“ராஜாவா? அந்த காணாம போன பையனோட கையெழுத்தா இது?” சக்தி ஆவலுடன் கேட்டாள்.
“ஆமா, அவனோட அப்பா மருந்து சீட்டு எழுதுற மாதிரி தான் நானும் எழுதுவேன்னு வேணும்னே கோழிக்கிறுக்கலா இப்படி தான் எழுதுவான்.”
“ஏன் பாட்டி, அந்த ராஜாவோட போட்டோ ஏதாவது இருக்கா?”
“இருக்கு. உள்ளே வச்சிருக்கேன். அய்யா, அம்மா, ராஜா காணாம போனப்போ போலீஸ் பத்திரிக்கைன்னு இங்கே வீட்டுல ஆளுங்களா வந்து குவிஞ்சாங்க. அப்போ பத்திரப்படுத்த எடுத்து வச்சேன். நீ உளி வா நான் காட்டுறேன்!”
அதற்கு மேல் சக்தி வீட்டிற்குள் செல்ல மறுக்கவில்லை. பர்வதத்தை தொடர்ந்து சென்றாள்.
பெரிய லாக்கர் போல இருந்த இடத்தில் இருந்து, பயபக்தியுடன், நிறைய கட்டாக இருந்த போட்டோக்களை கையில் எடுத்தார் பர்வதம்.
ஊரில் எல்லோரும் பணம், நகை என சேர்த்து வைக்கும் லாக்கரில் பர்வதம் போட்டோக்களை வைத்திருந்தது அந்த குடும்பத்தின் மேலே அவர் வைத்திருக்கும் மரியாதையை எடுத்துக் காட்டியது.
லாக்கரில் இருந்து எடுத்த போட்டோக்களில் தேடி ஒரு படத்தை எடுத்து சக்தியிடம் கொடுக்காமல், அவள் பார்க்குமாறு அவள் பக்கம் நீட்டினார் பர்வதம்.
“இது தான் ராஜா. தினமும் இந்த போட்டோக்களை எடுத்துப் பார்ப்பேன். அவங்க ஞாபகமா என் கிட்ட இருக்குறது இதெல்லாம் தான்.“
பாட்டியிடம் போட்டோ கேட்டு வாங்குவது ஈசி இல்லை என்பதால் தன் மொபைலை எடுத்து அந்த போட்டோவை இரண்டு க்ளிக் செய்தாள் சக்தி.