அவளையும் மீறி எழுந்த பரபரப்பினால் சற்று தயக்கத்துடன் பவித்ராவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அது அவள் எப்பொதும் அமரும் இடம் தான்... ஆனாலும் இன்று என்னவோ எல்லாமே வித்தியாசமாக தோன்றியது...
பாரதி நாற்காலியில் அமர்ந்தாளோ இல்லையோ, அடுத்த வினாடி, ஒவ்வொருவராக வந்து அவளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களின் பேச்சில் சற்றே மரியாதை கூடி இருப்பதை உணர்ந்தப் போதும், பாரதி அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
ஒருவழியாக அனைவரும் வாழ்த்து சொல்லி நகர்ந்தப் பின், தோழியின் முகத்தைப் பார்த்த பவித்ரா என்ன புரிந்துக் கொண்டாளோ,
“பாரு, ஏன் இந்த டென்ஷன்? ரிலாக்ஸ்...” என்றாள் மென்மையாக.
பவித்ராவின் பேச்சில் சற்று தெளிந்த பாரதி,
“எல்லோரும் என்னையே பார்க்கிற மாதிரி இருக்கு பவி...” என்றாள் மெல்லியக் குரலில்!
“எல்லோரும் உன்னை தான் பார்க்கிறாங்க... லீவிற்கு முன்னாடி சாதாரண பாரதியாக இருந்த நீ, இப்போ இந்த ஊர் இளவரசனோட மனைவி... அப்புறம்... எப்போதும் டைமுக்கு வரும் பாரதி மேடம் இன்னைக்கு இரண்டரை மணி நேரம் லேட்...”
“ஓ பவி, எல்லாம் அவரால் தான்...”
“ஷ்... பாரு! நான் உன் கிட்ட கேள்வியா கேட்டேன்? நீ இன்னைக்கு சீக்கிரம் வந்திருந்தால் தான் ஆச்சர்யம். ஒரு மணி நேரம் லேட்டாக வந்ததால என்ன குறைஞ்சு போச்சு? இந்தா இந்த செமெஸ்டர் டைம் டேபிள். உனக்கு இன்னைக்கு மதியம் தான் க்ளாஸ்... ஸோ ரிலாக்ஸ்... ஃபர்ஸ்ட் டே என்பதால் பிரச்சனை இல்லை... மெதுவா ப்ரிப்பேர் செய்...”
பவித்ரா கொடுத்த டைம் டேபிளை வாங்கிக் கொண்டாள் பாரதி. தோழியிடம் பேசியதில் அவள் மனதில் இருந்த சஞ்சலம், பரபரப்பு எல்லாம் குறைந்துப் போயிருந்தது... மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பினாள்.