தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 13 - தேன்மொழி
கேஸ் ஃபைல் - 02 - குற்றம் புரிந்தவர்... !
பங்களா உள்ளே நுழைந்த வினோதன், தேன், இருவருமே அசந்துப் போய் வாய் பிளந்தார்கள்.
பங்களா வெளியே பிரமாண்டமாக இருந்தது என்றால் வீட்டினுள் அதி பிரமாண்டமாக இருந்தது!!! மார்பில் பதித்த சுவர்களும், வழுக்கும் தரையும், அங்காங்கே அழகாக மாட்டி வைக்க பட்டிருந்த அழகிய ஓவியங்களும்... கண்ணை கவரும் விளக்குகளும் அந்த வீட்டையே புதிய உலகமாய் காட்டின.
“திலீப் இது எத்தனையாவது தடவை? இன்னும் நீங்க எனக்கு உண்மையை சொல்லலை! யாருக்கு இப்படி அப்பப்போ ஆயிரம், லட்சம்ன்னு பர்சனல் அக்கவுன்ட்டுல இருந்து பணம் எடுத்துக் கொடுக்குறீங்க?”
சீறி பாயும் கோபமான பெண் குரல் காற்றினில் தவழ்ந்து எங்கிருந்தோ வந்து மெல்லியதாக அவர்கள் இருவரின் காதில் விழுந்தது.
அடுத்து ஒலித்தது ஆண் குரல் என்பதற்கு மேல் என்ன எது என்று இருவருக்கும் புரியவில்லை.
“வாங்க சார், நீங்க தான் க்ரைம் பிரான்ச்ல இருந்து வந்திருக்க போலீசா?”
அந்த குரல் தேன், வினோதன் இருவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அங்கே ராஜசுலோச்சனா நின்றிருந்தார்.
எத்தனையோ முறை புகைப்படங்களில் பார்த்த முகம் என்ற போதும் நேரில் பார்க்கும் போது கை எடுத்து கும்பிட வைக்கும் தோற்றம். அந்த முகத்தில் இருந்த சாந்தம் எவரையும் கவரும்!
அத்தனை பெரிய வீட்டில் இத்தனை எளிமையாக இருக்க முடியுமா என்று எண்ண வைக்கும் விதத்தில் மிகவும் எளிமையாக இருந்தார்.
ராஜசுலோச்சனாவின் நன்கொடைகள், தான தர்மங்கள், இலவச பள்ளி, மருத்துவமனை