அனைவரையும் பார்த்து பொதுவாக, “எவ்ரிதிங் சவுண்ட்ஸ் குட். என்னோட அன்ப்லான்ட் ஆப்சென்ஸ் டைம்ல நீங்க எல்லோரும் அட்ஜஸ்ட் செய்து நல்லா கோப் அப் செய்திருக்கீங்க. அதுக்கும் என்னோட தேங்க்ஸ்,” என பாராட்டிய நித்தேஷ், தொடர்ந்து கயல்விழி பக்கம் பார்த்து, “எஸ்பெஷலி திடீர்னு என் ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ் எடுக்க வேண்டி வேண்டி இருந்த கயல்விழிக்கு ஒன் பிக் தேங்க்ஸ்,” என்றான்.
முன்பு எப்போதும் வேண்டுமென்றே கயல் கயல் என்று அழைத்துக் கொண்டிருந்த நித்தேஷ் இன்று மட்டும் ஒரு நூறு தடவை கயல்விழி என்று சொல்லி விட்டான். அவன் வேண்டுமென்றே அப்படி அழைக்கிறான் என்பது கயல்விழிக்கு நன்றாகவே புரிந்தது. அதனால் அவள் அதை கண்டுக்கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
அவர்கள் இருவரும் இதுவரைக்கும் நேரடியாக பேசிக் கொள்ள வாய்ப்பு எழவில்லை. இந்த டீம் மீட்டிங் முடித்ததும் பேச வேண்டி இருக்கும் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது.
அதற்கு ஏற்றார் போல, மீட்டிங் முடியும் நேரத்தில், “கயல்விழி, ஒரு தர்ட்டி மினிட்ஸ் நாம பேசி மீதி விஷயத்தையும் சாக் அவுட் செய்து முடிச்சிடலாமா?” என்று அவளிடம் கேட்டான் நித்தேஷ்.
இவனை பற்றி சரியாக தான் புரிந்து வைத்திருக்கிறாள் என தனக்கு தானே சிலாகித்துக் கொண்ட கயல், “ஓகே!” என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்.
நித்தேஷ் பதிலுக்கு புன்னகை செய்ய, கயல்விழி கண்ணுக்கு அவன் விழிகளில் தெரிந்த கூடுதல் மலர்ச்சி தப்பவில்லை.
நித்தேஷின் கண்கள் அவள் பக்கம் வரும் போதெல்லாம் பளிச்சிடுவதாக தான் அவளுக்கு தோன்றியது. அது அவளின் பிரமையா, உண்மையா என்று அவளால் உறுதியாக சொல்ல முடியவில்லை.
மீட்டிங் முடிந்து ஒவ்வொருவராக கிளம்பிப் போனார்கள். கயல்விழி மட்டும் அங்கேயே அமர்ந்திருந்தாள்.