“அதெல்லாம் சும்மா நமக்காக அவன் காமிக்குற ஷோ ம்மா... இப்போ நீங்களும், அப்பாவும் சொன்னதுல பாரதியை விடவும் அதிகமா சந்தோஷப் படுறது விவேக் தான்...” என தம்பியின் விஷயத்தை போட்டு உடைத்தான் நிரஞ்சன்.
எல்லோரும் சிரிக்கவும்,
"சரிம்மா நானே பாரதியை காலேஜ்ல இருந்து பிக்கப் செய்றேன்... " என பொறுப்பை ஏற்றுக் கொண்டு பாரதியை பார்த்தான் விவேக்... அவள் அதற்காகவே காத்திருந்தவளாக, அவன் எப்போதும் செய்வதுப் போல கண் சிமிட்டி சிரித்தாள்.
🌼🌸❀✿🌷
திங்கள் கிழமை காலை அலார சத்தத்தில் கண் விழித்தாள் பாரதி. அவளை அணைத்தப் படி படுத்து தூங்கி கொண்டிருந்த விவேக்கிற்கு விழிப்பு வராததுப் போல சத்தம் செய்யாமல் எழுந்துக் கொண்டாள். கல்லூரி செல்ல சுறுசுறுப்பாக குளித்து தயாராகியவள், தூங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். கீழே செல்லும் முன் அவனை எழுப்பி சொல்லிவிட்டு கிளம்புவதா வேண்டாமா என்று ஒரு சில வினாடிகள் தயங்கினாள்... கணவனிடம் சொல்லாமல் கிளம்ப மனம் வராது, விவேக்கின் அருகில் வந்தாள். ஆழ்ந்த தூக்கத்தில் முகம் அமைதியாக இருக்க, வலது பக்கமாக படுத்திருந்தவனை பார்த்தவளுக்கு பார்வையை திருப்ப மனமே வரவில்லை...
ஆனாலும், நேரமாவதை உணர்ந்து, கணவனை மென்மையாக அசைத்து எழுப்பினாள்.
“விவேக்!!!” அவனிடம் அசைவே இல்லை...
“விவேக்... நான் கிளம்பட்டுமா? டைம் ஆச்சு... விவேக்!!!”
கஷ்டப் பட்டு பாதி தூக்கத்துடன் கண்ணை திறந்த விவேக், அவனின் எதிரில் வேலைக்கு செல்ல தயாராகி நின்றிருந்த மனைவியை பார்த்து வாயைப் பிளந்தான்.