“பார்த்தீயா பாரதி, அவங்க மட்டும் அவங்க மகனுக்கு நிக் நேம் வைப்பாங்களாம். உனக்கு விவேக் பேர் வச்சிருக்காருன்னு சொன்னால் அவங்க முகம் போற போக்கைப் பார்த்தீயா...”
“அது தெரிஞ்ச விஷயம் தானே உமா, புதுசா என்ன?”
“அதுவும் சரி தான்... ஆமாம், நீ விவேக்குக்கு பேர் கண்டுபிடிச்சாச்சா?”
“ஒரு பேர் யோசிச்சு வச்சிருக்கேன் உமா. அவர் கிட்ட சொல்லிட்டு அப்புறம் உங்க கிட்ட சொல்றேன்.”
உமா பாரதியை ஆச்சர்யமாகப் பார்த்தாள். வயதில் சிறியவளாக இருந்த போதும், உமா பாரதியை பார்த்து சில, பல விஷயங்கள் இந்த சில மாதங்களில் கற்றுக் கொண்டிருக்கிறாள். என்ன விஷயமாக இருந்தாலும், பாரதி முதலில் சொல்வது அவளின் கணவனிடமாக தான் இருக்கும். அதே போல் எத்தனை நேரம் ஆனாலும் இருவரும் காத்திருந்து ஒன்றாக தான் வீட்டில் இருக்கும் நேரத்தில் உணவு சாப்பிட்டார்கள். எந்த நேரத்திலும், எதற்காகவும் பாரதி விவேக்கை விட்டுக் கொடுக்க மாட்டாள்! கற்பகம் ஒரு சில நேரம் நோகடிப்பதாக ஏதேனும் சொன்னாலும் கூட, பாரதி கண்டுக் கொள்ளாததை போல் விட்டு விடுவாளே தவிர, நன்றாக பேசுகிறாள் என்று உமாவிடம் கூட மாமியாரைப் பற்றி குறைப் பட்டது இல்லை!
🌼🌸❀✿🌷
அன்று இரவு உணவு நேரத்தில், மது பாரதியிடம் அவர்கள் போட்டிருந்த டாப்பிக் லிஸ்ட் பற்றி கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள். பாரதியும் அவளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அதை கவனித்த உமா,
“உனக்கு பொறுமை ரொம்பவே அதிகம் பாரதி!” என மனம் திறந்து பாராட்டினாள்.
“நான் சொல்ல நினைத்தேன், நீ சொல்லிட்ட உமா.” என்றார் நரேந்திரன்.