடையில வேற காலேஜ்ல சேர்க்க முடியாதுன்னு என்ன அங்கேயே ஹாஸ்டெல்ல சேர்த்துட்டாங்க. அங்க என் வீட்டுக்காரரோட சித்தப்பா பொன்னும் படிச்சா. அவளை விடறதுக்காக அவரு காலேஜ்க்கு வர போக நாங்க ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சிட்டோம்.

நாங்களும் வீட்டுக்கு தெரியாம காதலிச்சிட்டு இருந்தோம். கடைசியா எனக்கு எங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்ச உடனே நான் வீட்டுல சொல்லிட்டேன். எனக்கு ரெண்டு அக்கா. ஒரு தம்பி. பெரியப்பா பசங்க எல்லாம் அதிகம். ரெண்டு அக்காவுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தது.

இதுக்கே நாங்க ஒரே ஜாதி தான். ஆனா நானா அவரை காதலிச்சிட்டேன்ற ஒரே குத்ததுக்காக எங்க வீட்டுல ஒதுக்கல. எங்க அக்காங்க வாழ்க்கை எல்லாம் போய்டும்னு என்னென்னவோ சொன்னங்க. என்னால எதையும் ஒத்துக்க முடியல. கடைசியா நாங்க ரெண்டு பேரும் கல்யாணமே பண்ணிக்கிட்டோம். அதுல இருந்து எங்க வீட்டுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை.

எங்க வீட்டுக்காரர் வீட்டுலயும் அவங்க அண்ணன், அக்கா, தங்கச்சின்னு யாருமே சம்மதிக்கல. ஆனா அவரோட அப்பா மட்டும் வந்து அவர் தலைமையிலையே எங்க கல்யாணத்த நடத்தி வச்சாரு. இத சாக்கா வச்சிக்கிட்டு எங்களுக்கு சொத்துல எதுவும் தரக் கூடாதுன்னு பிரச்சனை பண்ணி எங்களுக்கு எதுவும் தரலை. எங்க மாமா தான் வந்து அவர் கைல இருக்கிற பணம் கொஞ்சம் தந்தாரு.

அந்த பணத்தை வச்சி நிலமும் பெருசா வாங்க முடியாது. அதனால அந்த ஊருல எந்த தொழிலும் பண்ண முடியாதுன்னு முடிவுக்கு வந்து இந்த ஊருக்கு வந்தோம். இங்க வந்து துணிங்களை எல்லாம் மொத்தமா வாங்கி சில்லறையா விக்க ஆரம்பிச்சி பெரிய அளவுல வளர்ச்சி அடைஞ்சி இந்த நிலைமைக்கு வந்தோம்.

ரெண்டு பக்கமும் பிரச்சனைங்கரதால எங்களுக்கு சொந்தம்ன்னு யாரும் வர போக கிடையாது. எங்க மாமா இருந்த வரைக்கும் அவர் எங்க வீட்டுக்கு வர போகன்னு இருப்பாரு. அவரும் போனதுக்கு அப்புறம் எங்களுக்கு சொந்தம்னு யாருமே இல்லாம போய்ட்டாங்க.

இந்த மாதிரி நினைச்சி நாங்க கஷ்ட பட கூடாதுன்னு சந்துரு அப்பா எப்பவுமே சிரிச்சி கலாட்டா பண்ணிக்கிட்டு இருப்பாரு. அவர் இருக்கற இடம் எப்பவுமே கலகலன்னு இருக்கும். நாங்க நாலு பேரும் எங்களுக்கு யாரும் இல்லைன்னு நினச்சி பார்த்ததே இல்ல. அவர் அந்த மாதிரி எங்களை பாத்துக்கிட்டார்.

ஸ்கூல் லீவ் விட்டா எல்லா பசங்களும் அவங்கவங்க பாட்டி தாத்தா வீட்டுக்குனு போகும் போது இவர் எங்கள பாமிலியோட எங்கயாச்சும் டூர் கூட்டிட்டு போவாரு. பசங்களுக்கு யாரும் இல்லன்ற எண்ணமே வரக் கூடாதுன்றதுல எல்லாத்தையும் யோசிச்சி யோசிச்சி செய்வார்.

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் இந்த சந்தோசம் எல்லாம் எங்க கூட இருந்துச்சி. ஆனா சந்துரு அப்பா திடீல் ஹார்ட் அட்டாக்ல இறந்ததுக்கு அப்புறம் எல்லாம் தலைகீழ மாறிடுச்சி. அவர் இறந்த செய்திய கேட்டு வந்த சொந்தங்களும் எல்லாம் முடிஞ்ச அளவுக்கு சுருட்ட தான் பாத்தாங்க. எங்களுக்கு ஆறுதல் சொல்ல கூட ஆளே இல்ல. பெரியவன் அப்ப MBA படிச்சிட்டு இருந்தான். சின்னவன் அப்ப தான் காலேஜ் சேர்ந்து இருந்தான்.

வீட்டுல இருந்த சந்தோசம் அப்படியே துடச்சி எடுத்த மாதிரி காணாம போய்டுச்சி. யாருக்கு யாரு ஆறுதல் சொல்றதுன்னே தெரியல. எங்க சொந்தக்காரங்கனு வந்தவங்களும் சரி, எங்களுக்கு தொழில்ல தெரிஞ்சவங்களும் சரி எல்லாரும் ஏமாத்தவே பாத்தாங்க. இதுல யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கன்னு தெரிஞ்சிக்கவே அப்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. அப்பா, அதுல இருந்து மீண்டு வரர்துக்குள்ள என் பெரிய பையன் ரொம்ப கஷ்டப் பட்டுட்டான்.

எனக்கோ என் சின்ன பையன கவனிச்சி அவன அந்த கஷ்டத்துல இருந்து வெளிய கொண்டு வரர்துக்கே ரொம்ப கஷ்டமாய்டுச்சி.

நானும் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சின்னு பார்த்தா, அப்புறம் தான் அப்படி எல்லா பிரச்சனையும் முடியலன்னு எனக்கு தெரிஞ்சுது.

அப்ப நிறைய பேர் நம்பிக்க துரோகம் பண்ணதால என் பெரிய பையன் யாரையுமே நம்பாம போய்ட்டான். யார பாத்தாலும் சந்தேகம் தான். வரவங்க நல்லவங்களா இருந்தாலும் அவன் இப்ப எல்லாம் நம்பறதே இல்ல.

என் சின்ன பையனால அவங்க அப்பா போனத தாங்கிக்கவே முடியல. அவன மீட்டு கொண்டு வரர்தே பெரிசா போய்டுச்சி.

முன்னாடி என் வீட்டுல இருந்த சந்தோஷம் என் வீட்டுல மறுபடி வரவே இல்ல. நானும் அதுக்காக என்னென்னவோ பண்ணி பாத்துட்டேன். ரெண்டு பேருமே என் வழிக்கு வரவே இல்லை.

சின்னவன் ஒரு டைம் சந்தோசமா பேசுவான். இன்னொரு டைம் முகத்தை உம்முன்னு தூக்கி வச்சிப்பான். இதுல கொஞ்ச நாளைக்கு முன்னாடி லவ் பண்றேன்னு வந்து சொன்னான். அவன் முகத்துல இருந்த சந்தோசம் பார்த்து நானும் பொண்ணுக்கு வசதி இல்லனாலும் பரவால்ல. நல்ல பொண்ணா இருந்தா மட்டும் போதும்னு சொல்லிட்டேன்.

ஆனா என்ன பிரச்சனைன்னு தெரியல. சந்துரு பாய்சன் குடிச்சிட்டான். பெரியவன் அந்த பொண்ணு நல்ல பொண்ணு இல்லன்னு சொல்றான். சின்னவன் அவளை மறக்க முடியாம தவிக்கிறான். அவங்க அப்பா போனப்ப எப்படி இருந்தானோ இப்ப அப்படி தான் இருக்கான் என்று சொல்லி விட்டு இனியாவின் முகத்தை பார்த்தார்.

இனியாவிற்கோ எங்கே அவர் அந்த பெண் ஸ்வேதா தான் என்று சொல்லி விடுவாரோ என்று ஒரே பயமாக இருந்தது. அவள் முகத்தில் இருந்து அதைக் கண்டு கொண்டாரோ என்னவோ ராஜலட்சுமி அந்த பெண்ணை பற்றி அதற்கு மேல் பேசவில்லை.

“இனியா சந்துரு விசத்த குடிச்சி ஹாஸ்பிடல்ல இருந்த அப்ப எனக்கு எல்லாம் சரி ஆகிடும் எல்லாரும் என்னைக்காவது முன்னாடி இருந்த மாதிரி சந்தோசமா இருப்போம்னு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் போய்டுச்சி. நான் ரொம்ப உடஞ்சி போயிட்டேன்ம்மா. ஆனா அவன் உன் கிட்ட பேசின கொஞ்ச நேரத்துலையே நல்ல நார்மலா பேச ஆரம்பிச்ச உடனே நான் எவ்வளவு சந்தோஷ பட்டேன் தெரியுமா”

“அதுவும் அன்னைக்கு என் வீட்டுல நீங்க மூணு பேரும் பேசிக்கிட்டும் சிரிசிக்கிட்டும் இருந்தத பார்த்து எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்தது தெரியுமா”

“என் வீட்டுல அந்த பழைய சந்தோஷத்த உன்னால மட்டும் தான் வர வைக்க முடியும்னு நான் முழுசா நான் நம்பறேன். எனக்கு உதவி செய்வியா இனியா” என்று கிட்டத்தட்ட மன்றாடும் குரலில் வினவினார் ராஜலட்சுமி.

இனியாவிற்கு அவரின் மனநிலைமை நன்றாக புரிந்தது. ஆனால் அவளால் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக ஒன்றும் பேச இயலவில்லை.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இனியாவின் தாய் லட்சுமிக்கே மனம் கலங்கியது. எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து விட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார்களே என்று.

இனியா பேசாமல் இருந்த தருணத்தில் லட்சுமியே “என் மகள் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வாள். நீங்கள் கவலையே படாதீர்கள்.” என்று வாக்களித்தாள்.

இனியா அப்போதும் பேசாமல் இருந்தாள்.

அதை கவனித்த லட்சுமி “என்னடி பேசாமல் இருக்கிறாய். அவர்கள் எவ்வளவு சொல்கிறார்கள். நீ என்னவோ பேசாமல் இருக்கிறாய். சரி என்று சொல்” என்றார்.

“சரி ஆன்ட்டி. சந்துருவை மாத்த வேண்டியது என் பொறுப்பு. நீங்க இனிமே அதை பத்தி கவலையே படாதீர்கள்” என்று வாக்களித்தாள் இனியா.

“இனியா சந்துருவை மட்டும் இல்லம்மா என் பெரிய பையனையும் நீ தான்மா கொஞ்சம் மாத்தணும்.  அவன் யார் கிட்டவும் உன் கிட்ட பேசற அளவுக்கு பேச மாட்டான். சந்துருவோட நிலைமையை மனசுல வச்சி, அதுவும் சந்துரு உடனே உன் பேச்ச கேட்கறத பார்த்து இளவரசனுக்கு உன் மேல ஒரு மரியாதை வந்துடுச்சி. அதனால தான் உன் கிட்ட இத கேட்கறேன். அவன எப்படியும் வேற ஒரு சைக்காட்டிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போக முடியாது. உன் கிட்ட அவன் நார்மலா பேசறதால அவனுக்கு கவுன்செல்லிங் குடுக்கற பீலிங்கே இல்லாம அவன மாத்த முடியும். நீ என்னம்மா சொல்ற.”

“நான் என்னால முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்றேன் ஆன்ட்டி. அவர் கிட்ட நான் ஒரு டைம் நல்லா பேசினா இன்னொரு டைம் சண்ட வந்திடுது. அதனால என்னால கண்டிப்பா முடியும்னு எல்லாம் சொல்ல முடியாது. ஆனா முயற்சி செய்றேன்” என்றாள்.

ராஜலட்சுமியோ பரிதாபமாக பார்க்க

இனியாவின் தாய் லட்சுமியோ “என்ன இனியா இப்படி பேசுகிறாய். சண்டை வந்து விடுகிறது என்று இவ்வளவு ஈசியாக சொல்கிறாய். இது நாள் வரை நீ எப்படி பேசினாயோ. அது போகட்டும், இனிமேல் அவருக்கும் நீ கவுன்செல்லிங் கொடுக்க போகிறாய் என்றால் நீ எப்படி அவரிடம் சண்டை போடுவது போல் பேசுவாய். இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள். நீயே இவர்களை பார். எந்த அளவு இறங்கி வந்து அவர்களின் குடும்ப பிரச்சனையை நம்மிடம் சொல்கிறார். நீ என்னடாவென்றால் நம்பிக்கையாக ஒரு வார்த்தை சொல்லவில்லையே” என்று கோபமாக கேட்டார்.

“சரி அம்மா. நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த பிரச்சனையை விடுங்கள். அவர்களுக்கு காபி தவிர வேறு எதுவும் தரவில்லையே. வேறு லைட்டா டிபன் மாதிரி ஏதும் தர ஐடியா இல்லையா” என் வினவினாள்.

“இதோ இதோ மறந்தே போய் விட்டேன்” என்று எழுந்தார் லட்சுமி.

இனியா மனதிற்குள் அப்பா தப்பித்தேன் என்று நினைத்துக் கொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.